மாநில அரசு கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனால் என்னவாகும்? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு அரசு மாநிலத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் மாநில அரசின் கடன் தொடர்பான புள்ளிவிவரங்களும் கொடுக்கப்பட்டிருந்தன.
வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் முந்தைய திமுக அரசின் செயல்பாடுகள் மீது விமர்சனங்களை வைத்திருந்தார்.
"மொத்த நிலுவை கடன் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ளது. உண்மையான கடன் அளவு 13.18 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது (இவை அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளையும் உள்ளடக்கியது)." என்று தனது உரையில் தெரிவித்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக அரசு மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை மறுத்ததோடு மாநிலத்தின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு உள்ளே இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வுகள் மாநில அரசு கடன் பெறுவது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளன, மாநில அரசு எங்கெல்லாம் கடன் பெற முடியும், அதனை எவ்வாறு திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்திய அரசியலமைப்பின் 292வது பிரிவு மத்திய அரசு கடன் பெறுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.
அதே போல அரசியலமைப்பில் 293வது பிரிவு மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான அதிகாரத்தை வழங்கி அதற்கான விதிகளையும் வகுக்கின்றன.
293வது பிரிவின்படி மாநில அரசுகள் உள்நாட்டு ஆதாரங்களில் இருந்து மட்டுமே கடன் பெற முடியும் என்றும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்பட வெளியில் இருந்து பெறும் கடன்களை மத்திய அரசால் மட்டுமே பெற முடியும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
மாநில அரசுகள் கடன் பெறுவது தொடர்பான கேள்விகளுக்கு பொருளாதார நிபுணர் கிருஷ்ணமூர்த்தி பிரபாகரன் பதிலளித்தார். அவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன:

பட மூலாதாரம், TNDIPR
தமிழ்நாடு அரசு எங்கிருந்து, யாரிடமிருந்தெல்லாம் கடன் வாங்கலாம்?
மாநில அரசுகள் உள்நாட்டில் கடன் பெறும்போது ரிசர்வ் வங்கி, சிறு சேமிப்புத் திட்டங்கள், நிரந்தர வைப்புத் தொகை திட்டங்கள் ஆகியவற்றில் இருந்து கடன் பெறலாம். வெளியில் இருந்து கடன் பெறுகிறபோது உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகமை ஆகிய நிறுவனங்களில் இருந்து மத்திய அரசின் உத்தரவாதம் மூலம் கடன் பெறப்படுகிறது.
எதன் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு கடன் வழங்கப்படுகிறது?
ஓவ்வொரு மாநிலத்துக்கும் நிதி ஆரோக்கிய குறியீடு (Fiscal Health Index) நிதி ஆயோக் அமைப்பால் வெளியிடப்படுகிறது. இவை ஓவ்வொரு மாநிலத்தின் நிதிச் செயல்பாடு மற்றும் நிலைத்தன்மையைக் கணக்கிட்டு வழங்கப்படுகிறது. ஒரு மாநிலத்தின் நிதி நிலைமை, கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய திறன் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கடன் வழங்கப்படும்.
நிதி நிலைமை நன்றாக இருக்கிறபோது வட்டி விகிதம் குறைவாக இருக்கும். குறிப்பிட்ட அளவை மீறி கடன் வாங்குகிறபோதும் அல்லது நிதிநிலைமை மோசமாகிறபோதும் ரிசர்வ் வங்கி கடுமையாக விதிகளை விதிக்கும். உரிய விதிமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை என்றால் அதற்கான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். அதை மீறியும் நிதி நிலைமை மோசமாக இருந்தால் கூடுதல் கடன்கள் நிராகரிக்கப்படலாம்.
நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும்.

பட மூலாதாரம், Getty Images
மாநில அரசுகள் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்தும்?
மாநிலத்தின் கடன் என்பது எப்போதும் பூஜ்ஜியம் என்கிற நிலையை அடையாது. பழைய கடன்களை அடைக்கும், அதே வேளையில் புதிய கடன் பெறப்படும், அவை பின்னர் அடைக்கப்படும். பொருளாதார அமைப்பு அவ்வாறு தான் இயங்குகிறது. அவை வரம்புக்குள் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி சீராக இருந்து மாநில அரசால் தனது சொந்த வருவாயை திரட்ட முடிகின்ற வரை கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் இருக்காது.
அசல் மற்றும் வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
கடன் இரண்டு வகைப்படுகிறது, மாநிலத்தின் நேரடி கடன் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசாங்கம் கொடுக்கின்ற உத்தரவாதம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறை கடனில் உள்ளது. ஆனால், அவை அரசின் நேரடி கடனின் கீழ் வராது. அந்தந்த துறைகள் அவற்றைத் திருப்பிச் செலுத்தும். அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில் மாநில அரசு அதற்கான உத்தரவாதத்தை வழங்கி, அதனை திருப்பிச் செலுத்தும்.
ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளும் தங்களின் சொந்த வருவாயில் இருந்து அசல் மற்றும் வட்டி தொகை திருப்பிச் செலுத்தப்படுகின்றன. அதனை நிதிநிலை அறிக்கையில் பார்க்க முடியும். அதேபோல, வெளியில் இருந்து வாங்கும் கடன்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம் வழங்குகிறது.
ஒரு மாநிலம் கடன் செலுத்த முடியாமல் போனால் என்ன ஆகும்?
மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தைப் பொருத்து கடன் கொடுப்பது தொடரும். அது மோசமாகும் பட்சத்தில் புது கடன்கள் கொடுக்கப்படுவது நிறுத்தப்படும். வருவாயைப் பெருக்கி கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அது முடியாத பட்சத்தில் மத்திய அரசு தலையிட்டு நிதியுதவி வழங்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு















