"கணவர் இறந்து 3 நாட்கள் ஆகிறது" - தமிழக மாலுமி நிஷாந்தின் மனைவி கூறுவது என்ன?

தூதுக்குடியைச் சேர்ந்த கப்பல் பணியாளர் மரணம், ஓமன்

பட மூலாதாரம், @FSUIINDIA

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஓமன் நாட்டின் டுக்ம் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எம்டி செலஸ்டியல் (MT Celestial) என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதன் (35 வயது) என்ற இரண்டாம் நிலை அதிகாரி, உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால், முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காத காரணத்தாலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும் கடந்த ஜூன் 11ஆம் தேதி மாலை நிஷாந்த் உயிரிழந்துள்ளார் என இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கமான எப்எஸ்யூஐ (FSUI) தெரிவித்துள்ளது.

நிஷாந்தின் உடலைப் பாதுகாக்க போதுமான குளிரூட்டும் வசதிகள் கப்பலில் இல்லாததாலும், மூன்று நாட்களைக் கடந்துவிட்டதால் உடல் அழுகத் தொடங்கிவிட்டதாகவும், எக்ஸ் தளத்தில் எப்எஸ்யூஐ பகிர்ந்துள்ள ஒரு காணொளியில் எம்டி செலஸ்டியல் கப்பலின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், நிஷாந்த் இறந்தது குறித்து கப்பல் நிறுவனத்திடம் இருந்து இதுவரை தங்களுக்கு எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை எனக்கூறும் நிஷாந்தின் குடும்பத்தினர், 'உடலை மீட்டுக்கொடுப்பது மட்டுமின்றி, அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'14 வருடங்களாக கப்பல் பணி'

தூதுக்குடியைச் சேர்ந்த கப்பல் பணியாளர் மரணம், ஓமன்
படக்குறிப்பு, நிஷாந்த் உயிர்த்தநாதன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்தநாதன் தனது 21ஆம் வயது முதலே கப்பல் பணியில் ஈடுபட்டு வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

நிஷாந்த் உயிர்த்தநாதனுக்கு சரோபின் என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலமாக தான் தனது கணவர் நிஷாந்த் உயிரிழந்ததை தெரிந்துகொண்டதாக கூறுகிறார் சரோபின்.

பிபிசி தமிழிடம் பேசிய சரோபின், "மத்திய கிழக்கில் போர் தொடங்கியது முதலே, நான் பயந்துகொண்டே இருந்தேன். எனது கணவரிடம் 10 நாட்களுக்கு முன்னர் பேசும்போது, 'கப்பலில் உணவுப் பொருட்கள் தீர்ந்து வருகிறது, அடிப்படை வசதிகளில் சிக்கலை எதிர்கொள்வதாகக்' கூறினார்" என்கிறார்.

"கடந்த வாரம் பேசும்போது, தனக்கு கடும் காய்ச்சல் என்றும், மருத்துவ உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். அருகில் இருக்கும் துறைமுகத்தில் உதவி கேட்டுள்ளோம். சீக்கிரம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்" என்கிறார் சரோபின்.

அதன் பின்னர் கணவரிடம் பேச முடியவில்லை எனக்கூறும் சரோபின், "கப்பலில் இணைய வசதி தொடர்ந்து கிடைப்பதில்லை என அவர் கூறி வந்தார், அவரிடமிருந்து அழைப்பு வரும் என எதிர்பார்த்து இருந்தோம். இடையில் அவரையும் கப்பலில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். அவர் இறந்துவிட்டார் என்பதை சமூக ஊடகங்கள் மூலமாக தான் தெரிந்துகொண்டோம்" என்கிறார்.

தற்போது வரை நிஷாந்த் பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை எனக்கூறும் சரோபின், "எனது கணவரின் உடலை எப்படியாவது மீட்டுக் கொண்டுவர மத்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

தூதுக்குடியைச் சேர்ந்த கப்பல் பணியாளர் மரணம், ஓமன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 'உடலை மீட்டுக்கொடுப்பது மட்டுமின்றி, நிஷாந்த் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்' என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிபிசி தமிழிடம் பேசிய நிஷாந்தின் உறவினர் ராபின், "10 மாதங்களுக்கு முன் தான் நிஷாந்திற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது, அதைப் பார்த்துவிட்டு சில மணிநேரங்களில் கப்பல் பணிக்கு புறப்பட்டார்." என்று கூறுகிறார்.

"போர்ச் சூழல் காரணமாக தான் கப்பல் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், தனக்கு இன்னும் மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை, எப்படியும் மீண்டு வந்துவிடுவேன் என்றும் அவர் சரோபினிடம் கூறியுள்ளார். ஆனால், இப்படி ஒரு தகவல் வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்கிறார் அவர்.

"கப்பல் நிறுவனம் நிஷாந்தின் மரணம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவருக்கு உடல்நலக் குறைபாடு இருப்பதாகக் கூறிவிட்டு, அழைப்பை துண்டித்துவிட்டனர். அதன் பிறகு நிறுவனத்திடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை, கப்பலில் இருந்தும் யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. நிஷாந்த் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஆனாலும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை" என்கிறார் ராபின்.

"நிஷாந்தின் நிலைமை கவலைக்கிடமானபோது, ​​அவரை வெளியேற்ற கப்பலில் இருந்தவர்கள் ஹெலிகாப்டர் உதவியைக் கோரியுள்ளனர். இருப்பினும், நிறுவனத்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவரது உடலைக் கூட பாதுகாக்க முடியாத சூழல் அங்கு இருப்பது வேதனையை அளிக்கிறது. எப்படியாவது அவரது உடலை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

குடும்ப பொருளாதாரச் சூழல் காரணமாகவே நிஷாந்த் ஆபத்தான கப்பல் பணிக்கு சென்றார் எனக்கூறும் ராபின், "நிஷாந்திற்கு 3 வயதில் மற்றும் 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இப்போது அவர் இறந்துவிட்டதால், அவரது குடும்பம் ஆதரவின்றி தவிக்கிறது. அவர்களுக்கு தமிழக அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இந்திய தூதரகம் கூறியது என்ன?

தூதுக்குடியைச் சேர்ந்த கப்பல் பணியாளர் மரணம், ஓமன்

பட மூலாதாரம், @FSUIINDIA

படக்குறிப்பு, நிஷாந்தின் உடலைப் பாதுகாக்க போதுமான குளிரூட்டும் வசதிகள் கப்பலில் இல்லை என கப்பல் ஊழியர்கள் பேசும் ஒரு காணொளியை எப்எஸ்யூஐ பகிர்ந்துள்ளது.

இதுதொடர்பாக, ஓமனில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை மாலை எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மருத்துவக் காரணங்களால் எம்.டி. செலிஸ்டியல் கப்பலில் உயிரிழந்த நிஷாந்த் உயிர்த்தநாதன் தொடர்பாக, ஓமன் அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் மற்றும் கப்பல் நிறுவனத்துடன் இந்திய தூதரகம் தொடர்ந்து பேசி வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "அந்தக் கப்பல் விரைவில் டுக்ம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலில் இருந்து அவரது உடலை விரைவாக மீட்பதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூதரகம் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதுடன், உடலை விரைவில் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கான அனைத்து நடைமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது" எனவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கமான எப்எஸ்யூஐ எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பான காணொளி ஒன்றை நேற்று (ஜூன் 13) பகிர்ந்தது. அதில், நிஷாந்தின் உடலை குளிர்ந்த தண்ணீர் பாட்டில்கள் கொண்டு பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பிபிசியால் அந்த காணொளியை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

மேலும் அதில், "எங்களின் இரண்டாம் நிலை அதிகாரியின் சடலம் இது. அவர் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார், அவரின் உடல் அழுகிவருகிறது. நாங்கள் இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டோம், ஆனால் எங்களுக்கு நேர்மறையான பதில் கிடைக்கவில்லை. எங்கள் நிறுவனம் எங்களிடம் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை" என்று கப்பல் ஊழியர்கள் பேசுவதாக பதிவிடப்பட்டுள்ளது.

உதவிக்காக தொடர்ச்சியான அழைப்புகள் விடுக்கப்பட்ட போதிலும், பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கவும் நிஷாந்தை அங்கிருந்து வெளியேற்றவும் தாமதமானதாக எப்எஸ்யூஐ தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு