மாம்பழ விளைச்சல் அதிகமாகியும், விவசாயிகள் டன் கணக்கில் குப்பையில் கொட்டுவது ஏன்?

    • எழுதியவர், சண்முகப்ரியா செல்வராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கோடைக் காலம் என்றதும் விடுமுறையோடு சேர்த்து பருவகாலப் பழங்களும் நினைவுக்கு வரும். அதிலும் குறிப்பாக மாம்பழங்களுக்கு தனி பிரியர்கள் உண்டு என்றே கூறலாம். கோயம்பேட்டில் தற்போது ஒரு கிலோ மாம்பழம் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி மாம்பழங்களை விவசாயிகள் குப்பைகளில் கொட்டிச் செல்கின்றனர். என்ன காரணம்?

தமிழகத்தில் மாம்பழம் என்றாலே நினைவுக்கு வருவது சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்கள்தான். அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம் பசந்த் உள்ளிட்ட பல்வேறு ரக மாம்பழங்களும், செந்தூரம், மல்கோவா போன்ற நாட்டு ரகங்களும், தமிழ்நாட்டில் விளைவிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த ஆண்டு, மாம்பழ விவசாயிகளுக்கு அறுவடை அவ்வளவு இனிமையானதாக இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். குறிப்பாக, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தோப்புகளில் இருந்து அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் குப்பைகளில் கொட்டப்பட்டன. இதற்குக் கடுமையான விலை வீழ்ச்சியே காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களின் விலை கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு பத்து முதல் இருபது ரூபாயாக இருந்ததாகத் தெரிவிக்கும் விவசாயிகள், இந்த ஆண்டு அது ஐந்து ரூபாய்க்கும் கீழே சரிந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

ஆண்டு முழுவதும் உரம், நீர், பராமரிப்பு என விளைச்சலுக்காக செலவு செய்த தொகையில் பாதிகூட தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறும் விவசாயிகள் மாம்பழங்களை டிராக்டர்களில் ஏற்றி, குப்பைத் தொட்டிகளில் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாம்பழ விவசாயியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனருமான ஈசன் முருகசாமி, "நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, வத்திப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக அளவில் மாம்பழம் விளைந்தது. ஆனால் அதன் மூலம் துளியும் லாபம் கிடைக்கவில்லை" என்றார்.

கிலோ ஒன்றுக்கு இரண்டு ரூபாய் முதல் 5 ரூபாய் விலையில் மட்டுமே மாம்பழங்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறும் ஈசன் முருகசாமி, இதனால் விளைச்சலுக்கு செலவு செய்த அசலில் பகுதியளவுகூட கிடைப்பதில்லை என்று தெரிவித்தார்.

"அரும்பாடுபட்டு விளைவித்த மாம்பழத்தை கிலோ 3 ரூபாய்க்கும் கீழே என்ற விலையில் கொடுக்க மனமில்லாமல் குப்பையில் கொட்டும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்," அவர் குறிப்பிட்டார்.

இதே நிலை கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடர்கிறது. ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் மாம்பழ விளைச்சல் தீவிரமடைந்து, அறுவடைப் பணிகள் நடைபெறும். இந்த ஆண்டும் மா விளைச்சல் நல்ல முறையில் உள்ள நிலையில், சந்தையில் நிலவும் கடும் விலை வீழ்ச்சி விவசாயிகளை அதிகளவில் பாதித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளின் நிலை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மாம்பழ விவசாயி பி.கே.கணேஷ், "40 ஏக்கர் மாம்பழம் விவசாயம் செய்தேன். பராமரிப்பு, தண்ணீர், உரம், பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு செலவு செய்ய பணம் இல்லாமல் வீட்டிலுள்ள நகைகளை அடமானம் வைத்து செலவு செய்து மாம்பழம் உற்பத்தி செய்தேன். ஆனால் இப்போது 3 ரூபாய்க்குக்கூட கொள்முதல் செய்ய யாரும் முன்வரவில்லை."

"ஒரு கிலோ இரண்டு ரூபாய், இரண்டரை ரூபாய்க்கு விற்பனை செய்ய மனமில்லாமல் டன் கணக்கில் மாம்பழங்களை சாலையோரத்தில் கொட்டிவிட்டோம். எனக்கு மட்டுமல்ல, இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் நிலையும் இதுதான். நாங்கள் எல்லோரும் கடின உழைப்பைச் செலுத்தி விளைவித்த மாம்பழங்களை சாலையோரமாகக் குப்பைகளில் கொட்டி வருகிறோம்," என்றார்.

இந்த நிலையில், மாம்பழங்களின் கொள்முதல் விலை 5 ரூபாய்க்கும் கீழே சரிந்துள்ளதால் அரசு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயித்து, மாம்பழ விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாம்பழ விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் உடனடியாக அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "விவசாயிகள் ஒரு கிலோ மாம்பழத்தை விளைவிப்பதற்கு குறைந்தபட்சமாக 15 முதல் 20 ரூபாய் வரை செலவாகிறது. இதைக் கணக்கிடுவதும் அரசாங்கம்தான். எனவே கொள்முதல் விலையை 20 ரூபாய்க்கு குறைவில்லாமல் நிர்ணயம் செய்யும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அத்துடன், "அதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டால் இந்த விலை வீழ்ச்சி ஏற்படாது" என்றும், "உற்பத்தி காலத்தில் அடிமட்ட விலைக்கு விற்பனை செய்ய மனமின்றி விவசாயிகள் தங்கள் மாம்பழங்களை குப்பையில் கொட்டும் நிலை ஏற்படாது," என்றார்.

மாம்பழ வியாபாரிகளின் நிலை என்ன?

விவசாயிகளிடம் கிலோ ஒன்றுக்கு மூன்று ரூபாய்க்கும் கீழே வாங்கப்படும் மாம்பழம் சந்தைகளில் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை அறிய கோயம்பேடு சந்தைக்குச் சென்றோம்.

கோயம்பேட்டில் ஒரு கிலோ மாம்பழம் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், வியாபாரிகளும் தங்கள் மாம்பழங்களை குப்பைகளில் கொட்டிச் செல்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேறாக இருக்கிறது.

வழக்கத்திற்கு மாறாக மாம்பழ விற்பனை குறைவாக இருப்பதாலும், போர்ச் சூழல் காரணமாக ஏற்றுமதி அதிகளவில் இல்லாததாலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மாம்பழம் விற்பனையாகாமல் வீணாகி, குப்பைகளில் கொட்டப்படுவதாகக் கூறுகிறார் கோயம்பேடு காய், கனி, மலர், உணவு தானிய கூட்டமைப்புச் செயலாளர் மணிவண்ணன்.

ஆனால் "வியாபாரிகளைவிட விவசாயிகளே அதிகம் பாதிக்கப்படுவதாக" குறிப்பிட்ட அவர், "அவர்களுக்கு குறைந்தபட்ச விலைகூட கிடைக்காததால், விளைவித்த மாம்பழங்களை விற்பனை செய்யாமல் குப்பைகளில் கொட்டிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பு பதில் என்ன?

இந்தப் பிரச்னைக்கு அரசு தரப்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய பிபிசி தமிழ் வேளாண் துறையைத் தொடர்புகொண்டு கேள்வியெழுப்பியது.

அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்களுக்கு சரியான விலை கிடைக்காமல் கீழே கொட்டப்பட்ட பிரச்னை குறித்துப் பேசிய வேளாண்மை உற்பத்தி ஆணையர் பி. சங்கர், "விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு