உயிர் போகும் அபாயம்; கடும் வெப்பத்தை தாண்டி இரானிய எரிபொருளை பாகிஸ்தானுக்குக் கடத்தும் பைக் ஓட்டுநர்கள்

- எழுதியவர், பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மஸாருடைய சிறிய மோட்டார் சைக்கிளில், அவர் அமர்வதற்கு கூட போதிய இடம் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் ஏற்றப்பட்டுள்ளன.
அவருடைய தேய்ந்துபோன அந்த பைக், மொத்தம் சுமார் 600 பவுண்ட் (272 கிலோ) எடையுள்ள ஐந்து 70 லிட்டர் எண்ணெய் கொள்கலன்களை சுமந்து செல்கிறது.
அந்த எரிபொருள், கயிறு மற்றும் நூலால் கட்டப்பட்டு, அவருடைய மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் ஏழ்மையான மாகாணமான பலூசிஸ்தானில் உள்ள மஸ்துங்கில் இருக்கும் ஒரு திறந்தவெளி எரிபொருள் சந்தையில் மஸார் இதனை வாங்கினார். அப்பகுதியில் தான் அவர் வசிக்கிறார்.
பிளாஸ்டிக் கொள்கலன்கள் ஏற்றப்பட்ட பிக்-அப் டிரக்குகள், இரானில் இருந்து எல்லை வழியாக கடத்தி வரப்பட்ட எரிபொருளை விற்பனை செய்வதற்காக அங்கு கொண்டு வருகின்றன.
இரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக பெட்ரோலிய பொருட்கள் கடத்தப்படுவது பல ஆண்டு காலமாக நடந்து வரும் நிலையில், இரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரின் விளைவாக சமீபத்திய மாதங்களில் இது அதிகரித்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இந்தப் போர் ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் விநியோகத்தை பெருமளவில் சீர்குலைத்துள்ளதால், எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இது இரானில் இருந்து மலிவாக கடத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவையை பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது.
பலூசிஸ்தானில் உள்ள ஆயிரக்கணக்கான கடத்தல்காரர்களைப் போலவே, பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றப்பட்டுள்ள மஸார் என்பவரும், பிற திறந்தவெளி சந்தைகளுக்கும் அதிகாரப்பூர்வமற்ற பெட்ரோல் நிலையங்களுக்கும் எரிபொருளை கொண்டு செல்கிறார்.
பூமியின் வெப்பமான பகுதிகளில் ஒன்றின் வழியாக 218 மைல்கள் பயணித்து, அண்டை மாகாணமான சிந்துவுக்கு இந்த எரிபொருளைக் கொண்டு செல்ல அவர் தயாராகி வருகிறார்.
பலூசிஸ்தானில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் (120°F) வரை உயரக்கூடும், இதனால் பிளாஸ்டிக் எரிபொருள் கலன்கள் வீங்கி மென்மையாகக்கூடும்.
மஸார் பைக் ஓட்டும்போது அவை உடைந்தாலோ அல்லது மூடியில் இருந்து கசிந்தாலோ, எரிபொருள் தீப்பிடிக்கும் மற்றும் வெடிக்கும் அபாயமும் உள்ளது.
மேலும், இந்த வழியில் கடத்தல்காரர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்.

இங்கு வேறு வகையான ஆபத்துகளும் உள்ளன.
கூடுதல் தன்னாட்சியைக் கோரி செயல்படும் பிரிவினைவாத ஆயுதக் குழுக்களுக்கும், பாகிஸ்தான் படைகளுக்கும் இடையே பல ஆண்டு காலமாக பலூசிஸ்தானில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோதலுக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
"எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் தான் நாங்கள் இதைச் செய்கிறோம்" என்று பிபிசி உலக சேவையிடம் கூறும் மஸார், "வெப்பம் அதிகமாக இருக்கிறது, விலைகள் அதிகமாக உள்ளன, நாங்கள் இரவும் பகலும் சாலையிலேயே கழிக்கிறோம்"என்கிறார்.
கடத்தல் நடவடிக்கைகளின் துல்லியமான அளவு குறித்துத் தெரியவில்லை.
ஆனால், 2024 ஆம் ஆண்டில் ஜப்பானிய செய்தி வலைத்தளமான நிக்கேய் ஏசியா (Nikkei Asia), பாகிஸ்தானின் உளவு அமைப்புகளிடமிருந்து கசிந்த ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி, ஆண்டுதோறும் இரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் 1 பில்லியன் டாலர் (745 மில்லியன் பவுண்ட்) மதிப்பிலான எரிபொருள் கடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
இந்த ஆண்டு மே மாதத்தில், பாகிஸ்தானின் ஐந்து முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எல்லை தாண்டிய பெட்ரோலியப் பொருட்களின் வரத்து அதிகரித்து வருவதாகக் கூறி, இதில் தலையிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஒரு கடிதத்தை அனுப்பின.
இதற்கிடையில், இந்த மாதத்தில், பாகிஸ்தானின் எண்ணெய் தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எண்ணெய் நிறுவனங்களின் ஆலோசனைக் குழு, அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தில், ஆண்டின் இந்த காலத்துக்கான அதிகாரப்பூர்வ பெட்ரோலிய விற்பனை 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது என்றும், இதற்கு எரிபொருள் கடத்தல் அதிகரிப்பதும் ஒரு காரணம் என்றும் கூறியுள்ளது.

முப்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் மஸார், தனது ஒரு குழந்தை மற்றும் பல சகோதரர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டும் நபராக உள்ளார்.
வறட்சி காரணமாக தன்னால் விவசாயம் செய்ய முடியாமல் போனதால், மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு, தான் ஒரு எரிபொருள் கடத்தல்காரராக மாறியதாக அவர் கூறுகிறார்.
நிக்கேய் ஏசியா சரிபார்த்த, கசிந்த பாகிஸ்தானிய உளவுத்துறை அறிக்கையின்படி, இரான் மற்றும் பாகிஸ்தான் இடையே எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள பலூசிஸ்தானைச் சேர்ந்த 24 லட்சம் பேரில் இவரும் ஒருவர்.
பாகிஸ்தானில் எரிபொருள் கடத்தல் சட்டவிரோதமானது, சிறிய வழக்குகளில் அபராதம் மற்றும் வாகன பறிமுதல் முதல் பெரிய அளவிலான கடத்தல் நடவடிக்கைகளுக்கு சிறைத்தண்டனை வரை இதற்கான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
ஆனால், பலூசிஸ்தானில் உள்ள குவெட்டா வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் முன்னாள் தலைவரான ஃபிதா உசேன் தஷ்டி, அப்பகுதியில் வேலை வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதால், இந்த பிராந்தியத்தின் பொருளாதாரத்துக்கு இது மிக முக்கியமானது என்று கூறுகிறார்.

மேற்கே இரானையும் வடக்கே ஆப்கானிஸ்தானையும் எல்லையாகக் கொண்ட பலூசிஸ்தான், பாகிஸ்தானின் நிலப்பரப்பில் சுமார் 44 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் மக்கள் தொகையில் வெறும் 6 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது.
கனிம வளங்கள் நிறைந்திருந்தாலும், உலகின் மிக ஏழ்மையான சில பகுதிகளைப் போன்றே இங்கும் வறுமை நிலவுவது, அப்பகுதியில் காணப்படும் கோபத்துக்கு ஒரு காரணமாக இருந்து வருகிறது.
"மக்கள் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்களுக்கு வேறு வழியில்லை" என்று கூறும் தஷ்டி, இப்பகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்க பாகிஸ்தான் அரசு இன்னும் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
"முதுகலைப் பட்டம் பெற்று வெளிவரும் ஒரு மாணவர் கூட இறுதியாக இந்த எண்ணெய் தொழிலில் தான் இணைகிறார்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றப்பட்டுள்ள இர்ஃபான், தனது உடல் குறைபாடு காரணமாக தன்னால் செய்யக்கூடிய வேறு வேலை எதுவும் இல்லை என்று கூறுகிறார்.
போலியோ நோயால் பாதிக்கப்பட்ட பிறகு, அவருடைய ஒரு கால் மற்றும் ஒரு கையின் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அவரும் பல மாதங்களாக கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
பெட்ரோலை விட டீசல் பாதுகாப்பானது என்பதாலும், எளிதில் தீப்பற்ற வாய்ப்பு குறைவு என்பதாலும் அவர் டீசலைக் கொண்டு செல்கிறார்.
"என்னால் பெட்ரோலை எடுத்துச் செல்ல முடியாது, ஏனென்றால் ஒருவேளை அது தீப்பிடித்தால் என்ன செய்வது? என்னால் எழுந்து நிற்க முடியாவிட்டால், எனக்குக் கடுமையான தீக்காயம் ஏற்படும்" என்று அவர் கூறுகிறார்.

கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் மிகவும் சிக்கலானது .
குறிப்பாக இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பகைமையை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யும் இந்த நேரத்தில் இது மேலும் சிக்கலாகிறது.
பாகிஸ்தான் பல்வேறு காலகட்டங்களில் இந்த சட்டவிரோத வர்த்தகத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது, ஆனால் கடத்தலின் அளவு மீண்டும் அதிகரிக்கவே செய்துள்ளது.
900 கி.மீ. (560 மைல்) நீளமுள்ள எல்லையின் தொலைதூரப் பகுதிகளைக் கண்காணிப்பது கடினம் என்பதால், இதை முழுமையாகத் தடுப்பது கடினமாக உள்ளது.
பலூசிஸ்தானில் உள்ள பலருக்கு இந்த வேலை ஒரு வாழ்வாதாரமாக இருக்கிறது என்ற புரிதலும் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் உள்ளது.
கூடுதலாக, போக்குவரத்துச் செலவுகள், பாதுகாப்புச் சிக்கல்கள் மற்றும் மலிவான கடத்தல் பொருட்களின் போட்டி ஆகியவற்றால், எண்ணெய் நிறுவனங்கள் இந்த பிராந்தியத்தின் சில இடங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில்லை.
இரானிய குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு மானிய விலையில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்வதால், குற்றக் குழுக்களால் மலிவாக எரிபொருளை வாங்க முடிகிறது என்றும், இந்த கடத்தலுக்கு குற்றக் குழுக்களே காரணம் என்றும் இரான் குற்றம் சாட்டுகிறது.
ஆனால், சட்டவிரோத சந்தைகளைக் கண்காணிக்கும் 'மறைமுக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய முன்முயற்சி' அமைப்பைச் சேர்ந்த பேடி கின் கூறுகையில், "முக்கிய கடத்தல்காரர்கள் ஐஆர்ஜிசி [இஸ்லாமிய புரட்சிகர காவல்படை] அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் அல்லது அதனுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும், அவர்களின் நோக்கம் "நிச்சயமாக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடைகளைத் தவிர்ப்பது தான்" என்றும் கூறுகிறார்.
மேலும் , போரினால் ஏற்பட்டுள்ள விலை உயர்வை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, அந்த அரசுடன் தொடர்புடைய குழுக்கள் இப்போது அதிக எரிபொருளைக் கடத்த முயல்வதாகத் தான் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.
எரிபொருள் கடத்தலில் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்குமாறு இரானிய அரசாங்கத்திடம் பிபிசி கேட்டது. ஆனால் அதற்கு இரான் அரசாங்கம் பதிலளிக்கவில்லை.
'போர் தொடங்கியது, நாங்கள் பாதிக்கப்பட்டோம் '

பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள் என்று பல கடத்தல்காரர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
தனது துறைகளோ அல்லது பாதுகாப்புப் படைகளோ எரிபொருள் கடத்தலில் ஈடுபடவில்லை என்று பாகிஸ்தான் அரசு மறுக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், எரிபொருள் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு சட்ட அமலாக்கத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார் என்றும், கடந்த ஆண்டில் பாதுகாப்புப் படையினர் சுமார் 1.3 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் (கிட்டத்தட்ட 5 மில்லியன் டாலர்) மதிப்புள்ள எரிபொருளைப் பறிமுதல் செய்துள்ளனர் என்றும் பாகிஸ்தான் அரசு கூறுகிறது.
இந்தப் போர் தனது பணிக்கான செலவுகளை அதிகரித்துள்ளது என்று மஸார் கூறுகிறார்.
கடத்தப்படும் பெட்ரோலுக்கு அவர் செலுத்தும் விலை உயர்ந்துள்ளது, ஆனால் அவர் அதை விற்கும் விலை அப்படியே உள்ளது.
பெட்ரோல், உணவு மற்றும் மோட்டார் சைக்கிளை குத்தகைக்கு எடுத்ததற்கான செலவுகளுக்குப் பிறகு, அவர் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் (13 பவுண்டு) சம்பாதித்து வந்தார், ஆனால் இது தற்போது 3,000 ரூபாயாக (8 பவுண்டு) குறைந்துள்ளது. இது பாகிஸ்தானின் குறைந்தபட்ச ஊதியத்தை விட ஏறக்குறைய இரு மடங்கு அதிகம் ஆகும்.
"போர் தொடங்கியது, நாங்கள் பாதிக்கப்பட்டோம் " என்று மஸார் கூறுகிறார்.
மஸாரும் அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த 11 பேரும் பலூசிஸ்தானில் உள்ள மஸ்துங் மாவட்டத்தை விட்டு தங்கள் வீட்டை நோக்கிப் புறப்படும்போது, புழுதிப் புயல்களையும் உள்ளடக்கிய ஒரு நீடித்த வெப்ப அலையான வெப்பப் புயலில் சிக்கிக்கொள்கிறார்கள். இதில், புழுதிப் புயலும் அடங்கும்.
காயம் மற்றும் மரணம் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்துக் கேட்டபோது, "நான் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை" என்று கூறும் மஸார்,
"எப்படியும் நான் ஒரு நாள் இறக்கத் தான் வேண்டும். நான் இப்போதே கூட இறக்கலாம். யாருக்குத் தெரியும்? என்னை வாழ விடுவதா அல்லது என் உயிரை எடுப்பதா என்பது அல்லாஹ்வின் முடிவு"என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு














