You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு" - உச்சநீதிமன்றம்
(இந்தியா, இலங்கையில் இன்று (22.07.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பமடைந்துள்ளார்.
அதுகுறித்து அவருக்குக் கடந்த ஜூன் மாதம் தெரியவந்துள்ளது. உடனே அவர் கருக்கலைப்பு செய்துகொள்ள மருத்துவர்களை நாடியுள்ளார். ஆனால், திருமணமாகாதவர் என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அவர், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியபோது, அங்கும் அவருடைய கருக்கலைப்புக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. ஆகையால் அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சம்பந்தப்பட்ட பெண் தனது நண்பருடன் மனமுவந்து உறவில் இருந்துள்ளார். இதில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில், அவரது நண்பர் திடீரென திருமணத்திற்குச் சம்மதமில்லை எனக் கூறிவிட்டார். இந்நிலையிலேயே பெண் கருக்கலைப்புக்கு அனுமதி கோரியுள்ளார். திருமண உறவைத் தாண்டி குழந்தை பெற்றுக்கொண்டால், அதனால் பல்வேறு சமூக நெருக்கடிகளுக்கு ஆளாக வேண்டும். அதை எதிர்கொள்ளத் தயாராக இல்லாததாக அவர் காரணம் கூறியுள்ளார்.
ஒரு பெண் திருமணமாகாதவர் என்ற ஒரே காரணத்தால் அவருக்கு கருக்கலைப்பு உரிமையை மறுக்க முடியாது. இப்போது அந்தப் பெண்ணின் கரு 24 வாரங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழு மனுதாரரை முழு மருத்துவப் பரிசோதனை செய்து கருக்கலைப்பால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று உறுதியானால் கருக்கலைப்பு செய்யலாம்.
அவ்வாறு அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய இயலாத மருத்துவ நெருக்கடி ஏற்பட்டால் அவர் பத்திரமாக குழந்தைப் பேறு செய்ய, தகுந்த பாதுகாப்பான இடத்தில் வைக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அந்தப் பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு செல்லலாம். குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு குழந்தையை தேவையானோர் முறைப்படி தத்து எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ள நாட்டில் ஒரு கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறது," என்று தெரிவித்தனர்.
கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் 14 நாள் தங்குவதற்கு அனுமதி
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள்கள் தங்குவதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்திருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, போராட்டக்காரர்களின் ஆவேசத்தைத் தொடர்ந்து சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்ஷ, தங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை என்றும் அவருக்கு தஞ்சம் அளிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் பயணம் தொடர்பான பத்திரிகைகளின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் குடியேற்ற ஆணையம் நேற்று விளக்கம் அளித்தது. அந்த ஆணையம், "தனிப்பட்ட பயணமாக கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவருக்கு 14 நாட்கள் தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.
பொதுவாக இலங்கையைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வரும்போது, 30 நாள் வரை தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச் சீட்டு வழங்கப்படும். அதற்கு மேல் தங்குவதை நீட்டிக்க விரும்பினால், அவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும்.
தகுதி அடிப்படையில் அவை தனித்தனியாகப் பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது. இதற்கிடையே, சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மக்கள், இலங்கையில் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆட்சி மாற்றத்துடன் உறுதியான கொள்கை மாற்றமும் வர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். சிலர் ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்து, அதற்கான பணத்தை சேமித்து, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள்.
இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு சைக்கிள் பயன்படும் என்பதால், வேறு சிலர் சைக்கிள்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள். நம்பகமான நபர்கள் மூலம் உதவி அனுப்புவதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் 3 மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு விநியோகம்
சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் திருகோணமலை - தோப்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு லிட்ரோ சமையல் எரிவாயு 21ஆம் தேதி விநியோகிக்கப்பட்டதாக தமிழ்மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 12 கிராமங்களைச் சேர்ந்தோருக்கு 750 சிலிண்டர்கள் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்தில் வைத்து விநியோகம் செய்யப்பட்டது.
தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவின் உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில், கடந்த மே மாதத்துக்கான மின்சார கட்டணப் பட்டியலின் பிரகாரம் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.
இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வரிசை சரியாக இல்லையெனத் தெரிவித்து, சிறிய வாய்த் தகராறு இடம்பெற்றதைக் காணமுடிந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்