You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காந்தி மனைவி கஸ்தூர்பா எழுதிய டைரி இந்தூர் ஆஸ்ரமத்தில் கிடைத்ததா? அதில் என்ன எழுதியிருந்தது?
- எழுதியவர், பாயல் புயன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 53ஆவது கட்டுரை இது.)
சில காலத்திற்கு முன்பு இந்தூரில் உள்ள ஓர் ஆசிரமத்தில் இருந்து ஒரு டைரி கிடைத்தது. இந்த டைரி மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூர்பாவின் நாட்குறிப்பு (டைரி) என்று கூறப்படுகிறது.
இந்த டைரி தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன. சிலர் அதை கஸ்தூரிபா காந்தியின் டைரி இல்லை என்று சொல்கின்றனர். அதே சமயம் அவரது கொள்ளுப் பேரன் துஷார் காந்தி அதை தனது கொள்ளுப் பாட்டி கஸ்தூர்பா காந்தியின் டைரி என்று கூறுகிறார்.
துஷார் காந்தி இந்த டைரி பற்றி ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.அதன் பெயர்- 'தி லால்ட் டைரி ஆஃப் கஸ்தூர் மை பா'.
இந்த டைரி மற்றும் அவரது புத்தகம் தொடர்பான சில கேள்விகளுக்கு துஷார் காந்தியுடன் பேசி விடை காண பிபிசி முயன்றது.
டைரிக்கு பின்னால் உள்ள கதை
இந்த டைரி உலகின் பார்வைக்கு வந்த கதையை துஷார் காந்தி இவ்வாறு விவரிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்காவில் காந்தி ரிசர்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பு நிறுவப்பட்டது.
காந்தியையும் அவருடன் தொடர்புடைய இலக்கியங்களையும் போற்றுவது அதன் நோக்கமாக இருந்தது. இந்த அறக்கட்டளையின் ஊழியர்கள் பல்வேறு காந்தி அமைப்புகளுக்குச் சென்று காந்திஜி தொடர்பான விஷயங்களைச் சேகரித்து இங்கு கொண்டு வருகிறார்கள்.
"இந்தூரில் இருக்கும் கஸ்தூர்பா டிரஸ்ட் அமைப்பிற்கு சென்ற ஒரு குழு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாத பழைய பெட்டிகள் மற்றும் அலமாரிகளை கண்டுபிடித்தது. அவற்றைத் திறந்தபோது, அதில் பல புத்தகங்கள் மற்றும் பழைய சாமான்கள் கிடைத்தன. அத்தகைய ஒரு பெட்டியில் இருந்து டைரி கிடைத்தது. கையால் எழுதப்பட்ட இந்த டைரி யாருடையது என்று முதலில் தெரியவில்லை. அங்கு சென்ற குழுவில் குஜராத்தி தெரிந்த ஒருவர் டைரியை படிக்க ஆரம்பித்தார். தனது அன்றாட வாழ்க்கைப் பற்றி யாரோ அதில் எழுதியுள்ளதாக தோன்றியது. ஒருவேளை இந்த டைரி கஸ்தூர்பா காந்தியுடையதாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது,"என்று துஷார் காந்தி குறிப்பிட்டார்.
"இந்த டைரியில் எழுதப்பட்டவை கஸ்தூர்பாவுக்கு சொந்தமானவையா என்பதை உறுதி செய்ய, அப்போது கஸ்தூரிபா இருந்த இடத்துடன் அந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்ட விஷயங்களைப் பொருத்திப்பார்த்தபோது, இந்த டைரி அவருடையதுதான் என்று உறுதியானது," என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தக் கதை கஸ்தூர்பாவின் நாட்குறிப்பைப் பற்றியது. ஆனால் அவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பதால் இந்த டைரி அவருடையது என்று நம்ப யாரும் தயாராக இல்லை.
துஷார் காந்தியின் வாதம்
கஸ்தூர்பா காந்தி படிப்பறிவில்லாதவராக இருந்த நிலையில், இந்த டைரியை அவர்தான் எழுதினார் என்ற முடிவுக்கு துஷார் காந்தி எப்படி வந்தார் என்ற கேள்வி எழுகிறது.
அவர் படிக்கவில்லை என்றாலும் காலப்போக்கில் அவரே அடிப்படை எழுத்துக்கள் எழுதும் அறிவைப் பெற்றிருப்பார் என்று துஷார் காந்தியின் வார்த்தைகளில் இருந்து எண்ணத் தோன்றுகிறது.
"எனக்கு டைரி கிடைத்ததும், அவர் படிக்காதவர், எழுதத் தெரியாதவர். அது எப்படி 'கஸ்தூர்பா' வுடையதாக இருக்கமுடியும் என்று நானும் நினைத்தேன். ஆனால் நான் டைரியைப் படித்தபோது அது 'கஸ்தூர்பா' வுடையது என்று நான் உறுதியாக நம்பினேன். 'கஸ்தூர்பா'வின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய என் தந்தையிடமும் இதைப் பற்றி நான் பேசினேன். கஸ்தூர்பா படிக்காதவர் என்பதால் இது 'கஸ்தூர்பா'வின் டைரியாக இருக்க முடியாது என்று அவரும் நம்பினார். ஆனால் நான் மொழி, சொல்லகராதி, இலக்கணம், வாக்கிய அமைப்பு எல்லாவற்றையும் பார்த்தபோது, பேச்சு மொழி மட்டுமே தெரிந்த ஒருவர் இதை எழுதியிருக்கவேண்டும் என்று தோன்றியது. பேசும் மொழியே அதில் எழுதப்பட்டிருந்தது," என்று துஷார் காந்தி கூறுகிறார்.
"காட்யாவாடி உச்சரிப்பு பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. காட்யாவாடி என்பது குஜராத்தின் பேச்சுவழக்கு. மேலும் "பா" வின் பேச்சு மொழியும் வாழ்நாள் முழுவதும் காட்யாவாடியாகவே இருந்தது. குடும்பத்துடன் "பா" உடன் வாழ்ந்த மற்றவர்களும் "பா" காட்யாவாடி மட்டும்தான் பேசுவார் என்று உறுதியாகக்கூறினர். காட்யாவாடி பேசும் ஒருவர்தான் இதை எழுதியிருப்பார் என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தது. எழுத்தில் இலக்கணப் பிழைகளும் இருந்தன. "பா" பேசி, வேறு யாராவது டைரி எழுதியிருந்தால், அந்த எழுத்தாளர் "பா" பேசுவதில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தியிருப்பார். 'பா'எப்படி வார்த்தைகளை உச்சரித்திருப்பாரோ அதே போல டைரியில் எழுதப்பட்டுள்ளது."
'ஹாஸ்பிடல்' என்ற வார்த்தை ஒரு இடத்தில் 'இஸ்பிடல்' என்று எழுதப்பட்டுள்ளது, வெறு எங்கோ 'ஹாஸ்டிபல்' என்று எழுதப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் 'இஸ்பதால்' என்று எழுதப்பட்டுள்ளது, இந்த ஒரே வார்த்தை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வழிகளில் எழுதப்பட்டுள்ளது. சிறை கண்காணிப்பாளர் superintendent என்ற வார்த்தை, "Supertaine", "Supleinten", "Suktenly" என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக எழுதப்பட்டுள்ளன. எழுத்தறிவு இல்லாதவர்கள்தான் இப்படி எழுத முடியும். 'கஸ்தூர்பா' பேசி வேறு யாராவது எழுதியிருப்பார்கள் என்றால், 'கஸ்தூர்பா' சொல்வது தவறாக இருந்தாலும் அவர் சரியாக எழுதியிருப்பார். இதையெல்லாம் படித்தபோது, இதை "பா" தான் எழுதியுள்ளார் என்று எனக்கு மேலும் உறுதியாகிவிட்டது."
டைரியில் என்ன எழுதப்பட்டுள்ளது?
நாம் வரலாற்றைப் படிக்கும்போது, மகாத்மா காந்தியைப் பற்றி நிறைய இருக்கிறது. ஆனால் அவரது மனைவி கஸ்தூர்பா காந்தியைப் பற்றி அதிகம் படிக்கவில்லை. இது 1933 இல் எழுதப்பட்ட டைரி. கஸ்தூர்பா இந்த டைரியை எழுதியிருந்தால், அவர் தன்னைப் பற்றி இதில் என்ன எழுதியுள்ளார் என்று பிபிசி செய்தியாளர் துஷார் காந்தியிடம் கேட்டார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த துஷார் காந்தி, "'பா' இதில் தன்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் எதுவும் எழுதவில்லை. கணவரைப் பிரிந்த காலத்தின் டைரி இது. 'பா' வேறு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், 'பாபு' வேறு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்த கால விவரங்களை 'பா'எழுதியுள்ளார். அவரது வாழ்க்கை முறை மற்றும் தினசரி பழக்க, வழக்கங்கள் இதன்மூலம் தெரியவரும்,"என்றார்.
கஸ்தூர்பா காந்தி தன்னைப் பற்றி மட்டுமே எழுதினாரா அல்லது சுற்றி நடப்பதைப் பற்றி தனது எண்ணங்களை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தினாரா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த துஷார் காந்தி, "சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எழுதியுள்ள 'பா' தனது எண்ணங்களை டைரியில் எழுதவில்லை என்று கூறுகிறார். அன்றைய அரசியல் குறித்தும் பல இடங்களில் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
கஸ்தூர்பா காந்தி - காந்தியின் பலம்
மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் கஸ்தூர்பா காந்தியின் தாக்கம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த துஷார் காந்தி, "தனது வாழ்க்கையில் மேற்கொண்ட முயற்சிகள், தான் அடைந்த இலக்கு, தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகிய அனைத்திலுமே 'பா"வின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால், அவற்றை சாதித்திருக்க முடியாது என்று பாபுவே ஒப்புகொண்டுள்ளார். அது சரி என்று நானும் நினைக்கிறேன்,"என்று குறிப்பிட்டார்.
" பாபுவின் மாற்றங்களுக்கு ஏற்ப 'பா' தன்னை மாற்றிக்கொண்டு, பாபுவுக்குத் தேவையான ஆதரவையும் பலத்தையும் கொடுத்தார். அதே நேரத்தில், தனது பக்கத்திலிருந்து ஒரு மெளனமான ஆதரவை அளித்து தொடர்ந்து வலிமையைக் கொடுத்தார்."என்று அவர் மேலும் கூறினார். "யாரோ ஒருவர் என் பின்னால் இருக்கிறார். எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளக்கூடியவர், தேவைப்படும்போது என்னையும் கவனித்துக் கொள்ளக்கூடியவர், என் அருகில் இருக்கிறார், என்னுடன் இருக்கிறார் என்ற உணர்வு பாபுவுக்கு இருந்தது.
'கஸ்தூர்பா' அவருடன் இல்லாத அந்த கடைசி நான்கு ஆண்டுகளில்' பாபு' முழுமையற்றவராக உணர்ந்ததை நாங்கள் பார்த்தோம். நிர்க்கதியாகி, தன் வாழ்க்கைத் துணையை அவர் தேடுவது போல இருந்தது. பாபுவுக்கு 'பா'எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் கவனித்த விஷயங்கள் தெளிவாக சுட்டிக்காட்டின," என்று துஷார் காந்தி குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்