இப்படியும் ஒரு ஆசிரியையா? இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்த விடாமுயற்சி

செங்கமலம் நாச்சியார்
    • எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

கொரோனா பெருந்தொற்று மாணவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில பள்ளிகளில் மாணவர்களின் நடவடிக்கைகள் அத்துமீற, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இரண்டாம் தாயாக இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ஒருபுறம் பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்களை வீடு தேடிச் சென்று அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி பயல உதவி செய்து, மற்றொருபுறம் பள்ளி வளாகத்தில் மது பாட்டில்களும் குப்பைகளையும் தொடர்ந்து வீசி வந்த இளைஞர்களை தன்னுடைய செயல்கள் மூலம் திருத்தி அவர்களை வேலைக்கும் செல்ல வைத்து அவர்களுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறார் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் வடமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் செங்கமலம் நாச்சியார்.

2018 ஆம் ஆண்டு வடமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியராக செங்கமலம் நாச்சியார் பணியில் சேரும் போது இந்த பள்ளியில் 69 மாணவர்கள் படித்து வந்தனர்.

செங்கமலம் நாச்சியார்

பட மூலாதாரம், Sengamalam Nachiyar

இன்று இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 115. வீட்டுக்கு வீடு தலைமையாசிரியர் செங்கமலம் நாச்சியாரை கொண்டாடுகின்றனர் ஊர் பொதுமக்கள். எப்படி இது சாத்தியம் என்பதை செங்கமலம் நாச்சியார் பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம்.

உங்களுடைய ஆசிரியர் பயணம் எப்படி தொடங்கியது?

ஆசிரியர் பணியில் 27 ஆண்டுகளை கடந்திருக்கிறேன். தலைமை ஆசிரியையாக 14 ஆண்டுகள் கடந்து பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். அரசுப் பள்ளியில் பெரும்பான்மையான மாணவர்களுக்கு அவர்களின் படிப்பை கவனிக்க பெற்றோர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் நான் பணியாற்றிய அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் தனிக்கவனம் எடுத்து அவர்களை கண்காணித்து அவர்களின் படிப்பை தொடர செய்திருக்கிறேன்.

ஆசிரியர் பணியில் உங்களுக்கு என்ன சவால்கள் இருந்த?

2012 இல் சாமிநாதபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்த போது, என் பள்ளியில் படித்த மாணவர்கள் வறுமை காரணமாக திடீரென்று படிப்பை நிறுத்தி விட்டு ஆடு மேய்க்க போய்விட்டனர். பிறகு அவர்களை காட்டுக்குள் தேடிப்போய் அவர்களை தூக்கிக் கொண்டு பள்ளி வருவேன். அப்படி படிக்க வைத்த மாணவர் ஒருவர், இங்கு ஆரம்பக்கல்வி படித்து முடித்துவிட்டு பக்கத்து ஊரில் போய் படித்து பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது.

கல்வியில் விருப்பம் இல்லாத மாணவர்களை எப்படி பள்ளிக்கு வரவழைத்து படிக்க வைத்தீர்கள்?

ஒரு மாணவர் பள்ளிக்கு வரவில்லை என்றாலோ அல்லது தொடர்ந்து விடுமுறை எடுத்தாலோ உடனே அவனுடைய வீட்டுக்கு சென்று பேசுவேன். கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துச் சொல்லி 'அம்மா சொன்னா கேக்கனும் சாமி.. பள்ளிக்கூடத்துக்கு மட்டும் வந்துடு சாமி.. மத்தத நான் பாத்துக்கறேன்னு' சொல்லி அழைத்து வருவேன். பிறகு தனிக்கவனம் எடுத்து படிப்பு சொல்லித் தருவேன்.

சில பேர் சுமாராக படிப்பார்கள். ஆனால், ஆக்டிவ்வாக இருப்பார்கள். என்சிசி மாஸ்டரிடம் அந்த பிள்ளைகளுக்கு கூடுதல் கவனம் எடுக்க சொல்லி ராணுவத்தில் சேருவதற்கு தேவையான உடற்பயிற்சிகளை அளிக்கச் சொல்வேன்.

அப்படி பயிற்றுவிக்கப்பட்ட மாணவர் ஒருவர் இந்திய நேபாள எல்லையில் எஸ்.ஐ. ஆக பணிபுரிகிறார்.

இப்போது இருக்கும் வடமலாபுரம் பள்ளி நீங்கள் வருவதற்கு முன்பு எப்படி இருந்தது?

நான் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக வருவதற்கு முன்பு பள்ளி வளாகத்தில் இரவானால் மதுபாட்டில்களும், குப்பைகளும் தினமும் போட்டுச் செல்வார்கள். பள்ளி அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சாணியை கரைத்து விட்டு சிறுநீர் கழித்து வைத்திருப்பார்கள். பள்ளிக்கு அருகில் உள்ள சுவர்களில் வரிசையாக உட்கார்ந்து எங்களை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், நான் உட்பட 3 ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வந்து அனைத்தையும் சரி செய்து சில நேரங்களில் நாங்களே வளாகத்தை பெருக்கி சுத்தம் செய்வோம்.

ஒரு நாள் அந்த இளைஞர்களிடத்தில் சென்று, 'இது உங்க ஊர் பள்ளிக்கூடம் பா. இங்க எல்லாரும் நல்லா படிச்சு வேலைக்கு போனா உங்களுக்கு பெருமைதானே.. புரிஞ்சிக்கோங்க பா' என்று சொல்லிவிட்டு வந்தேன். முதல் நாள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தேன்.

செங்கமலம் நாச்சியார்

பள்ளி குழந்தைகளுக்காக 2 சின்டெக்ஸ் டேங்க் வாங்கி அதில் தண்ணியை நிரப்பினேன். அதற்கு அருகிலேயே சோப்புகளை வாங்கி வைத்து யாருக்காவது தேவைப்பட்டால் இங்கேயே குளித்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். அந்த இளைஞர்கள் அங்கு வந்து குளிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், நான் அறிவுரைகள் சொல்வதை மட்டும் நிறுத்தவே இல்லை. ஒரு நாள், பாவம்டா அந்த டீச்சர் என்று தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள்.

பின்னர் அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. பள்ளி வளாகத்தில் இரவு வேளைகளில் மது பாட்டில்கள் மற்றும் குப்பைகள் போடப்படுவது நிறுத்தப்பட்டது. வெட்டியாக இருந்த இளைஞர்கள் வேலைக்கு செல்லத் தொடங்கினார்கள்.இப்போது எங்கள் பள்ளி வளாகம் மிகத் தூய்மையாக இருக்கிறது.

ஊர்மக்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

கடந்த 1 ஆம் தேதி இந்த ஊரில் கிராமசபை நடைபெற்றது. அதில் எங்கள் பள்ளி தூய்மைப் பள்ளி விருதுக்கும் சிறந்த பள்ளி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு காரணம் இந்த ஊர் இளைஞர்கள் தான் என்றும் அவர்களை பாராட்டி பேசினேன். பின் வரிசையில் முழுக்க உட்கார்ந்திருந்த இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அவர்களை பெற்றவர்களின் மனதும் முகமும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஊர்தலைவர் அந்த தருணத்தில் கையெடுத்து கும்பிட்ட தருணம் வாழ்வில் மறக்க முடியாது.

இந்த 27 ஆண்டு ஆசிரியர் பணியில் என்னிடம் படித்த எந்த குழந்தையும் ஜெயிலுக்குப் போகவில்லை.. விவாகரத்து வாங்கவில்லை..

நன்றாக படிக்கும் குழந்தை எங்கிருந்தாலும் நன்றாக படிக்கும். ஆனால், குடும்ப சூழலும் சமூக சுழலும் பொருளாதார சூழலும் சரியில்லாத ஒரு பிள்ளைக்கு கடைசி நம்பிக்கை அரசுப் பள்ளி தான். அந்த குழந்தைக்கு நம்பிக்கை கொடுத்து அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்குவது தான் ஆசிரியர் பணி.. அரசு பள்ளியில் படிக்க வைத்தால் ஆசிரியர்கள் எப்படியாவது தன் பிள்ளையை கரையேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கை எளிய மனிதர்கள் மனதில் உண்டு. அந்த நம்பிக்கையை நிஜமாக்கும் முயற்சியில் தொடர்ந்து என்னை ஈடுபடுத்தி வருவது மகிழ்ச்சி.

காணொளிக் குறிப்பு, ஒரு கிராமமே கொண்டாடும் அரசுப் பள்ளி தலைமையாசிரியை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: