4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; மனைவியின் பள்ளியில் கணவர் எல்லை மீறல் - சினிமா பாணியில் கைது செய்த போலீஸ்

பிரசுரிக்கப்பட்டது

தனியார் பள்ளியில் படித்துவரும், 4 வயது சிறுமியை அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் இந்த சம்பவம் நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. காவல்துறையின் துரித நடவடிக்கையால், குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டது எப்படி? நடந்தது என்ன?

குற்றம் நடந்ததாக கூறப்படும், தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சேத்துப்பட்டு பகுதியில் உள்ளது. மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 1600 மாணவர் இப்பள்ளியில் படிக்கின்றனர். இப்பள்ளியின் தாளாளர் பிரபாவதி. அவரது கணவர் காமராஜ் ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

தமது மனைவி நடத்தி வரும் தனியார் பள்ளி என்பதால், அங்கு காமராஜ் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், அந்தப் பள்ளியில் யுகேஜி படிக்கும் நான்கரை வயது சிறுமியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாக்லேட் வாங்கி கொடுத்து, ஸ்டோர் ரூமில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார் இவர் என்று தற்போது இவர் புகாருக்கு உள்ளாகியிருக்கிறார். குறிப்பிட்ட சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்படவே, அச்சிறுமியின் பெற்றோர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவிக்கு சிறுநீர்ப் பாதை தொற்று என்று நினைத்து சிகிச்சை அளித்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

மீண்டும் பள்ளிக்கு வந்த சிறுமியிடம் மீண்டும் அதே போல பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் காமராஜ் என்றும் இதனால், சிறுமிக்கு இரத்தக் கசிவோடு மீண்டும் உடல்நிலை பாதித்தது என்றும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமி சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுமியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். மழலை மொழியில் பதில் சொன்னது அக்குழந்தை.

போட்டோ மூலம் அடையாளம்

சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆசிரியர் காமராஜ் மீது, போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி, காவல் ஆய்வாளர் கவிதா ஆகியோர் புகாருக்கு உள்ளான மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் சேகரித்தனர்.

அப்போது, பள்ளியில் இருந்த ஒரு குழு புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி, இதில் உன்னிடம் தவறாக நடந்தவர் யார் என்று போலீசிடம் கேட்டதாகவும், "பள்ளியின் தாளாளர் பிரபாவதியின் கணவரான காமராஜ் என்பவரின் புகைப்படத்தை குழந்தை கைகாட்டியது என்றும், "சாக்லேட் வாங்கி கொடுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டது இவர் தான்" என்றும் அச்சிறுமி அடையாளம் காட்டியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் காமராஜ் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்செந்தூர் முருகனை தரிக்க சென்ற காமராஜ்

இதனிடையே தன் குடும்பத்தாருடன் காமராஜ், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்று இருப்பது தெரியவந்தது.

உடனடியாக, காமராஜர் சென்ற காரின் நம்பரை தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு அனுப்பி காரில் உள்ள நபரை கைது செய்யும் படி திருவண்ணாமலை போலீசார் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, காமராஜை அவரது குடும்பத்தார் முன்னிலையில் எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து காமராஜை அரசுப் பணியில் இருந்து இடைநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த அரை மணி நேரத்தில் காவல்துறை துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டது. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய வழியில் எட்டயபுரத்தில் காமராஜர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் நிலை கண்காணிக்கப்படுகிறது," என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும் குழந்தைக்கு உயரிய சிகிச்சை தேவைப்பட்டாலும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் எனவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கார்த்திகேயன் தெரிவித்தார்.

மனைவியிடமும் விசாரணை

காமராஜ் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவியிடமும் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "வேறு மாணவிகள் யாரும் இதுபோல பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பது குறித்து சக மாணவிகளிடமும் ஆசிரியர்களிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையில் ஏதேனும் தவறு நிகழ்ந்து இருந்தால் நிச்சயம் அதற்குரிய தண்டனை பெற்றுத் தரப்படும்" என தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :