You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுகவில் நடப்பது என்ன? ஓபிஎஸ் - இபிஎஸ் இல்லங்களுக்கு மாறிமாறி நடக்கும் நிர்வாகிகள்
அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளதால், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஒருங்கிணைப்பளார் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சமாதானம் செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிறு (ஜூன் 19) காலை முதல் ஓபிஎஸ்-இபிஎஸ் இல்லங்களுக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் மாறி மாறி சென்றுவருகின்றனர். ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒற்றை தலைமை என்பதை பெரும்பான்மையானவர்கள் விரும்புவதால், விரைவில் செயல்வடிவம் பெரும் என்றும் மறைமுகமாக தெரிவித்தனர். ஒரு சில கட்சி நிர்வாகிகள் தனது ஆதரவு யாருக்கு என்றும் வெளிப்படையாக பேசினார்.
இன்று அதிமுகவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
- மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை முதலில் ஓபிஸ் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, இபிஎஸ் இல்லத்திற்கு சென்றனர். ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரையும் இவர்கள் சமாதனம் செய்ததாக சொல்லப்படுகிறது.
- முன்னாள் அமைச்சர் சிவபதி, கட்சியில் உள்ள இளைஞர்களின் ஆதரவு முழுமையாக இபிஎஸ்சுக்கு இருப்பதாக கூறினார். அதோடு ஒற்றை தலைமை என்பதை கட்சியில் பலரும் விரும்புவதால், அதை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டு ஒத்துப்போவது நல்லது என்றும் தெரிவித்தார்.
- இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் இபிஎஸ் தரப்பில் இருப்பதாக கூறியது தவறு என ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சில இளைஞர் அணி தொண்டர்கள் தெரிவித்தனர். இளைஞர் அணியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், ஓபிஎஸ் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், தங்களுக்கென ஆதாயம் தேடியவர்கள்தான் இபிஎஸ் இல்லத்திற்கு சென்றுள்ளனர், மற்ற இளைஞர்கள் ஓபிஎஸ்சுடன் உள்ளனர் என்றும் தெரிவித்தார் .
- ஓபிஎஸ் தரப்பினர்,ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டவர் ஓபிஎஸ் என்றும் அவரை முன்னிறுத்தாமல் போனதால்தான் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது என்று நாளிதழ்களில் முழுபக்க விளம்பரம் வெளியிட்டு ஓபிஸ் ஆதரவாளர்கள் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளனர்.
- ஓபிஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிலர் இபிஎஸ் இல்லத்திற்கு வந்து அவருக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்கையில், ஓபிஎஸ் இல்லத்தில் இருந்த ஓபிஎஸ்ஆதரவாளர்கள், தேனி மாவட்டத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்தான் இபிஎஸ் இல்லத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.
- அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டுவர சட்டத்தில் இடம் உள்ளது என்றும்அந்த தலைமையை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் கட்சியை வழி நடத்துவதற்கு தேவையான சட்டங்களை இயற்றுவது பொதுக் குழு. ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என சட்ட விதியில் கூறப்படவில்லை. இதனால் கழகத்தின் சட்ட விதிமுறைகளை பயன்படுத்தி பொதுக்குழுவின் அதிகாரத்தின் மூலம் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதற்கு பொதுக்குழுவிற்கு உரிமை உள்ளது என்றார்.
- மூத்த நிர்வாகி மற்றும் முன்னாள் அமைச்சரான ஓ எஸ் மணியன், ஒற்றை தலைமை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். மிக பெரும்பான்மையானவர்கள் விரும்புவது ஒற்றைதலைமைதான் என்றார். அந்த ஒற்றை தலைமையின் வடிவம் எப்படி,யார் பொறுப்பு ஏற்பார்கள் என்பது பற்றி பொதுகுழுதான் முடிவு செய்யும் என்றார்.
- அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்தவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான புகழேந்தி ஓபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, கட்சியிலும் சரி, அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் சரி சர்வாதிகாரியாகச் செயல்பட்டவர் இபிஎஸ் என விமர்சித்தார்.
- புகழேந்தியைப்போல கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பலரும் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரண்டு தலைவர்களின் இல்லங்களுக்கு வந்துள்ளனர். நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கப்படவேண்டும் எனில், ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்துதான் கையெழுத்திட்டு இவர்களை இணைக்கமுடியும் என்ற நிலை தற்போது நீடிக்கிறது.
- ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அலங்காரங்கள், வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்