தமிழ்நாட்டில் தீபாவளி அன்று தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 2,200 பேர் கைதாகி விடுதலை

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக சுமார் 2,300 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் 2,200 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தீபாவளியின்போது பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் மாலையில் 7 மணி முதல் எட்டு மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் குறிப்பிட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்தில் பட்டாசு வெடித்தது, தடைசெய்யப்பட்ட வெடிகளை வெடித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தீபாவளிக்கு முந்தைய தினத்திலும் தீபாவளி தினத்திலும் தமிழ்நாடு முழுவதும் 2,278 வழக்குகள் 2,311 பேர் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவர்களில் 2,200 பேர் கைதுசெய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 45,200 ரூபாய் மதிப்புள்ள 81 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை நகரத்தில்தான் அதிக அளவாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 1,014 பேர் மீது 1,008 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவர்களில் 980 பேர் கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை நகரத்தைப் பொருத்தவரை, தீபாவளி தினத்தன்று விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2019ஆம் ஆண்டில், 204 வழக்குகள் பதிவான நிலையில், 2020ஆம் ஆண்டில் 428 வழக்குகள் பதிவாகின. இந்த ஆண்டில் 1,008 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நீலகிரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வழக்குகள் ஏதும் பதிவுசெய்யப்படவில்லை.

தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடித்ததின் காரணமாக, கடந்த ஆண்டுகளைவிட ஐந்து மடங்கு அதிகமாக காற்றில் மாசு ஏற்பட்டது. தீபாவளி தினத்தன்று பிற்பகலுக்கு மேல், சென்னை நகரம் முழுவதுமே புகை மூட்டமாகக் காட்சியளித்தது. இரவில் சாலைகளில் 10 மீட்டர் தொலைவுக்கு அப்பால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :