“அதிமுகவின் உள்பிரச்னைக்கு பாஜகவே காரணம்” – நாஞ்சில் சம்பத்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (26/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

அ.தி.மு.க.வில் நடைபெறும் பிரச்னைக்கு பா.ஜ.க.வே காரணம் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்ததாக 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பூந்தமல்லி தொகுதி இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த பயிற்சி பாசறையில் அமைச்சர் நாசர், தி.மு.க. நிர்வாகி தமிழன் பிரசன்னா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதில், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் ஜெயக்குமார், இளைஞரணி நிர்வாகிகள் பிரபு கஜேந்திரன், ஜெரால்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், "பா.ஜ.க.வின் கொள்கை அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவதாகக் கருதி கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக அநீதியை அரங்கேற்றி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இடைச்சறுக்கலாக வந்தவர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு கண்டுகொள்ளப்படவில்லை என்பதைவிட அதன் மீது அத்துமீறலை நடத்தி இருக்கிறார்கள். இதற்குப் பின்னால் பா.ஜ.க. விளையாட்டு இருக்கிறது என்பதை நாடு புரிந்து கொண்டிருக்கிறது. இன்று மராட்டியத்தில் செய்கிற வேலையை நாளை தமிழகத்தில் அவர்கள் செய்வார்கள். செல்வாக்கு உள்ள கட்சியை உடைப்பதும் உருக்குலைப்பதும் ஊடுருவுவதும் பா.ஜ.க.வின் கொள்கை. அதற்கு அ.தி.மு.க.வும் பலியாகி இருக்கிறது," என்று கூறினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து இறுதி அறிக்கை: ஆகஸ்ட் 3இல் தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம், தனது இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 3இல் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், "ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பல்வேறு கட்டங்களாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.

இதுவரை 12 முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் ஒரு மாதம் ஏழு நாள் அவகாசம் கோரி தமிழ்நாடு அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் ஜூன் 7ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தது. இதைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 3 வரை அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், அன்றைய தினம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை இன்று (26-06-2022) அதிகாலை 2 மணி முதல் அதிகரித்துள்ளதாக வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, ஒரு லிட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லிட்டர் 92 ஒக்டேன் பெட்ரோலின் புதிய விலை 470 ரூபாவாகும்.

ஒரு லிட்டர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் 95 ஒக்டேன் பெட்ரோலின் புதிய விலை 550 ரூபாவாகும்.

ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதால், புதிய விலை 460 ரூபாவாகும்.

ஒரு லிட்டர் சூப்பர் டீசல் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதன் விலை 520 ரூபாவாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை அதிகரித்ததைத் தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் விலை 50 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 470 ரூபாவாகி உள்ளது.

ஒரு லிட்டர் 95 ஒக்டேன் பெட்ரோலின் புதிய விலை 550 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 490 ரூபாவாகவும் ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் புதிய விலை 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

"மக்கள் போராட்டமே சிறந்த வழி" - சஜித் பிரேமதாச

அரசாங்கம் நாட்டை தற்போது ஒரு சோகமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற திட்டங்கள் மூலம் முழு நாடும் அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு ஜனநாயக, சுதந்திர மற்றும் வெளிப்படையான மக்கள் போராட்டமே சிறந்த வழி என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் உண்மை நிலவரத்தை உணர்ந்து மக்களுக்குச் சாதகமான வகையில் தமது வேலைத் திட்டங்களை மாற்றியமைக்க நினைத்தாலும் அது போல எதுவும் நடக்கவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது தமிழ் மிரர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: