You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வீட்டு வாசலுக்கு வந்த 10 யானைகள்' - வேலைக்குக் கூட வெளியே வர முடியாத நிலையில் கூடலூர் மக்கள்
''சாயங்காலம் ஐந்தரை மணிக்கு வீட்டுக்கு வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தேன். 'யானை யானை' என்று கத்தினார்கள். நான் எழுந்து வீட்டுக்குள் ஓடுவதற்குள் என் முன்னால் வந்துவிட்டது. வேகமாக வீட்டுக்குள் ஓடியதில் கதவில் கை இடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஒரு நொடிதான்...உயிர் போயிருக்கும்!''
தேயிலைத் தோட்டத் தொழிலாளி சுகந்தி, தலையில் வைத்திருந்த தேயிலைச்சுமையுடன் பிபிசியிடம் பகிர்ந்த வார்த்தைகள் இவை.
''சில தினங்களுக்கு முன்பு 10 யானைகள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டன. மாலை 3 மணிக்கு வந்த யானைகள், காலை 7 மணிக்குதான் இங்கிருந்து கிளம்பின. அதுவரை வீட்டை விட்டு வெளியே வரவே முடியவில்லை.''
தன்னுடைய சமீபத்திய அனுபவத்தை விவரித்தார் குழிவயல் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மினி.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் யானை–மனித மோதலும், அதனால் ஏற்படும் மனித உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தொடரும் மனித உயிரிழப்புகளால், வனத்துறைக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன.
காடுகள் துண்டாடப்பட்டிருப்பதே, யானை–மனித மோதலுக்கு அதிகமாகியிருப்பதற்குக் காரணமென்று சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வனத்துறையினரும் அதை ஒப்புக்கொள்கின்றனர்.
கூடலூர் ஜென்ம நிலங்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதே இதற்கு நிரந்தரத் தீர்வு என்று பலரும் கூறும் நிலையில், மனித–காட்டுயிர் மோதலுக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பத்தாண்டுகளாக அதிகரித்துள்ள யானை பிரச்னை
நீலகிரி பல்லுயிர்ப் பெருக்கம் (NBR-Nilgiris Biosphere Reserve), தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களிலுள்ள காடுகளை உள்ளடக்கிய சூழல் முக்கியத்துவமுள்ள வனப்பகுதியாகும். இதனால் இங்குள்ள காட்டுயிர்கள், 3 மாநில காடுகளிலும் பரவியும் இடம் பெயர்ந்தும் வாழ்கின்றன.
வனத்துறையினர் பிபிசியிடம் பகிர்ந்த தகவலின்படி, கடந்த ஆண்டில் நடந்த 3 மாநில ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் 484 சதுர கி.மீ. பரப்பிலுள்ள கூடலூர் வனக்கோட்டத்தில் 120-க்கும் அதிகமான யானைகள் இருக்கின்றன.
வனத்துறையினர் வழங்கும் தரவுகளின்படி, இந்தக் கோட்டத்திலுள்ள 6 வனச்சரகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் யானைகள் தாக்கி சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஆண்டுக்கு 8லிருந்து 10 பேர் இதில் மரணமடைகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் இங்குள்ள காடுகள், தேயிலை மற்றும் காபி தோட்டங்களாலும், குடியிருப்புகளாலும், வணிக கட்டடங்களாலும் துண்டாடப்பட்டுள்ளன.
இதனால் ஒரு மாநில வனப்பகுதியிலிருந்து மறுபகுதிக்கு காலம் காலமாக இடம் பெயர்ந்து வந்த யானைகள், தடம் மாறி குடியிருப்புகளுக்குள் ஊடுருவுகின்றன. அத்தகைய சூழ்நிலையில்தான் யானைகள் தாக்கி மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
கடந்த மே மாதத்தில் பாக்கணா என்ற பகுதியைச் சேர்ந்த மிஷாப் என்ற 14 வயது பள்ளி மாணவர், அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பும்போது யானை தாக்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் அச்சமயத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சமீபகாலமாக இதுபோன்ற மறியல் அடிக்கடி நடந்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, பாதிப்புகளை அறிவதற்காக பிபிசி அங்கு களஆய்வு மேற்கொண்டது.
கூடலூர் வனக்கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு குடியிருப்புகளிலும், காட்டுக்குள் உள்ள பழங்குடியின கிராமங்களிலும் பொதுமக்களை நேரில் சந்தித்துப் பேசிய பிபிசி, வனத்துறையின் கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, இரவில் யானைகளை காட்டுக்குள் அனுப்பும் பணியிலுள்ள குழுக்களுடனும் இணைந்து பயணித்தது. பிதர்காடு பகுதியில், அகழி வெட்டுவதையும் நேரில் கண்டது.
பிபிசியிடம் பேசிய பெரும்பாலான மக்கள், கடந்த 10 ஆண்டுகளில்தான், யானை–மனித மோதல் மிகவும் அதிகமாகியிருப்பதாகத் தெரிவித்தனர்.
கோரஞ்சால் கிராமத்தைச் சேர்ந்த 73 வயதான சதானந்தனின் வீடு, தமிழகத்திலிருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி செல்லும் பிரதான சாலையோரமே உள்ளது.
ஆனால் அங்கேயே யானைகள் அடிக்கடி வந்துவிடுவதாக பிபிசியிடம் தெரிவித்த அவர், ''நான் 60 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறேன். பத்தாண்டுகளாகவே யானைகள் இப்பகுதிக்குள் வருவது அதிகமாகியுள்ளது. சமீபமாக தினமும் இரவு எட்டரை மணிக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, இங்கே அருகில் ரோட்டில் வைத்தே இரண்டு பேரை அடித்துக்கொன்று விட்டது.'' என்றார்.
கூடலூர் வனக்கோட்டத்தில் காடுகளுக்கு அருகிலேயே பழங்குடியின கிராமங்களும், பிற குடியிருப்புகளும் கலந்துள்ளன. தனியார் தேயிலைத் தோட்டங்களும், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துக்குச் சொந்தமான தோட்டங்களும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரவியுள்ளன.
இந்த தேயிலைத் தோட்டங்களுக்கு அருகில் லைன் குடியிருப்பு எனப்படும் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த லைன் குடியிருப்புகளிலும் யானைகள் நடமாட்டம் அன்றாடம் இருப்பதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் தகவல் பகிர்ந்தனர்.
சேரம்பாடியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் வசிக்கும் விஜயலட்சுமி, ''(சில நாட்களுக்கு முன்பு) காலையில் 3 மணிக்கே பக்கத்திலுள்ள ரோட்டுக்கு யானை வந்துவிட்டது. எஸ்டேட் வேலைக்கு ஆட்களைக் கூப்பிட காலையில் வண்டி வந்தபோது, 3 யானைகள் ரோட்டில் நின்றுள்ளன. வீட்டுக்கு அருகிலுள்ள பலா மரங்களில் பழம் பறிக்க யானைகள் வரும். மாலை 7 மணிக்கு மேல் கடைக்குக்கூட போக முடியாது.'' என்றார்.
அதே பகுதியிலுள்ள குடியிருப்பில் வசிக்கும் செல்லம்மாள், "சமீபத்தில் குட்டியுடன் 9 யானைகள் வந்தன. வனத்துறையினர் வந்து வெடி போட்டு துரத்திவிட்டனர். ஆனால் தூரமாகப் போகாது. மீண்டும் இங்கேயே வரும். இரவு 9 மணியாகிவிட்டால் வனத்துறையினர் ''யானை இருப்பதால், வெளியே வராதீர்கள்'' என்று மைக்கில் அறிவிப்பார்கள். நாங்கள் வெளியே வரவே மாட்டோம்.'' என்றார்.
புதுப்பாடியைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளியான சுகந்தி, 2 வாரங்களுக்கு முன்பு, மாலை ஐந்தரை மணிக்கு தன் வீட்டுக்கு அருகில் யானை தன்னைத் தாக்கியபோது மயிரிழையில் உயிர் தப்பியதை பிபிசியிடம் விவரித்தார்.
''சாயங்காலம் ஐந்தரை மணிக்கு வீட்டுக்கு வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தேன். யானை வந்துவிட்டது என்று எல்லோரும் கத்தவும் எழுந்து வீட்டுக்குள் செல்ல எழுந்தபோது என்னுடைய வீட்டுப் பகுதியிலிருந்தே யானை ஓடிவந்தது. பின்னாலேயே ஒரு குட்டியும் இருந்தது. சீறிக்கொண்டு என்னை நோக்கி யானை ஓடி வந்தபோது தப்பிக்க வேகமாக வீட்டுக்குள் ஓடியதில் கையில் அடிபட்டு சிகிச்சை பெற்றேன். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் என்னுடைய உயிர் போயிருக்கும். '' என்றார் சுகந்தி.
கடந்த சில ஆண்டுகளில் தங்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டதாக அங்குள்ள மக்கள் தங்கள் பாதிப்புகளைப் பகிர்கின்றனர்.
யானைகள் மீதான அச்சத்தால் மாலைக்கு மேல் காலை வரை, தங்கள் வீடுகளுக்குள் தாங்கள் 'சிறை வைக்கப்படும் நிலை' ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
காட்டுநாயக்கர் எனப்படும் பழங்குடியின சமுதாய மக்கள் வசிக்கும் குழிவயல் கிராமம், அடர்ந்த காப்புக்காட்டை ஒட்டியே அமைந்துள்ளது. அங்கிருந்து பிரதான சாலைக்கு வரவே ஐந்தாறு கி.மீ. கரடு முரடான மண் சாலையில் வரவேண்டியுள்ளது. அந்தக் கிராமத்துக்கும் பிபிசி குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது.
பிபிசியிடம் பேசிய குழிவயல் கிராமத்தைச் சேர்ந்த மினி, ''சென்ற வாரத்தில் ஒரு நாள் 10 யானைகள் வீட்டுக்கு அருகில் வந்துவிட்டன. மாலை 3 மணிக்கு வந்த யானைக்கூட்டம், மறுநாள் காலை 7 மணி வரை நகரவே இல்லை. அதனால் இரவு முழுவதும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டியிருந்தது. விறகு பொறுக்கவும், குடிநீர் எடுக்கவும் செல்லும்போது யானை எங்கே நிற்கிறது என்றே தெரியாது. திடீரென வந்துவிடும். பயந்து பயந்தே ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.'' என்றார்.
அவரின் கணவர் ராஜா, ''எங்கள் குடியிருப்பைச் சுற்றித்தான் யானைகள் இந்தக் காட்டை கடந்துபோகும். பல நாட்களில் இங்கேயே நின்று விடும். அதனால் 6 மணிக்கு மேல் வெளியே நடக்கவே முடியாது. அதேபோல காலையிலும் சீக்கிரமாக எங்கேயும் கிளம்பிப் போகவே முடியாது. எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதால் யானைகள் நகர்ந்த பின்பே கிராமத்தை விட்டு வெளியேற முடியும்.'' என்றார்.
மாலை 5 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 7 மணி வரை இடைவிடாத பணி
யானைகளை குடியிருப்பு மற்றும் சாலைகளிலிருந்து துரத்தும் பணியை மேற்கொள்ளும் வனத்துறைக் குழுவினர், மாலை ஐந்து மணிக்கே வன அலுவலகங்களில் ஒன்று கூடி, வனச்சரக அலுவலர் அல்லது வனவர் தரும் அறிவுறுத்தலின்படி வெவ்வேறு வாகனங்களில் பல பகுதிகளுக்குப் பிரிந்து செல்கின்றனர்.
இத்தகைய வனத்துறைக் குழுவினருடன் இணைந்து 2 நாட்கள் பிபிசி பயணம் செய்தபோது, மாலை ஆறரை மணிக்கே குடியிருப்பையொட்டிய பகுதிகளில் யானைகள் ஒன்றாக நிற்பதை வனத்துறை ட்ரோன் மூலமாகப் பார்க்க முடிந்தது.
குழுவினர் அங்கு சென்று அவற்றை காட்டுக்குள் துரத்திய சில நிமிடங்களில் வேறு பகுதியிலிருந்து அந்தக் குழுவுக்கு அழைப்பு வந்து அங்கு செல்ல வேண்டியிருந்தது. ஓவேலி, நாடுகாணி, பந்தலூர், பிதர்காடு, சேரம்பாடி, கூடலூர் ஆகிய 6 வனச்சரகங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
நாடுகாணியிலுள்ள வனத்துறையின் மரபியல் பூங்கா (Genepool Eco Park) வளாகத்தில், யானை நடமாட்டத்தைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.
வனக்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் யானை–மனித மோதல் அதிகமாக நடக்கும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள 45 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு, யானைகளின் நடமாட்டம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது.
யானை நடமாட்டம் குறித்துத் தகவல் தெரிவிப்பதற்காக பொதுமக்களை உள்ளடக்கிய வாட்ஸ்ஆப் குழுக்களை வனத்துறை அமைத்துள்ளது. அதைத் தவிர்த்து ஒவ்வொரு வனச்சரகத்திலும் அந்தந்த வனச்சரக அலுவலரின் எண்களும் மக்களிடம் பகிரப்பட்டுள்ளன. பொதுவான இலவச தொலைபேசி எண்ணும் (Toll Free Number 1800 425 4353) அவசர அழைப்புக்கான அலைபேசி எண்ணும் (90803 20002) தரப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை செயல்படும் விதத்தையும், பொதுமக்களிடமிருந்து வரும் அழைப்புக்குப் பின் வனத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் நாடுகாணி வனச்சரக அலுவலர் ரவி பிபிசியிடம் விளக்கினார்.
யானை நடமாட்டம் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு, வயர்லெஸ், அலைபேசி மற்றும் அலாரம் மூலமாக தொடர்ந்து தகவல்கள் வருவதையும் அதன்படி குழுக்கள் அனுப்பப்பட்டு யானைகள் காட்டுக்குள் திருப்பி அனுப்பப்படுவதையும் பிபிசி குழு நேரில் கண்டறிந்தது.
சமீபகாலமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் மட்டுமின்றி, பிற காட்டுயிர்களும் வருவதாக மக்களின் வாழ்வாதாரமே கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார், கொளப்பள்ளி கிராமத்தில் கடை நடத்தும் ரமேஷ்குமார்.
பிபிசியிடம் பேசிய அவர், ''இங்கே 3 தலைமுறையாக நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக யானை, கரடி, சிறுத்தை என்று காட்டுயிர்கள் இங்கே வருவது மிக அதிகமாகிவிட்டது. முன்பு காலை 6 மணிக்கு கடை திறந்து 10 மணிக்குதான் மூடுவோம். வியாபாரம், வருவாய் நன்றாக இருந்தது. இப்போது மாலை 5 மணிக்கே கடையை மூடவேண்டியுள்ளது. காலை 8 மணிக்கு மேல்தான் திறக்க முடிகிறது. வருவாய் பாதியாகக் குறைந்துவிட்டது. இதில் பள்ளிக் குழந்தைகளின் நிலைதான் பரிதாபம்.'' என்றார் ரமேஷ்குமார்.
ஆனால் யானை நடமாட்டம் அதிகமுள்ள கையுண்ணி, கண்ணம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளிகளிலிருந்து யானை நடமாட்டம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்புடன் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கு வனத்துறையினர் உதவுவதை பிபிசி நேரில் கண்டறிந்தது.
இதுபற்றி விளக்கிய சேரம்பாடி வனஅலுவலர் முத்தமிழ், ''இந்தப் பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் பலரும் தனியார் வாகனங்களில் செல்கின்றனர். சில நாட்களில் யானை நடமாட்டம் இருக்கும்போது அந்த வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம். சில நேரங்களில் வனத்துறை வாகனங்களிலும் மாணவர்களை அழைத்துச் சென்று பாதுகாப்புடன் வீடுகளில் இறக்கிவிடுவோம்.'' என்றார்.
கூடலூர் வனக்கோட்டத்தின் இயற்கை அமைப்பு மட்டுமின்றி, அங்குள்ள காலநிலையும் யானை–மனித மோதலில் முக்கியப் பங்காற்றுகின்றன. பிபிசி அங்கு களஆய்வு செய்தபோது, பந்தலூர், தேவாலா, சேரங்கோடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஐந்தடிக்கு முன்பாக உள்ளதே தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருந்தது. இதில் யானைகள் வருவதே தெரியாமல் தாக்கப்பட வாய்ப்புள்ளதையும் உணர முடிந்தது.
இத்தகைய காரணங்களால், வெளியூருக்குச் சென்று தாமதமாகிவிட்டால் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள்தான் வர வேண்டிய கட்டாயம் இருப்பதாகச் சொல்கிறார் சப்பந்தோட்டைச் சேர்ந்த சேரங்கோடு முன்னாள் கிராம ஊராட்சி உறுப்பினர் அம்சா.
பிபிசியிடம் பேசிய அவர், ''இந்தப் பகுதியில் மட்டும் இதுவரை யானை தாக்கி நான்கைந்து பேர் இறந்துள்ளனர். கூடலூர் வனக்கோட்டத்தில் சேரம்பாடி பகுதியில் மட்டுமே 50 யானைகள் எப்போதுமே இருக்கின்றன. வெளியே சென்றவர்கள் மாலை 6 மணிக்குள் வீட்டுக்கு வராவிட்டால் வீட்டிலுள்ளவர்கள் பதற்றமாக வேண்டியுள்ளது.'' என்றார்.
''தேயிலைத் தோட்டங்களுக்கு காலை 8 மணிக்கே வேலைக்குப் போக வேண்டும். ஆனால் தோட்டங்கள், சாலைகளில் 8 மணி வரை யானைகள் நிற்கின்றன. சேரம்பாடி சாலையிலிருந்து சப்பந்தோடுக்கு 3 கி.மீ. வரவேண்டும். நடந்து வரமுடியாது. ஆட்டோ, ஜீப் யாரைக் கூப்பிட்டாலும் யானைக்குப் பயந்து வரமாட்டார்கள். அதனால் மாலையாகி விட்டால் வெளியூரில் தங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.'' என்றார் அம்சா.
யானை உள்ளிட்ட காட்டுயிர்களால் ஏற்படும் பாதிப்புகளால் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள், இங்கிருந்து பணிகளை விட்டு விட்டு சமவெளிகளுக்கு குடிபெயர்வதாகச் சொல்கிறார், சேரம்பாடியைச் சேர்ந்த தனியார் தேயிலை தொழிற்சாலை மேற்பார்வையாளரும், சமூக ஆர்வலருமான காட்டுராஜா.
பிபிசியிடம் பேசிய அவர், ''பத்தாண்டுகளாக காட்டுயிர்கள் வசிப்பிடங்களுக்குள் வருவது அதிகமாகிவிட்டது. யானைகள் தினமும் வருவதால் தொழிலாளிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருக்கிறது. யானைகளால் விவசாயம், வேலை, வருவாய் பாதிக்கப்படுகிறது. வனத்துறை இதற்கு நிரந்தரத் தீர்வு காணாததால் 4 தலைமுறையாக இங்கிருந்த மக்கள் இப்போது சமவெளிக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.'' என்றார்.
கூடலூரில் யானை–மனித மோதல் அதிகமாக நடப்பதற்கு மிக முக்கியக் காரணம், காடுகள் துண்டாடப்பட்டு இருப்பதுதான் காரணம் என்கிறார் ஓசை சூழல் அமைப்பின் நிறுவனர் காளிதாசன்.
பிபிசியிடம் பேசிய அவர், ''சிறிய வனப்பரப்பான கூடலூர் 380-க்கும் அதிகமான துண்டுகளாக பிரிந்துள்ளது. இங்குதான் யானையின் முதல் வழித்தடமான சீகூர் வழித்தடம் அடையாளம் காணப்பட்டது. இப்போது எல்லா பகுதிகளிலும் மக்கள் ஊடுருவி விட்டோம். யானைக்கான வாழ்விடத்தைக் கொடுத்தால் இந்தப் பிரச்னை வராது. ஜென்ம நிலங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதே இதற்கு நிரந்தரத் தீர்வு. அங்குள்ள மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவதைவிட, அவர்களுக்கான நிலத்தை பிரித்துக் கொடுத்து மற்ற இடங்களைக் காடாக மாற்ற வேண்டும்.'' என்றார்.
யானை–மனித மோதலைத் தடுக்க வனத்துறை எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளையும் பிபிசியிடம் விவரித்த கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ், ''பிற வனப்பகுதிகளை ஒப்பிடுகையில் கூடலூர் வனக்கோட்டத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். காடுகள் இங்கே துண்டாடப்பட்டுள்ளன. இடையிடையே குடியிருப்பு, எஸ்டேட்கள் இருக்கின்றன. அதனால் யானை–மனித மோதல் அதிகமாகவுள்ளது. ஒரு உயிரிழப்பும் நடக்காமல் தடுக்கவே 45 ஏஐ கேமராக்கள், 19 குழுக்களில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்து பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.'' என்றார்.
''ஆயிரம் பேரை பாதுகாத்தாலும் ஒன்றிரண்டு பேர் இறக்கும்போது மிக வேதனையாகவுள்ளது. இதற்கு மக்களிடமும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. யானை நடமாட்டமுள்ள பகுதிகளில் இரவில் வெளியே நடமாடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகிறோம். அகழி வெட்டுவது, காட்டுக்குள் யானை உணவுக்கான தாவரங்களைப் பயிரிடுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்கள் வனத்துறையுடன் அதிகமாக ஒத்துழைத்தால் இந்த மோதலை மேலும் குறைக்க முடியும்!'' என்றார் தேவராஜ்.
இதுகுறித்து கூடலூர் எம்எல்ஏ திராவிடமணியிடம் பிபிசி தமிழ் சில கேள்விகளை முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் விவரித்தார்.
பிபிசியிடம் பேசிய திராவிடமணி, ''இன்னும் அதிக தூரத்துக்கு அகழிகளை வெட்ட வேண்டும், காட்டுக்குள் களைச்செடிகளை அகற்றி யானைகளுக்கான உணவுத்தாவரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும், கூடுதலாக யானை துரத்தும் காவலர்களை நியமிக்க வேண்டும், தற்போது 45 இடங்களில் உள்ள ஏஐ கண்காணிப்புக்கான கேமராக்களை 300 இடங்களில் நிறுவ வேண்டும், மசினகுடியில் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும், மனித உயிரிழப்புக்கான இழப்பீடை குறைந்தபட்சம் ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை இந்த அரசிடம் வலியுறுத்துகிறோம். கூடலூரில் ஜென்ம நிலங்களை வகைப்படுத்தி, நிலச்சீரமைப்பு செய்வதே இதற்கு நிரந்தரத் தீர்வு.'' என்றார்.
மனித–காட்டுயிர் மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, அது தொடர்பாக தனியாக சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகச் சொல்கிறார் விவசாயத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ். கூடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பு, மனித–காட்டுயிர் மோதலுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, கடந்த 2025 ஜூலை 22 அன்று தில்லியில் ஒரு மாநாட்டை நடத்தியது. அதில் 19 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
பிபிசியிடம் பேசிய செல்வராஜ், ''வனப்பாதுகாப்பு சட்டம் 1980, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972 ஆகிய இரண்டிலுமே காட்டுயிர்கள் மக்களைத் தாக்கினால் அதற்கு என்ன நிவாரணம் என்பதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. இந்தியாவில் காட்டுயிர் தாக்கி ஒருவர் இறந்தால் அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை என்ன என்பதேயில்லை. காட்டுயிர்களால் ஏற்படும் உயிரிழப்பு, பயிர் பாதிப்பு போன்றவற்றை நிர்ணயிக்க ஒரு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும். அதேபோன்று இந்த பிரச்னைக்குத் தீர்வு காண சிறப்புக்குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும். யானைகளுக்கான உணவை காடுகளில் அதிகப்படுத்த வேண்டும்.'' என்றார்.
இந்த பிரச்னையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை, தீர்வுக்காக முன் வைக்கும் திட்டங்கள் குறித்து கருத்துக் கேட்பதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருவை பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவரிடம் பதில் பெறமுடியவில்லை. நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலியிடம் பதில் பெற முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு