You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
1965 இந்தியா பாகிஸ்தான் போர்: லாஹூருக்கே தண்ணி காட்டிய இந்திய ராணுவம் - பாகிஸ்தானின் டோக்ரய் பகுதியை எப்படி வென்றது?
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
1965 செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 9 மணிக்கு, 3 ஜாட் படைப்பிரிவு இச்சோகில் கால்வாயை நோக்கி நகரத் தொடங்கியது.
கால்வாயின் கரையில் நடந்த சண்டையில் பாகிஸ்தான் விமானப்படை, இந்தப் படைப்பிரிவின் கனரக ஆயுதங்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், 11 மணியளவில், அவர்கள் முதலில் கால்வாயின் மேற்கு கரையில் உள்ள பாட்டாநகரையும் பின்னர் பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாஹூருக்கு அருகிலுள்ள டோக்ரய் பகுதியையும் கைப்பற்றினர்.
ஆனால் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு இந்த சாகசம் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பிரிவின் தலைமையகத்திற்கு தவறான தகவல்கள் கிடைத்ததை அடுத்து, டோக்ரயிலிருந்து 9 கிமீ பின்வாங்கி சந்த்புராவில் தயார்நிலையில் இருக்குமாறு, படைப்பிரிவினர் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அங்கு அவர்கள் பாதுகாப்பு குழிகளை தோண்டி பாகிஸ்தான் வீரர்களின் கடும் தாக்குதலை சமாளித்து அங்கேயே நிலைகொண்டனர்.
செப்டம்பர் 21 இரவு, 3 ஜாட் படைப்பிரிவு டோக்ரய் பகுதியை மீண்டும் தாக்கி அதைக் கைப்பற்றினர். ஆனால் இந்த போரில் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
இந்த சண்டை, உலகின் சிறந்த போர்களில் ஒன்றாக கருதப்படுகிறது, கூடவே இது பல ராணுவப் பள்ளிகளின் பாடத்திட்டத்திலும் கற்பிக்கப்படுகிறது. இது குறித்து ஹரியானாவில் பல நாட்டுப்புற பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
குண்டுமழைக்கிடையே நடந்த வீரர்
"21 மற்றும் 22 க்கு இடைப்பட்ட இரவில் நாங்கள் அனைவரும் எங்கள் அகழிகளில் அமர்ந்திருந்தோம். உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரியாக இருந்த லெஃப்டினன்ட் கர்னல் ஹேட் தனது காலை அகழியின் சுவருக்கு எதிராக வைத்திருந்தார். பாகிஸ்தானியர்கள் குண்டுமழை பொழியத் தொடங்கியதும் அவர் தலைக்கவசம் அணிந்து கொண்டு, அகழிக்கு வெளியே வந்து பாகிஸ்தானியர்களின் தாக்குதலுக்கு இடையில் நடக்கத் தொடங்கினார்," என மேஜர் ஜெனரல் பி.ஆர்.வர்மா நினைவுகூர்ந்தார்,
"யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்று மற்ற வீரர்களிடம் சொல்லும் அவருடைய பாணி அது. எனக்கான தோட்டாவால் மட்டுமே என்னைக் கொல்ல முடியும் மற்ற தோட்டாக்களுக்கு நான் பயப்பட தேவையில்லை என்று அவர் சொல்வார்." என மேஜர் ஜெனரல் பி.ஆர்.வர்மா கூறினார்.
"செப்டம்பர் 21 இரவு அவர் தனது வீரர்களிடம் உரையாற்றியபோது, அவர்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். ஒருவர் கூட பின்வாங்கக்கூடாது என்பது முதல் கோரிக்கை. இரண்டாவது, உயிருடன் அல்லது இறந்தாவது டோக்ரயில் சந்திக்க வேண்டும். நீங்கள் ஓடினாலும், நான் போர்க்களத்தில் தனியாகப் போராடுவேன் என்றார். நீங்கள் உங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்லும் போது, உங்கள் கமாண்டிங் அதிகாரியை விட்டுவிட்டு ஓடியதற்காக கிராம மக்கள் உங்கள் மீது காறி உமிழ்வார்கள்," என்று அவர் கூறியதாக 1965 போர் பற்றிய புத்தகத்தில், ரச்னா பிஷ்ட் ராவத் எழுதியுள்ளார்.
கமாண்டிங் அதிகாரி இறந்தால் என்ன செய்வீர்கள்?
எல்லா வீரர்களும் சாப்பிட்ட பிறகு, அவர் தனது சக பணியாளர் மேஜர் ஷெகாவத்துடன் ஒவ்வொரு அகழிக்கும் சென்று படையினரிடம், "நாம் இன்று இறந்தால், அது ஒரு நல்ல மரணமாக இருக்கும். படைப்பிரிவு உங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்ளும். எனவே நீங்கள் கவலைப்பட தேவையில்லை."என்றார்.
"டெஸ்மண்ட் ஹேட்டின் உரையை கேட்ட வீரர்களின் மனதில் உற்சாகம் நிரம்பியது. நாளை எங்கு சந்திப்பது என்று அவர் ஒரு வீரரிடம் கேட்டார், அவர் டோக்ரய் என்று பதிலளித்தார். அதற்குள் ஹேட், ஜாட்களின் மொழியைக் கொஞ்சம் கற்றுக்கொண்டிருந்தார். தனது சிரிப்பை அடக்கியவாறு அவர், "தம்பி, உன் கமாண்டிங் அதிகாரி காயமடைந்தால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டார். "அவரை சுமந்துகொண்டு டோக்ரய் செல்வேன், ஏனெனில் கமாண்டிங் அதிகாரியின் உத்தரவு தெளிவாக உள்ளது ... உயிருடனோ இறந்தோ டோக்ரயில் சந்திக்க வேண்டும்." என்று அவர் பதிலளித்தார்.
தாக்குதல் தொடங்கியது
54 காலாட்படைப்பிரிவு இரண்டு கட்டங்களாக தாக்குதலை நடத்தத் திட்டமிட்டது. முதலில் 13 பஞ்சாப் பிரிவை, 13 வது மைல்கல்லில் பாகிஸ்தான் தற்காப்பு அரணுக்குள் ஊடுருவ செய்யவேண்டும். பின்னர் 3 ஜாட் பிரிவு டோக்ரயை தாக்கி கைப்பற்ற வேண்டும்.
ஆனால் 13 பஞ்சாப் பிரிவின் தாக்குதல் வெற்றி அடைந்தாலும், இல்லாவிட்டாலும், 3 ஜாட்கள் படைப்பிரிவு இரண்டாம் கட்டத்தை செய்துமுடிக்கும் என்று ஹேட் ஏற்கனவே படைத் தளபதியிடம் கூறியிருந்தார். 13 பஞ்சாப் பிரிவின் தாக்குதல் தோல்வியுற்றது. பிரிகேட் கமாண்டர் தாக்குதலை நிறுத்துமாறு வயர்லெஸ் மூலம் ஹேட்டிடம் கூறினார்.
கமாண்டரின் அறிவுரையை கேட்க ஹேட் மறுத்துவிட்டார். "நாங்கள் தாக்குவோம். உண்மையை சொன்னால் தாக்குதல் ஆரம்பித்துவிட்டது,"என்று அவர் பதிலளித்தார்.
27 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்
மதியம் சரியாக 1.40 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. டோக்ரயின் புறநகர் பகுதியில் பாகிஸ்தானியர்கள் Pill box எனப்படும் சிமெண்டால் கட்டப்பட்ட பாதுகாப்பு நிலைகளில் இருந்து இயந்திர துப்பாகிகளால் கடும் தாக்குதலைத் தொடங்கினர்.
சுபேதார் பாலே ராம், "எல்லா ஜவான்களும் வலது பக்கத்தில் இருந்து என்னுடன் தாக்குதல் நடத்துங்கள்," என்று கத்தினார். கேப்டன் கபில் சிங் தாபாவின் படைப்பிரிவும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் முன்னேறிச்சென்றது.
தோட்டாக்களால் தாக்கப்பட்டவர்கள் அங்கேயே விடப்பட்டனர். பாலே ராம் மார்பிலும் வயிற்றிலும் ஆறு தோட்டாக்கள் பாய்ந்தன. ஆனால் அப்போதும் அவர் தனது வீரர்களுக்கு கட்டளையிட்டபடி முன்னேறினார்.
தாக்குதல் நடத்திய 108 வீரர்களில் 27 பேர் மட்டுமே உயிர் தப்பினர். கர்னல் ஹேட் பின்னர் தனது 'தி பாட்டில் ஆஃப் டோக்ரய்' என்ற புத்தகத்தில், "இது ஒரு நம்பமுடியாத தாக்குதல். அதன் ஒரு பகுதியாக இருந்தது மற்றும் அதை நெருக்கமாகப் பார்க்க முடிந்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம்" என்று எழுதினார்.
ஆசாராம் தியாகியின் வீரம்
கேப்டன் பிஆர் வர்மா தனது கமாண்டிங் அதிகாரிக்கு 18 அடி பின்னால் நடந்து சென்றபோது திடீரென அவரது வலது தொடையில் பல தோட்டாக்கள் பாய்ந்தன. அவர் தரையில் விழுந்தார்.
பிரிவின் தளபதி மேஜர் ஆசாராம் தியாகியும் இரண்டு தோட்டாக்களால் தாக்கப்பட்டார், ஆனால் அவர் தொடர்ந்து போரிட்டார். அவர் ஒரு பாகிஸ்தான் மேஜரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பின்னர் துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருக்கும் கத்தி மூலம் அவரை தாக்கினார்.
இதற்கிடையில் இரண்டு குண்டுகள் பாயிண்ட் பிளாங்க் ரேஞ்சில் இருந்து அவர் மீது பாய்ந்ததாகவும், ஒரு பாகிஸ்தான் சிப்பாய் துப்பாக்கியின் கத்தியால் அவருடைய வயிற்றைத் துளைத்ததாகவும் ரச்சனா பிஷ்ட் கூறுகிறார்.
கிட்டத்தட்ட கிழிந்துபோன வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர் விழுந்தவுடன், ஹவில்தார் ராம் சிங் ஒரு பெரிய கல்லை எடுத்து அவரை கத்தி மூலம் துளைத்த பாகிஸ்தான் வீரரின் தலையில் அடித்தார்.
"தியாகி சில சமயங்களில் மயக்கத்தில் இருந்தார், சில சமயங்களில் அவர் சுயநினைவுடன் இருந்தார். நானும் காயமடைந்தேன். காயமடைந்த எல்லா வீரர்களும் படுத்திருந்த குடிசைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். காயமடைந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நேரம் வந்தபோது தியாகி கூக்குரலிட்டார். என்னிடம், "நீங்கள் சீனியர். நீங்கள் முதலில் செல்லுங்கள்," என்றார். நான் அவரை அமைதியாக இருக்கும்படி சொல்லி முதலில் அவரை அனுப்பினேன். அவர் நிறைய ரத்தம் இழந்திருந்தார்."என மேஜர் வர்மா குறிப்பிட்டார்.
"தியாகி மிகவும் வலியில் இருந்தார். அவர் என்னிடம் 'சார், நான் பிழைக்க மாட்டேன். நீங்களே என்னை சுட்டுவிடுங்கள். நான் உங்கள் கையால் இறக்க விரும்புகிறேன்.' என்றார். நாங்கள் அனைவரும் தியாகி உயிருடன் இருக்கவேண்டும் என்று விரும்பினோம்." என்கிறார் மேஜர் ஷெகாவத். அவரைக்காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காமல் தியாகி, செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த உலகத்தை விட்டு மறைந்தார்.
பாகிஸ்தான் கமாண்டிங் அதிகாரி கைது
டோக்ரய் பகுதி அதிகாலை மூன்று மணிக்கு இந்திய வீரர்களால் பிடிக்கப்பட்டது. மாலை 6.15 மணிக்கு இந்திய பீரங்கிகளும் அங்கு சென்றன. இந்திய வீரர்கள் மீது பயங்கரமான தாக்குதல் தொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இச்சோகில் கால்வாயின் மறுபுறத்தை குறிவைத்து பீரங்கிகளின் தாக்குதல் தொடங்கியது.
3 ஜாட் படைப்பிரிவு வீரர்கள் குடிசையில் மறைந்திருந்த பாகிஸ்தான் வீரர்களைப் பிடிக்கத் தொடங்கினர். பிடிபட்டவர்களில் லெப்டினன்ட் கர்னல் ஜேஎஃப் கோல்வாலாவும் அடங்குவார். அவர் 16 பஞ்சாப் (படான்) படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரி ஆவார்.
லான்ஸ் நாயக் ஓம்பிரகாஷ் ,இச்சோகில் கால்வாயில் இந்தியக் கொடியை ஏற்றினார். அங்கு கூடியிருந்த மக்களுக்கு இது மிகவும் பெருமையான தருணமாக இருந்தது.
டோக்ரயைக் கைப்பற்றுவதற்காக இன்னுயிர் ஈந்தவர்களை நினைத்து அவர்களது கண்களில் கண்ணீர் வழிந்தது. லெப்டினன்ட் கர்னல் டிஎஃப் ஹேட், மேஜர் ஆசாராம் தியாகி மற்றும் கேப்டன் கே. எஸ் தாபாவுக்கு மஹாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
ஹுசைன் வரைந்த ஓவியம்
கர்னல் ஹேட் 2013 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தார். டெல்லியில் உள்ள சைனிக் மருத்துவமனையில் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது ரச்னா பிஷ்ட் அவரை சந்தித்தார்.
அவர் பெரும்பாலும் ஜான் கிரிஷாமின் நாவல்களை படித்துக்கொண்டிருப்பார். அவர் விலங்குகளை நேசிப்பவர். 45 நாய்களை அவர் கவனித்துக்கொண்டார். அவர் தனது வாழ்க்கையின் கடைசி தருணம் வரை மொபைல் அல்லது கணினியைப் பயன்படுத்தவில்லை என ரச்னா தெரிவித்தார்.
"புகழ்பெற்ற ஓவியர் எம்எஃப் ஹுசைன் போர் நடந்த இடத்தில் ஓவியமாக வரைந்த ஒரே சிப்பாய் அவர்தான். அந்த உருவப்படம் இன்னும் பரேலியில் உள்ள ரெஜிமென்டல் மைய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- குத்தி கொலை செய்யப்பட்ட பாலியல் தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
- கொரோனா தடுப்பு மருந்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றமா? – விரிவான ஆய்வுக்கு கோரிக்கை
- முக்கியமான ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?
- அனபெல் சேதுபதி - விமர்சனம்
- `உங்கள் தனிநபர் தரவுகள் நிச்சயம் திருடப்படும்` - எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்