பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய கியர் ஸ்டாமர் - என்ன காரணம்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிரிட்டன் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் பதவிகளிலிருந்து விலகுவதாக கியர் ஸ்டாமர் அறிவித்துள்ளார்.

10 டவுனிங் தெருவில் தனது முடிவை விளக்கிய அவர், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்தத் தான் மிகவும் பொருத்தமானவரா என்பது குறித்துத் தனது கட்சி கேள்வி எழுப்பி வருவதாகக் கூறினார்.

இந்தக் கேள்விக்குத் தனது கட்சி அளித்துள்ள பதிலை தான் "கேட்டிருப்பதாகவும்", "அந்தப் பதிலை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும்" அவர் கூறியுள்ளார்.

தான் எடுத்த ஒவ்வொரு முடிவும், "தான் நேசிக்கும் தனது நாட்டை முதன்மைப்படுத்துவது குறித்தே அமைந்திருந்ததாக" அவர் கூறியுள்ளார்.

தான் பதவி விலகும் முடிவைத் தெரிவிப்பதற்காக, திங்கள்கிழமை காலையில் அரசரிடம் பேசியதாக ஸ்டாமர் கூறினார்.

தலைமைப் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 9-ஆம் தேதி தொடங்கி, கோடை விடுமுறைக்குள் அப்பணிகள் நிறைவடையும் வகையிலான கால அட்டவணையை வகுக்குமாறு அவர் தொழிலாளர் கட்சியின் தேசிய செயற்குழுவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதாவது, செப்டம்பரில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் முன்பே ஒரு புதிய தலைவர் பதவியேற்பார் என்பதாகும்.

அதுவரை, தான் பிரதமர் பதவியில் நீடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.

ஸ்டாமர் இந்த முடிவை எடுத்தது ஏன்?

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கால அட்டவணையை வகுக்குமாறு கியர் ஸ்டாமர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான ஆண்டி பர்ன்ஹாமிடம் தலைமையை ஒப்படைப்பதற்கான திட்டத்தை அறிவிக்குமாறு, கியர் ஸ்டாமரை வலியுறுத்தும் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வேன் என்றும், "பின்வாங்கப் போவதில்லை" என்றும் பிரதமர் உறுதியாகக் கூறினார்.

தொழிலாளர் கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டி இருக்குமா என்பது தெளிவாக இல்லை.

உதாரணமாக, ஜூலை 9-ஆம் தேதி போட்டி தொடங்கும்போது ஆண்டி பர்ன்ஹாம் போட்டியின்றி வெற்றி பெற்றால், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பிறகு அவர் தொழிலாளர் கட்சியின் தலைவராகலாம்.

கியர் ஸ்டாமர் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; பொதுத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டு ஜூலை 5 அன்று பிரதமரானார்.

அவர் பதவி விலகும் முடிவால், 2016-ம் ஆண்டிலிருந்து பிரிட்டன் விரைவில் தனது ஏழாவது பிரதமரைக் காணவிருக்கிறது.

பதவி விலகலை அறிவிப்பதற்கு முன்பாக என்ன கூறினார்?

பதவி விலகலை அறிவிப்பதற்கு முன், "அரசியல், நிதி மற்றும் தார்மீக ரீதியாக முற்றிலும் சீர்குலைந்திருந்த" தொழிலாளர் கட்சிக்கே தான் பொறுப்பேற்றதாக ஸ்டாமர் கூறினார்.

"இந்தக் கட்சி முடிந்துவிட்டது" என்று தன்னிடம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டதாகவும், ஆனால் அந்தக் கருத்து தவறானது என்பதைத் தாம் நிரூபித்ததாகவும் அவர் கூறினார்.

"யூத வெறுப்பு எனும் நஞ்சை அகற்றுவதன்" மூலம் தான் கட்சியை மாற்றியமைத்ததாக அவர் கூறினார்.

"இது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தது," என்று அவர் மேலும் கூறினார்.

அதிகாரப் பரிமாற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்யத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாகவும், தனக்கு அடுத்து பதவிக்கு வருபவருக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாகவும் கியர் ஸ்டாமர் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வலிமையான மற்றும் நியாயமான ஒரு பிரிட்டனுக்கே தான் பொறுப்பேற்கவிருக்கிறோம் என்பது தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார்.

கடந்த ஆறு ஆண்டுகளாகத் தன்னுடன் இருந்து வரும் நண்பர்கள் மற்றும் சகாக்களுக்கும், பிரதமர் அலுவலக ஊழியர்கள் மற்றும் "சிறப்பான குடிமைப் பணியினருக்கும்" ஸ்டாமர் நன்றி தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சியின் மோசமான செயல்பாடே கியர் ஸ்டாரின் பதவி விலகலுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது; ஆனால், இதைத் தவிர ஸ்டாமர் மீதான அழுத்தத்தை அதிகரித்த வேறு பல காரணங்களும் இருந்தன.

நிதி சார்ந்த சவால்கள்

கியர் ஸ்டாமரின் பதவிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே சிக்கல்களுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

பிரதமராகப் பதவியேற்ற மூன்று மாதங்களிலேயே, அப்பதவியை ஏற்ற பிறகு தனக்குக் கிடைத்த பரிசுகள் மற்றும் உபசரிப்புகளுக்கான (டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சிக்குரிய டிக்கெட்டுகள் உட்பட) 6,000 பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்பிலான தொகையை அவர் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது.

எந்த விதிகளும் மீறப்படவில்லை என்றாலும், அமைச்சர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்ட செய்தி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது; குறிப்பாக, பொருளாதாரம் மந்தமாக இருந்த சூழலிலும், சீர்திருத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் அரசின் திறன் குறித்த கேள்விகள் எழுந்திருந்த நிலையிலும் இச்செய்தி அதிருப்தியை உருவாக்கியது.

பசுமை முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கைவிட்டது, நலத்திட்ட உதவிகளில் மாற்றங்கள் மற்றும் பரம்பரை சொத்து வரி தொடர்பான கொள்கை மாற்றங்கள் உள்ளிட்ட பல கொள்கை நிலைப்பாட்டு மாற்றங்களுக்காக கியர் ஸ்டாமர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டவிரோதமாகக் கடந்து வரும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அவர் வலதுசாரிகளாலும் விமர்சிக்கப்பட்டார்.

கியர் ஸ்டாமர் மக்களிடையே மிகவும் செல்வாக்கற்றவராக மாறிவிட்டதை கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டின. சில சமயங்களில், அவரது செல்வாக்கு விகிதங்கள் பிரிட்டிஷ் பிரதமர்களுக்கு இதுவரை பதிவான மிகக் குறைந்த அளவுகளுக்கு மிக அருகில் சரிந்திருந்தன.

எப்ஸ்டீன் மற்றும் தூதர்

அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதரான லார்ட் பீட்டர் மண்டல்சனின் பெயர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஆவணங்களில் இடம்பெற்றது, பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரின் பதவிக்காலத்தில் எழுந்த மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றாகும்.

டோனி பிளேரின் பதவிக்காலத்தில் சிறந்த அரசியல் வியூகவாதியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட லார்ட் மண்டல்சன், முன்னதாக சர்ச்சைகளுக்கு மத்தியில் இருமுறை தொழிலாளர் கட்சி அரசாங்கங்களிலிருந்து விலகியிருந்தார்.

சிறார் ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட பின்னரும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் நட்பைத் தொடர்ந்தவர் என்பது தெரிந்திருந்தும், பிரிட்டனின் மிக முக்கியமான கூட்டாளியான அமெரிக்காவில் தனது பிரதிநிதியாக லார்ட் மண்டல்சனை கியர் ஸ்டாமர் நியமித்தார்.

ஜனவரி மாதம் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட ஆவணங்கள், எப்ஸ்டீன் மற்றும் லார்ட் மண்டல்சன் ஆகியோருக்கு இடையிலான தொடர்புகள் குறித்த புதிய விவரங்களை வெளிப்படுத்தின.

லார்ட் மண்டல்சன், எப்ஸ்டீனுடன் அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம் என்பதைக் குறிக்கும் ஆவணங்கள் அல்லது தகவல்கள் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்த இது வழிவகுத்தது.

லார்ட் மண்டல்சன் அந்த மின்னஞ்சல்கள் குறித்து பகிரங்கமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை; இருப்பினும், தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், நிதி ஆதாயம் ஏதும் பெறும் நோக்கம் தமக்கு இருக்கவில்லை என்றும் அவர் கூறி வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் ஸ்டாமர் லார்ட் மண்டல்சனை அவரது பதவியிலிருந்து நீக்கினார்; ஆனால், இந்த விவகாரம் முழுவதுமே பிரதமரின் முடிவெடுக்கும் திறன் குறித்துக் கேள்விகளை எழுப்பியதுடன், ஒரு நிலையான மற்றும் திறமையான தலைவராகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் பலவீனப்படுத்தியது.

டிரம்புடனான உறவு

லார்ட் பீட்டர் மண்டல்சனை அமெரிக்காவுக்கான பிரிட்டனின் தூதராக நியமித்ததற்கு கியர் ஸ்டாமர் கொண்டிருந்த முக்கிய காரணங்களில் ஒன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நெருக்கமான உறவை அவரால் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஆகும்.

அமெரிக்க மற்றும் பிரிட்டன் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் ஆரம்பத்தில் சுமூகமாக இருந்தபோதிலும், இரானுக்கு எதிரான போரில் இணைய கியர் முதலில் மறுத்தபோது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான 'சிறப்பு உறவு' என்று அழைக்கப்படும் அந்த உறவு படிப்படியாகச் சிதைவடைந்தது.

பின்னர் பிரதமர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இரானின் ஏவுகணைத் தளங்கள் மீது "தற்காப்புத்" தாக்குதல்களை நடத்துவதற்காக அமெரிக்க ராணுவம் பிரிட்டிஷ் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்தார்.

ஆனால், இந்த நிலைப்பாடு கூட டிரம்புக்குத் திருப்தி அளிக்கவில்லை. அவர் கியர் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தினார்; அதேவேளையில், மோதலில் எந்தவிதமான ஈடுபாட்டையும் அவர் எதிர்த்தது பாரம்பரியத் தொழிலாளர் கட்சி ஆதரவாளர்களையும் கோபமடையச் செய்தது.

பிரதமரின் சில விமர்சகர்களுக்கு, இந்த முடிவு அவரது தலைமைப் பாணியின் அடையாளமாக மாறியது. ஸ்டாமர் அடிக்கடி பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்துவதால், அது இறுதியில் இரு தரப்பினரையும் கோபப்படுத்துகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

உண்மையில், கியர் பதவி விலகுவதற்கான சாத்தியக்கூறை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பே உணர்ந்திருந்ததாகத் தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில், கியர் "பிரதமர் பதவியிலிருந்து விலகுவார்" என்று கூறிய டிரம்ப், குடியேற்றம் மற்றும் எரிசக்தி கொள்கை விவகாரங்களில் அவர் "மிக மோசமாகத் தோல்வியடைந்துவிட்டதாக" குற்றம் சாட்டினார்.

"அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!" என்று டிரம்ப் தனது பதிவை நிறைவு செய்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு