You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனோ சீற்றத்துக்கு நடுவில் குஜராத்தில் கரையை கடந்தது தெள-தே புயல்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தெள-தே புயல் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் தெள-தே புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்திய வானிலை மையம் திங்கள் மாலை, "அதிக தீவிரமான தெள-தே புயல்" கரையை கடக்க தொடங்கியது என தெரிவித்திருந்தது.குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.1998ஆம் ஆண்டு பிறகு ஏற்பட்ட புயல்களில் தெள-தே வலுவான புயலாக கருதப்படுகிறது.குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில்தான் தெள-தே புயலின் பாதிப்புகளும் வந்து சேர்ந்துள்ளன. இருமாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களில் ஆயிரக் கணக்கானவர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்தியாவின் சுகாதார கட்டமைப்பின் மீது பலமான சுமையாக விழுந்திருக்கும் கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில், தற்போது இந்த தெள-தே புயலும் இணைந்து இந்தியாவையே சோதனையில் ஆழ்த்தி இருக்கிறது.
கன மழை பெய்ய வாய்ப்பு இருந்ததால், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தயார் நிலையில் இருந்தன.
தாழ்வான பகுதியில் வாழும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். இதனால் வரும் வாரங்களில் கொரோனா பரவல் அதிகரிக்குமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.
மேலும் பல கடலோர நகரங்களில் தடுப்பூசி செலுத்துவது அபாயகரமனது எனக் கருதி, அப்பகுதிகளில் எல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.
ஏற்கனவே பெருஞ்சவாலை எதிர்கொண்டு வரும் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மையங்களுக்கு தெள-தே புயல் மேற்கொண்டு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக மகாராஷ்டிராவின் தலைநகரமான மும்பையைக் குறிப்பிடலாம்.
கடலோரத்தில் அமைந்திருக்கும் இந்த பெருநகரம் உச்சபட்ச எச்சரிக்கையோடு இருக்கிறது. மும்பையில் கொரோனாவுக்காக என்றே ஒதுக்கப்பட்ட மையங்களிலிருந்து 580 கொரோனா நோயாளிகள், பாதுகாப்பு கருதி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
மும்பை பெருநகரத்தில் விமான நிலையமும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கிறது.
மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கன மழை மற்றும் பலமான காற்று வீசுவதால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படுவது, மரங்கள் வேரோடு சாய்வது போன்றவைகளை எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இரு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீன்பிடிப் படகுகள் துறைமுகங்களுக்கு திரும்பி உள்ளன. நூற்றுக்கணக்கான வணிக கப்பல்கள் வேறு வழித் தடங்களில் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றன.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இரு மாநிலங்களிலும் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
- அதிக நேரம் வேலை செய்து அநியாயமாக சாகும் ஊழியர்கள் - ஆய்வில் அதிர்ச்சி
- கொரோனா காலத்தில் மோதியின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு எந்த அளவுக்குப் பயன்படுகிறது?
- 'காசாவில் இருந்து ஒரு வாரத்தில் 3,000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன' - இஸ்ரேல் ராணுவம்
- இரு வேறு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உங்கள் உடலில் என்னாகும்?
- “ஹமாஸ் குழுவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை முழு வலிமையுடன் தொடரும்” – இஸ்ரேல் பிரதமர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்