You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் 100 நாள் வேலைக்கு சென்ற பெண் பலி: போலீஸ் விசாரணை
விழுப்புரம் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்ய வந்த ஒரு பெண் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மகாதேவி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மனைவி விஜயா(வயது 37) நேற்று முன்தினம் (செப்டம்பர் 1) 100 நாள் வேலைக்கு சென்றார்.
100 நாள் வேலை என்று சுருக்கமாக அறியப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யவேண்டுமென்றால் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது.
எனவே, பணித் தளத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத தொழிலாளர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினார்கள் சுகாதாரப் பணியாளர்கள்.
மேல் சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இந்தப் பணியை மேற்கொண்டனர்.
இதில் அங்கு பணி செய்து கொண்டிருந்த விஜயாவும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இந்நிலையில் நேற்று காலை விஜயாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அறிவுறுத்தலுக்கு இணங்க முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் விஜயா. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 11.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்த மகாதேவி கிராம பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட காரணத்தால்தான் அவர் உயிரிழந்தார் எனக் கூறி செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு அவர்களை காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் வளத்தி போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் இந்த பெண் உயிரிழப்பு தொடர்பாக காவல் துறையினர் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் (IPC 174) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு குறித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"மகாதேவி மங்கலம் கிராம மக்கள் நேற்று முன்தினம்(செப்டம்பர் 1) 100 நாள் வேலைக்காகச் சென்றுள்ளனர். மக்கள் நெருக்கமாக அங்கே வேலை செய்வதால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி சுகாதாரத் துறை பணியாளர்கள் அறிவுறுத்தியபோது, அதை விஜயா மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டால்தான் வேலைக்கு வரமுடியும் என அறிவுறுத்தியுள்ளனர். பிறகு விஜயா உட்பட அங்கு பணியிலிருந்த அனைவருமே தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.
இதன்பின்னர் நேற்று திடீரென விஜயாவிற்கு உடல்நலம் குன்றியது. அவர் செஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அதையடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது," என்றார் அவர்.
"உடற்கூறாய்வு சான்றிதழ் வந்த பிறகே எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவரும். மேலும் உடற்கூறாய்வின் போது அந்த பெண்ணுக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்பட்டது? அவருக்கு உடலில் வேறேதும் பிரச்னை உள்ளதா? செஞ்சி மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது? என்ற மருத்துவ அறிக்கையை கேட்டுள்ளனர். இவையனைத்தையும் ஆராய்ந்த பிறகே அவர் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும்," என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- அண்ணாமலை கையில் 'விநாயகர்' அஸ்திரம்: கே.டி. ராகவன் விவகாரம் திசை திரும்ப இது உதவுமா?
- தாலிபன்களுடன் மத்தியஸ்தம் செய்யும் கத்தார், துருக்கி: மத்திய கிழக்கில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
- "காஷ்மீர் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு" - பிபிசிக்கு தாலிபன் தலைவர் பேட்டி
- தியேட்டர்கள் VS ஓடிடி படங்கள்: திரையுலகில் மீண்டும் மோதல் வலுக்கிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்