இ20, இ85: எத்தனால் கலப்பால் கார், பைக் மைலேஜ் குறையுமா? 10 கேள்விகளுக்கு எளிய விளக்கம்

இ85, இ100, காப்பீடு, கரும்புச் சாறு, எத்தனால்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, எத்தனால் என்பது ஒரு வகையான ஆல்கஹால் ஆகும்.
    • எழுதியவர், குல்ஷங்குமார் வன்கர்
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
  • உங்களது காரின் எரிபொருள் டேங்கில் எவ்வளவு பெட்ரோலும் , எவ்வளவு எத்தனாலும் உள்ளது?
  • எத்தனால் உண்மையிலேயே நமது கார்களின் சராசரி மைலேஜைக் குறைத்துள்ளதா?
  • எதிர்காலத்தில் எத்தனால் மூலம் மட்டுமே இயங்கக்கூடிய கார்கள் இந்தியாவில் வலம் வருமா?
  • மேற்கூறிய இந்தக் கேள்விகளில் ஏதேனும் ஒன்று சமீப நாட்களில் உங்கள் மனதில் தோன்றியதா?

ஏனென்றால், தற்போது இந்த விவகாரங்கள் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

  • ஆனால் எத்தனால் என்றால் என்ன?
  • 'கரும்புச் சாறுதான் எத்தனால்' என்று நகைச்சுவையாகக் கூறுவது எந்த அளவுக்குப் பொருத்தமானது?
  • இ85 (e85) எரிபொருளை எந்தெந்த வாகனங்கள் பயன்படுத்த முடியும்?
  • சமீப காலத்தில் இ100 (E100) பற்றி ஏன் இவ்வளவு அதிகமாகப் பேசப்படுகிறது?

இத்தகைய 10 கேள்விகளுக்கான பதில்களை எளிய முறையில் இங்கு தெரிந்துகொள்வோம்.

1. எத்தனால் என்றால் என்ன?

இ85, இ100, காப்பீடு, கரும்புச் சாறு, எத்தனால்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இ85 (E85) எரிபொருள் ஜூன் 5, 2026 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை வழக்கமான இ20 பெட்ரோலை விட லிட்டருக்கு 20 ரூபாய் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எத்தனால் என்பது ஒரு வகையான ஆல்கஹால் ஆகும். இந்த சொல் எத்தில் ஆல்கஹால் என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் வேதியியல் சமன்பாடு C2H5OH. இது நிறமற்றது.

எத்தனால் கரும்பு மற்றும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால், இதை பெட்ரோலுடன் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்துவதை இந்திய அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.

இந்த செயல்முறை பிளெண்டிங் (கலத்தல்) என்று அழைக்கப்படுகிறது.

கலக்கப்படும் எத்தனாலின் அளவைப் பொறுத்து அந்த எரிபொருளின் பெயர் அமைகிறது. உதாரணமாக, பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டால் அது இ10 (E10) என்றும், 20 சதவீதம் கலக்கப்பட்டால் அது இ20 (E20) என்றும் அழைக்கப்படுகிறது.

2. எத்தனால் ப்ளெண்டிங் (கலத்தல்) ஏன் செய்யப்படுகிறது?

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பாலில் தண்ணீரைச் சேர்ப்பது கலப்படம் என்று அழைக்கப்படுகிறது. அதேசமயம், கவனமாகப் பரிசோதித்த பிறகு ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் திட்டமிட்டு கலக்கப்படும்போது, அது பிளெண்டிங் (கலத்தல்) என்று அழைக்கப்படுகிறது.

கவனமாகப் பரிசீலித்து, ஆய்வு செய்த பிறகே எத்தனால் ப்ளெண்டிங் (கலப்பு) செய்யப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. இதற்கான சில காரணங்களையும் அரசு வழங்கியுள்ளது.

இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, அதற்கான தொகையை டாலர்களில் செலுத்துகிறது.

எரிபொருளில் 20 சதவீதம் எத்தனால் சேர்ப்பதன் மூலம், அதே அளவிலான தூய பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெயின் தேவை குறையும், இதனால் டாலர் சேமிக்கப்படும்.

எத்தனால் சோளம் மற்றும் கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே, விவசாயமும் கிராமப்புறப் பொருளாதாரமும் இந்த உற்பத்தியில் பங்களிக்கின்றன.

மத்திய அரசு தரவுகளின்படி, ஜூன் 2026-க்குள் நாடு முழுவதும் உள்ள கரும்பு மற்றும் சோள விவசாயிகள் ₹1.58 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளனர்.

பெட்ரோலை விட எத்தனால் எரிக்கப்படும்போது குறைவான புகையையே வெளியிடுகிறது. கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற பசுமை இல்ல வாயுக்களின் மொத்த உமிழ்வை 61 சதவீதம் வரை குறைக்க இது உதவும் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது.

3. எத்தனால் கலப்பது தொடர்பாக அரசின் இலக்கு என்ன?

இ85, இ100, காப்பீடு, கரும்புச் சாறு, எத்தனால்

பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, 'எத்தனால் 100' டெல்லியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இர்வின் சாலை சேவை நிலையத்தில் கிடைக்கிறது.

இந்திய அரசாங்கம் 2014 ஆம் ஆண்டில் பெட்ரோலுடன் 1.5 சதவீதம் எத்தனாலைக் கலக்கத் தொடங்கியது. 10 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கு ஜூன் 2022 இல் எட்டப்பட்டது, பின்னர் 2023 இல் இது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

2025 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் இ20 (E20) கலப்பு இலக்கை வெற்றிகரமாக அடைந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

முன்னதாக, இதற்கான காலக்கெடு 2030 ஆம் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இன்று இந்தியாவில் விற்பனை செய்யப்படும், பிஎஸ்6 (BS6) தரநிலைகளுக்கு இணங்கக்கூடிய பெட்ரோல் வாகனங்கள் இ20 அல்லது 20 சதவீதம் எத்தனால் கொண்ட பெட்ரோலில் இயங்கும். அதைவிட அதிக எத்தனால் கொண்ட எரிபொருள்கள் இந்த வாகனங்களுக்குப் பொருத்தமானவை அல்ல.

4. எத்தனால் கலப்பால் கார், பைக்கின் மைலேஜ் குறையுமா?

பெட்ரோலை விட எத்தனால் குறைந்த ஆற்றலையே கொண்டுள்ளது. இதனால் தான் பைக் அல்லது காரின் மைலேஜ் குறையக்கூடும்.

வல்லுநர்களின் கூற்றுப்படி, வாகனத்தின் என்ஜினில் சில தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்வதன் மூலமும், கூடுதல் பாகங்களை நிறுவுவதன் மூலமும் இதை மேம்படுத்த முடியும், ஆனால் இந்தத் தொழில்நுட்பம் தற்போது எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.

இ20 (E20) எரிபொருள் வாகனங்களின் மைலேஜை 2 முதல் 6 சதவீதம் வரை மட்டுமே குறைக்கிறது என்று இந்திய அரசு கூறுகிறது.

ஆனால், வாகனத்தின் சராசரி மைலேஜ் 30 முதல் 50 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக உண்மையான பயனர்கள் புகார் கூறுகின்றனர்.

5. இ85 என்பது என்ன?

இ85, இ100, காப்பீடு, கரும்புச் சாறு, எத்தனால்
படக்குறிப்பு, கார்களில் உள்ள பெட்ரோல் டேங்க் மூடியில் அதிகபட்ச எத்தனால் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

20 சதவீதம் எத்தனால் கொண்ட பெட்ரோல் இ20 (E20) என்று அழைக்கப்படுவதைப் போலவே, 85 சதவீதம் எத்தனால் கொண்ட பெட்ரோல் இ85 (E85) என்று அழைக்கப்படுகிறது.

இ85 எரிபொருள் ஜூன் 5, 2026 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது வழக்கமான இ20 பெட்ரோலை விட லிட்டருக்கு 20 ரூபாய் குறைவாகக் கிடைக்கிறது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இதுகுறித்துக் கூறுகையில், "இ85 சில அம்சங்களில் சிறந்தது, ஆனால் கலோரிஃபிக் மதிப்பு (எரிபொருளின் ஆற்றல் சேமிப்பு திறன்) போன்றவற்றை மனதில் கொள்ளும்போது, என்ஜினின் ஆற்றல் குறைவாக இருக்கும், ஆனால் விலையின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை, இந்த ஆற்றல் அல்லது சக்தியின் இழப்பை ஈடுசெய்யும் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.

இ85 எரிபொருள் 20 சதவீதம் மலிவானதாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.

ஜூன் 3 அன்று, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஃபிளெக்ஸ் ஃபியூயல் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்பிளெண்டர் மற்றும் ஹெச்எஃப் டீலக்ஸ் ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியது.

இதற்கடுத்து, ஜூன் 4 அன்று, மாருதி சுசூகி நிறுவனம் தனது வேகன்-ஆர் காரின் ஃபிளெக்ஸ் ஃபியூயல் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியது.

ஃபிளெக்ஸ் ஃபியூயல் வேகன்-ஆரின் விலை வழக்கமான பெட்ரோல் (இ20) வேகன்-ஆரை விட சற்று அதிகமாக இருக்கும் என்பதை இங்கே குறிப்பிடத்தக்கது.

எனவே எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதிக விலை கொண்ட புதிய தொழில்நுட்பம் போன்ற அபாயங்கள் உள்ளன.

6. சாதாரண கார்களில் இ85 எரிபொருளைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

இ85, இ100, காப்பீடு, கரும்புச் சாறு, எத்தனால்
படக்குறிப்பு, இ85 எரிபொருளை இந்தியன் ஆயில், ஹெச்பி மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.

இ85 (E85) எரிபொருளில் அதிகப்படியான எத்தனால் உள்ளது என்றும், இது பெட்ரோல் அல்லது இ20 எரிபொருளுக்காக வடிவமைக்கப்பட்ட என்ஜின்களில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

எத்தனால் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது, அதாவது இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது.

எனவே, எத்தனால் கலந்த எரிபொருள் என்ஜின் பாகங்கள், எரிபொருள் குழாய்கள், எரிபொருள் தொட்டிகள், பைப்லைன், டேங்க் சீல் போன்றவற்றை சேதப்படுத்தலாம் அல்லது தேய்மானமடையச் செய்யலாம்.

இதன் காரணமாக, இந்த வாகனங்களின் பாகங்களை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்புக்கும் செலவு அதிகரிக்கிறது. அதன் சுமை நுகர்வோர் மீது விழுகிறது.

தற்போதைய கார்களில், அதிகபட்சமாக எத்தனை சதவீத எத்தனால் பயன்படுத்தலாம் என்ற தகவல் பெட்ரோல் டேங்க் மூடியில் கொடுக்கப்பட்டுள்ளது.

7. எத்தனால் பயன்படுத்துவது வாகனக் காப்பீட்டை பாதிக்குமா?

சமீபத்தில், இ20 (E20) எரிபொருளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சேதங்களுக்குச் சில காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது என்று சில இடங்களில் செய்திகள் வெளியாகின.

இ85, இ100, காப்பீடு, கரும்புச் சாறு, எத்தனால்

பட மூலாதாரம், ICICI Lombard Blog

படக்குறிப்பு, ஐசிஐசிஐ லோம்பார்ட் காப்பீட்டு நிறுவனம் ஜூன் 9 அன்று வெளியிட்ட ஒரு வலைப்பதிவு.

ஜூன் 9 அன்று வெளியிடப்பட்ட ஒரு வலைப்பதிவில் , ஐசிஐசிஐ லம்பார்ட் காப்பீட்டு நிறுவனம், "இ20 எரிபொருளுக்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் நீங்கள் இ20 எரிபொருளைப் பயன்படுத்தினால், உங்கள் காப்பீடு செல்லுபடியாகும் மற்றும் நீங்கள் காப்பீட்டுத் தொகையை கோரும் செயல்முறை பாதிக்கப்படாது..." என்று கூறியிருந்தது.

"ஆனால், உங்கள் வாகனத்திற்கு என வடிவமைக்கப்படாத ஒரு எரிபொருளை நீங்கள் அதில் பயன்படுத்தினால், அது தவறான பயன்பாடு அல்லது அலட்சியமாகக் கருதப்படும்"என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வலைப்பதிவைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையை அடுத்து, அந்த நிறுவனம் இறுதியாக, "வாகனக் காப்பீடு என்பது விபத்துகள் அல்லது திருட்டு போன்ற அவசர காலங்களுக்கானது. இதற்கும் வாகனத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் வகைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று தெளிவுபடுத்தியது.

"எனவே, வழக்கமான எரிபொருளைப் பயன்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும் எந்தவொரு கோரிக்கையும், இ20 எரிபொருளைப் பயன்படுத்துவதற்கும் ஏற்றுக்கொள்ளப்படலாம். நீங்கள் பயன்படுத்தும் எரிபொருளின் அடிப்படையில் ஐசிஐசிஐ லம்பார்ட் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்காது"என்றும் கூறியது.

ஆகஸ்ட் 12, 2025 அன்று, மத்திய அரசும் இத்தகைய வதந்திகளை மறுத்ததுடன், இ20 எரிபொருளைப் பயன்படுத்துவது வாகனக் காப்பீட்டைப் பாதிக்காது என்று தெளிவுபடுத்தியது.

இ85, இ100, காப்பீடு, கரும்புச் சாறு, எத்தனால்

பட மூலாதாரம், ICICI Lombard

படக்குறிப்பு, ஐசிஐசிஐ லம்பார்டின் விளக்கம்

8. டீசல் கார்களிலும் எத்தனாலைப் பயன்படுத்த முடியுமா?

தற்போதைய நிலையில், ​​பெட்ரோலுடன் மட்டுமே எத்தனால் கலக்கப்படுகிறது.

எனவே, டீசல் இன்னமும் பெருமளவு தூய்மையாகவே உள்ளது என்று கூறலாம்.

இருப்பினும், ஐசோபியூட்டனால் எனப்படும் மற்றொரு ஆல்கஹாலை டீசலில் கலக்கலாம் என்றும், இதுகுறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

9. இ100 என்பது என்ன?

இ100 என்பது 100 சதவிகித எத்தனால் என்பதைக் குறிக்கிறது.

இது வேறு எந்த எரிபொருளுடனும் கலக்கப்படாது.

ஜூன் 10 அன்று நாக்பூரில் பேசிய நிதின் கட்கரி, 100 சதவீத எத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கும் தனது அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மாருதி சுசுகி, எம்ஜி, ஹூண்டாய் மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் விரைவில் தங்களது கார்களின் இ100 மாடல்களை அறிமுகப்படுத்தும் என்றும் கூறினார்.

இந்த எரிபொருள் இ85-ஐ விட குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது, ஆனால் அது தேவைப்படும் வாகனங்களுக்கான செலவு அதிகமாகவே இருக்கும்.

10. ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்?

இ85, இ100, காப்பீடு, கரும்புச் சாறு, எத்தனால்

பட மூலாதாரம், Jwala Kotesh/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, ஒரு ஆய்வின்படி, அரிசி மற்றும் கோதுமையிலிருந்து ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்வதற்குச் சுமார் 4,480 லிட்டர் முதல் 4,900 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது (மாதிரிப் படம்).

மக்காச்சோளம் மற்றும் கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

இந்த இரண்டு பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படும் இடங்களில், உதாரணமாக அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில், எத்தனாலும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட எத்தனால் நுகர்வு குறித்த அதிகாரப்பூர்வ ஆவணத்தின்படி, ஒரு டன் கரும்பிலிருந்து 100 கிலோகிராம் சர்க்கரையும் 70 லிட்டர் எத்தனாலும் உற்பத்தி செய்ய முடியும்.

ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க ஏறக்குறைய 3,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

மற்ற தானியங்களிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்வதை விட, மக்காச்சோளத்திற்கு ஒப்பீட்டளவில் குறைந்த அளவே (சுமார் 2,570 லிட்டர்) தண்ணீர் தேவைப்படுவதால், அது அதிக சிக்கனமானது என்றும் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

2016 ஆம் ஆண்டு ஆய்வின் அடிப்படையில், அரிசி மற்றும் கோதுமையிலிருந்து ஒரு லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்வதற்கு, சுமார் 4,480 லிட்டர் முதல் 4,900 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது என்றும் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு