ஐஏஎஸ் கனவு: தஞ்சாவூர் பெண்ணின் சிறு வயது லட்சியம் நிறைவேறும் சாத்தியம்

தஞ்சாவூர் ஏஞ்சலின் ரெனிட்டா

பட மூலாதாரம், Renitta

படக்குறிப்பு, பெற்றோருடன் ஏஞ்சலின் ரெனிட்டா
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

நீ என்னவாகப் போகிறாய் என்று கேட்டால், 'நான் கலெக்டர் ஆவேன்.' என்று நிறைய குழந்தைகள் சொல்வதைக் கேட்டிருப்போம். நீ கலெக்டர் ஆக வேண்டும் என்று குழந்தைகளுக்கு பலர் சொல்லிக் கொடுப்பதையும் பார்த்திருப்போம். குழந்தை மனதில் விதைத்தால், அது விருட்சமாகும் என்பதற்கு கண்முன் உதாரணமாகியிருக்கிறார் தஞ்சாவூர் மாவட்டத்து பெண் ஒருவர். ஏழு வயதில் தோன்றிய கனவை 24 வயதில் நனவாக்கும் நிலைக்கு வந்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் சுனாமி தாக்கியது. இது, பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அப்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியாக, அங்கு சென்றிருந்தார் ஏஞ்சலின் ரெனிட்டா. அவரும், அவரது குடும்பத்தினரும் நல்வாய்ப்பாக தப்பினர். ஆனால், பாதிப்புகளும் மீட்பு, நிவாரணப் பணிகளும் அவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில், ஒன்றியப் பொதுப் பணிகள் ஆணையம் (யு.பி.எஸ்.சி.) அண்மையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தமது தேர்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. இந்தியா முழுவதும் இருந்தும் 685 பேர் இந்திய குடிமைப் பணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

இதில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியவர்களில் ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏஞ்சலின் ரெனிட்டா.

சரி நாம் ஏஞ்சலின் ரெனிட்டா கதைக்கு வருவோம். ஒருவர் குடிமைப் பணித் தேர்வில் வெல்வது ஒன்றும் அப்படி அதிசயம் அல்லவே. இதில் என்ன சிறப்பு என்று தோன்றலாம். ஆனால், ரெஜினாவின் கதை ஊக்கமளிப்பது.

தமிழ்வழியில் பள்ளிக் கல்வி

தன் போராட்டம் வெற்றியைத் தழுவி இருப்பது குறித்து, இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது குறித்து ஏஞ்சலின் ரெனிட்டா பிபிசி தமிழிடம் கூறுகையில்,

ரெனிட்டா

பட மூலாதாரம், Renitta

''கார் ஓட்டுநர், புரோக்கராக நிரந்தரமில்லாத வருமானத்தில் உள்ள தந்தை ரவி. அதைக் கொண்டு குடும்பத்தை கவனிக்கும் தாய் விக்டோரியா, அண்ணன் விக்டர் செபாஸ்டின் என சராசரிக் குடும்பம் என்னுடையது. எங்கள் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தேன்.

பத்தாம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண் பெற்றேன். தொடர்ந்து 12ம் வகுப்பில் 1200க்கு 1,158 மதிப்பெண் பெற்றேன். உயர்கல்வியில், அண்ணா பல்கலைகழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் படித்து, இந்த பிரிவில் பல்கலைக்கழக அளவில், தங்கப் பதக்கம் பெற்றேன்.

கல்லூரியில் படிக்கும் போதே, சிவிஸ் சர்வீஸ் தேர்விற்கு தயாரானேன். முதல் முயற்சியில் கற்றுக்கொண்டு, இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளேன்..'' என்றார்.

சுனாமி ஏற்படுத்திய தாக்கம்

பொறியியல் பட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்ற நீங்கள் ஐ.ஏ.எஸ் ஆக விரும்பிய காரணம் என்ன என்று கேட்டதற்கு, " ஐ.ஏ.எஸ் என்றால் என்னவென்று தெரியாத எனது 7 வயதிலேயே ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். காரணம், நான் 2ம் வகுப்பு படிக்கும் போது எனது 2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவிற்கு, வேளாங்கண்ணி பேராலயத்திற்கு குடும்பத்துடன் சென்றோம்.

நாங்கள் அங்கிருந்த போதுதான் சுனாமி பேரலைத் தாக்கியது. இதில், பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர். பலர் உடமைகளை இழந்தனர். சில மணி நேரங்களில் பலரின் வாழ்க்கை அடியோடு மாறியது. எங்கும் மரண ஓலம், ஊரையும் மக்களையும் சிதைத்துப் போட்டது சுனாமி. அந்த மாவட்ட ஆட்சியராக இருந்தவர் அப்போது, துடிப்பாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.

மாவட்ட நிர்வாகத்தின் உதவியால் பலரும் பலன் பெற்றதைக் கண்ணால் பார்த்தோம். அடுத்த சில நாட்களில் இயல்பு நிலை திரும்பியது. ஒரு மாவட்ட ஆட்சியரின் பணி, அவரது செயல்பாடு, துரித நடவடிக்கை எனக்கு பிரமிப்பாக இருந்தது.

சுனாமி பாதிப்புகளும் மீட்பு பணிகளும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன. ஒரு மாவட்ட ஆட்சியராக இருந்தால், கஷ்டப்படும் மக்களுக்கு எளிதில் உதவ முடிவும் என்கிற எண்ணம் ஏற்பட்டடது. ஆகையால், "நான் கலெக்டராக வேண்டும்ப்பா" என்று அப்பாவிடம் சொன்னேன். அவரும், "அதுக்கென்ன நீ நல்லா படிச்சா, கலெக்டர் ஆகிடலாம்" என்றார். சொன்னதோடு இல்லாமல், அப்பாவின் ஊக்கத்தால் 10, 12ம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பெற்றேன்.

பெற்றோர் தந்த ஊக்கம்

ரெனிட்டா

பட மூலாதாரம், Renitta

கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்றேன். ஏழு வயதில் நினைத்தது இப்போது நிறைவேறியிருக்கிறது. ரொம்ப மன நிறைவாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. கல்லூரி முடித்து 3 ஆண்டுகளாகியுள்ளது. அதுவரை பொருளாதார ரீதியில் எந்த தடையும் இல்லாமல் தந்தை பார்த்துக் கொண்டார்.

கிராமத்தில் வசிப்பதால் பல முக்கிய புத்தகங்கள் கிடைக்காது. பெரிய நூலகங்களுக்கு செல்லும் வாய்ப்பும் இல்லை. ஆகையால், புத்தகங்களை வாங்கி, வரவழைத்து படிப்பேன். இதற்காக ஆகும் செலவுகள் குறித்து, தந்தை கவலைப்பட்டதே கிடையாது. அம்மாவும் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

அந்தவகையில், பெற்றோரின் பெரும் ஊக்கம், உதவி எனக்கு பெரும் பலமாக இருந்தது. மூன்றாம் வகுப்பு படித்த தந்தை, ஒன்பதாம் வகுப்பு படித்த தாய் இப்போதும் எங்களுக்கு பெரும்துணையாக இருக்கின்றனர்,'' என்கிறார் ரெனிட்டா.

தமிழ்வழியில் படித்ததால் எந்த தடையும் இல்லை

பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்து விட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்ட அனுபவம் குறித்து கூறுகையில், "திட்டமிட்டு படித்தால் எளிதில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறலாம். தமிழ் வழியில் பள்ளிக்கல்வியைப் பெற்றது எனக்கு எந்தவிதத்திலும் தடையாக இல்லை.

கல்லூரி படிக்கும் போதே, சிவில் சர்வீஸ் தேர்வு முறையை அறிந்து கொண்டேன். அதற்கேற்ப பாடப் புத்தகங்களை வாங்கி, தயாரானேன். தனியார் பயிற்சி மையத்திற்கும் சென்றும் பயிற்சி பெற்றேன். கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாரானேன்.

கல்லூரி படிக்கும் போதே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக வேண்டும். முக்கியமாக தினமும் செய்தித் தாள் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நான் 6ம் வகுப்பு முதல் செய்தித் தாள் படித்து வருகிறேன்.

பாடப் புத்தகத்தில் உள்ளதை மட்டுமின்றி, தற்கால நிகழ்வுகள் உள்ளிட்ட, உலக நடப்புகளை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். எனவே செய்தித் தாள் படிப்பதை மிக முக்கியமானதாக கருதுகிறேன்.

மேலும், டெல்லி போன்ற நகரங்களில் முன்கூட்டியே தயாராகி விடுகிறார்கள். கல்லூரி படிப்பை முடித்த பிறகு தயாராவதை விட, கல்லூரியில் படிக்கும் போதே சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாரானால் எளிதாக இருக்கும்'' என்கிறார்.

காணொளிக் குறிப்பு, இருளர் மாணவிகளுக்கு பரதம் கற்பிக்கும் நடனக்கலைஞர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: