'விமான நிலையம் வராது... ஆனால்?' – பரந்தூர் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

(பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து பிபிசி தமிழ் மேற்கொண்ட கள ஆய்வு)

"விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கும் இடமாகப் பார்த்து விமான நிலையத்தைக் கொண்டு வாருங்கள். வளர்ச்சிதான் மக்களின் முன்னேற்றம். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களைப் பெரிதும் பாதிக்கும்."

"விமான நிலையமே வரக்கூடாது என்றெல்லாம் நான் கூறவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் கூறுகிறேன்."

கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பரந்தூரில் தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய் இவ்வாறு பேசினார். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பரந்தூரில் கள நிலவரம் முற்றிலும் மாறிவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக நிலம் கையகப்படுத்துதல், பத்திரப் பதிவு போன்றவை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், மாநில அரசிடம் இருந்து தங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்கிறார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிநேகா.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, 5746.18 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில்துறை அனுமதி அளித்திருந்தது.

கடந்த 2023ஆம் ஆண்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்தது.

நிலங்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கு 1822.45 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. இதையடுத்து, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு வட்டாட்சியர்கள், துணை தாசில்தார்கள் உள்பட 326 பேர் நியமிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

பரந்தூரைச் சுற்றியுள்ள நெல்வாய், நாகப்பட்டு, தண்டலம் உள்பட 13 கிராமங்களில் இருந்து புதிய விமான நிலையம் அமைவதற்கான நிலங்களும் பிற பகுதிகளில் விமான நிலையத்தை அணுகுவதற்கான சாலைகளும் அமைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்தது.

'பரந்தூர்... முதல்கட்ட ஒப்புதல்'

விமான நிலையம் அமைப்பதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்தாண்டு ஏப்ரல் 7ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசுக்கு வழங்கியது.

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், வானிலை ஆய்வுத் துறை, நிதி ஆயோக், சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத் துறை, உள்துறை அமைச்சகம் ஆகிய துறைகள் முதல்கட்டமாக ஒப்புதல் அளித்துள்ளன.

இந்தப் பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ மேற்கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் சுமார் ஆயிரம் நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

"ஏகனாபுரம் கிராம மக்கள் மட்டும் போராடக் காரணம், இங்குள்ள 920 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டனர். இதனால் ஏகனாபுரம் என்ற கிராமமே இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டது" என்கிறார் கதிரேசன்.

இவர் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்ட எதிர்ப்புக் குழுவின் செயலாளராக இருக்கிறார்.

பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

புதிய விமான நிலையம் வந்தால் சுற்றுப் பகுதிகளில் நிலங்களின் விலை உயரும் என்பதால் வெளிமாவட்ட நபர்கள் அதிகப்படியான நிலங்களை பரந்தூரில் வாங்கிக் குவித்ததாகவும் பிபிசி தமிழிடம் பேசியபோது அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களில் ஏகனாபுரம் கிராம மக்கள் ஈடுபட்டனர். "மொட்டை அடிக்கும் போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம் என நாங்கள் நடத்தாத போராட்டம் இல்லை. போராடிப் போராடி சலித்துப் போய்விட்டது" என்கிறார் கதிரேசன்.

இந்த நிலையில், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை கடந்தாண்டு ஜனவரி மாதம் தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "என்னுடைய கள அரசியல் பயணம் உங்களின் ஆசீர்வாதத்துடன் இங்கிருந்துதான் தொடங்குகிறது" எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர், "பரந்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் 13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தர வெள்ளக்காடாக்கும் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்" என்றார்.

தற்போதைய கள நிலவரம் என்ன?

கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை டிட்கோ கையகப்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்துள்ள சூழலில் பரந்தூரில் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

கடந்த திமுக ஆட்சியில் தொடர் போராட்டங்களில் ஏகனாபுரம் கிராம மக்கள் ஈடுபட்டிருந்தபோது, காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தற்போது காவல்துறை பாதுகாப்பின்றி ஊரே அமைதியாகக் காட்சியளித்தது.

பரந்தூரைச் சுற்றிலும் நெல் விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்குள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்களே பிரதானமாக உள்ளன.

புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய ஏகனாபுரம் கிராம மக்கள் மீது சுமார் 17க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டதாகக் கூறுகிறார், பரந்தூர் புதிய விமான நிலையத் திட்ட எதிர்ப்புக் குழு செயலாளர் கதிரேசன்.

"விமான நிலைய திட்டத்துக்காக சுமார் 1,700 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இவற்றின் உரிமையாளர்கள் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இதை காரணமாகக் காட்டி நெல்வாய், நாகப்பட்டு உள்படப் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் நிலத்தை வாங்கினர்" என அவர் குறிப்பிட்டார்.

நிலங்களைக் கொடுத்த விவசாயிகளுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித் தருவதற்காக மாதிரி வீடுகளை அதிகாரிகள் காட்டியுள்ளனர். "ஆனால் இந்த வீடுகள் எங்கே அமையும் என அதிகாரிகள் கூறவில்லை" என்றார் கதிரேசன்.

ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டத்தை ஆதரித்துப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பரந்தூருக்கு வந்தனர். தவெக தலைவர் விஜயின் பரந்தூர் வருகை குறித்து விவரித்த கதிரேசன், "விமான நிலையம் வேண்டாம் என்று அவர் கூறவில்லை. நீர்நிலைகள் இருப்பதால் அமைய வேண்டாம் எனக் கூறினார்" என்றார்.

'விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது'

கடந்த சில வாரங்களாகவே மனதளவில் நிம்மதியாக இருப்பதாகக் கூறுகிறார், ஏகனாபுரம் கிராமத்தில் வசிக்கும் அலமேலு.

பிபிசி தமிழிடம் அவர் பேசும்போது, "எங்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது. நிலம் பறிபோகலாம் என்ற அச்சத்தில் உடல்நல பாதிப்புக்கு ஆளானேன்" என்று கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைய பிரச்னைகளை அனுபவித்து விட்டதாகக் கூறும் அவர், "காலையில் எழுந்தால் என்ன நடக்கும் எனத் தெரியாத சூழலில் மிகுந்த துயரத்தில் வாழ்ந்து வந்தோம்" எனத் தெரிவித்தார்.

அத்துடன், "சொந்தமாகப் பயிர் விளைவித்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். இந்த இடத்திலேயே வாழ்ந்து முடிய வேண்டும் என்று நினைக்கிறோம். இந்தத் திட்டம் மீண்டும் வராமல் இருந்தாலே போதும்" என்று கூறினார் அலமேலு.

மறுபுறம், "விவசாயக் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். இந்த இடத்தில் இருந்து வெளியேறிவிட்டால் என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தோம். வேறு ஊருக்கு அனுப்பிவிட்டால் எப்படி பிழைக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார், ஏகனாபுரத்தில் வசிக்கும் செல்வி.

மக்களின் எதிர்ப்பு காரணமாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் குழு ஒன்றை முந்தைய திமுகஅரசு அமைத்தது.

"அந்தக் குழுவிடம் எங்கள் தரப்பு விளக்கங்களைக் கொடுத்தோம். ஆனால், குழுவின் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகக் கேட்டபோது, 'தொழில் வளர்ச்சிக்கான திட்டம் என்பதால் தகவல் தர இயலாது' எனக் கூறி மறுத்துவிட்டனர்" என்கிறார் கதிரேசன்.

இந்த நிலையில், "தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த பிறகு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் வேகம் பெருமளவு குறைந்துவிட்டது," என்றார் புதிய விமான நிலையத் திட்ட எதிர்ப்புக் குழுவின் தலைவர் சுப்ரமணியன்.

'பத்திரப் பதிவுக்குத் தடை' - விவசாயிகள்

அதேநேரம் பரந்தூரைச் சுற்றியுள்ள விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் விவரித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய சுப்ரமணியன், "நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக பரந்தூரில் பொது மக்கள் பத்திரப்பதிவை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுப காரியம், கடன்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது" என்கிறார்.

பரந்தூர் விமான நிலையத் திட்ட அரசாணையை ரத்து செய்தால் மட்டுமே மீண்டும் 2019ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைக்குத் தங்களால் திரும்ப முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு, "தனியாரிடம் நிலத்தை அடமானம் வைக்க முடியாத நிலை உள்ளது. திருமணம், கல்விக் கடன் போன்றவற்றுக்கு கடன் பெறவில்லை" என அவர் குறிப்பிட்டார்.

சுரேஷ்பாபு வசிக்கும் தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்வாய் கிராமத்தில் 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களைப் புதிய விமான நிலையத் திட்டத்துக்காக ஒப்படைத்துவிட்டனர்.

நிலத்தை ஒப்படைத்தவர்களின் நிலை?

நிலங்களை ஒப்படைத்த விவசாயிகள் பலரும் அரசிடம் இழப்பீட்டுத் தொகை பெற்றுவிட்டதால் மீண்டும் தங்கள் நிலம் கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளதைப் பார்க்க முடிந்தது.

நெல்வாய் கிராமத்தில் பிபிசி தமிழிடம் பேசிய விவசாயி பொன்னுரங்கம், "எனக்கு ஏழு ஏக்கர் நிலம் இருந்தது. ஒரு சென்ட் 65 ஆயிரம் என்று அரசாங்கம் விலை நிர்ணயித்தது. அதைப் பெற்றுக்கொண்டு நிலத்தை ஒப்படைத்துவிட்டேன்" என்றார்.

அதோடு, "நிலத்தை மீண்டும் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. கிராமத்தில் உள்ள வீடுகளை எல்லாம் இடிக்க உள்ளதாகக் கூறியதால் நிலத்தைக் கொடுத்தோம். இங்குள்ள எட்டு ஊர்களிலும் நிலத்தைக் கொடுத்துள்ளனர்" என்கிறார் அவர்.

தன்னுடைய நிலத்துக்கு பத்திரப் பதிவு முடிந்துவிட்டதால் மீண்டும் நிலம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர் சுமார் 65 ஆண்டுகளாக நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

"தண்டலம் ஊராட்சியில் சுமார் 220 ஏக்கர் வரையில் பத்திரப் பதிவு நடந்துள்ளது" எனக் கூறுகிறார், ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு.

"விமான நிலையத் திட்டம் வந்துவிடும் என்ற அச்சத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக கிராமத்தில் யாரும் புதிதாக வீடு கட்டவில்லை. பல வீடுகள் புதுப்பிக்கப்படாததால் இடிந்துவிழும் நிலையில் உள்ளன" என்றார் அவர்.

அதேவேளையில், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விமான நிலையம் வராது என்ற நம்பிக்கையில் பலரும் புதிய வீடுகளைக் கட்டத் தொடங்கி இருப்பதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இங்குள்ள குடியிருப்புகள் பலவும் சிதிலடைந்து இருப்பதையும் புதிய வீடுகள் கட்டப்படுவதையும் நேரில் பார்க்க முடிந்தது.

"விமான நிலைய திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடையவில்லை. ஆகவே, விவசாயிகள் பத்திரப் பதிவை மேற்கொள்வதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்" என்றார் சுரேஷ்பாபு.

'ரியல் எஸ்டேட் வணிகம் முடங்கிவிட்டது'

கடந்த சில வாரங்களாக பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகத் தாங்கள் அறிவதாகக் கூறுகிறார், ஏகனாபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.

இதன் காரணமாக பரந்தூரைச் சுற்றிலும் நிலத்தின் மதிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். "திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு 200 ரூபாய்க்கு விலைபோன சதுர அடி நிலம், பிறகு மூன்றாயிரம் ரூபாய் வரை விலை போனது."

"திட்டம் வரலாம் என்பதால் கடந்த சில ஆண்டுகளில் அதிக விலையில் சிலர் நிலத்தை வாங்கிவிட்டனர். தற்போது நிலத்தை வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. அந்த அளவுக்கு ரியல் எஸ்டேட் வணிகம் முடங்கிவிட்டது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில வாரங்களாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக கிராம மக்கள் பேசி வரும் நிலையில், உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்குப் புதிய விமான நிலையத் திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேலை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது.

"எங்களின் தினசரி அலுவல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான மேலதிக தகவல்களை மாவட்ட ஆட்சியரிடம்தான் கேட்க வேண்டும்" என்று மட்டும் பதில் அளித்தார்.

'மாற்று இடம் குறித்து ஆய்வு' - அமைச்சர் நிர்மல்குமார்

இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிநேகாவை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது.

"பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்துக்கு எந்தத் தகவலும் வரவில்லை. அதைப் பற்றி விவாதம் நடந்து வருகிறது. அரசின் முடிவு குறித்து ஊடகங்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

பத்திரப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது குறித்தும் பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் புதிய தொழிற்பூங்கா வரலாம் என கிராம மக்கள் மத்தியில் பரவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் குறித்தும் ஆட்சியரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது சென்னை விமான நிலையம் மிகச் சிறியதாக உள்ளது" எனக் கூறினார்.

பயணிகளின் வசதி என்பது மட்டுமின்றி மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் பரந்தூர் விமான நிலையம் தேவையாக உள்ளதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "முதலமைச்சரின் முதல் போராட்டம் பரந்தூரில் இருந்து தொடங்கப்பட்டது. மாற்று இடம் தொடர்பாக ஆய்வு செய்துவிட்டு முதலமைச்சரின் ஒப்புதலின் பேரில் அறிவிக்கப்படும்" எனக் கூறினார்.

"நாங்கள் வளர்ச்சிக்கு எதிராக இல்லை" எனக் கூறிய சி.டி.ஆர்.நிர்மல்குமார், " நீர்நிலைகளை மூடி விளை நிலங்களை அழித்து, திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. மாற்று இடம் குறித்து வல்லுநர்களும் அதிகாரிகளும் ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசும் புதிய விமான நிலையத் திட்ட எதிர்ப்புக் குழுவின் தலைவர் சுப்ரமணியன், "தொழிற்பூங்கா அமைக்கப்பட்டாலும் நிலத்தடி நீருக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் அவை செயல்படுத்தப்பட வேண்டும்" என்கிறார்.

இவை ஒருபுறம் இருந்தாலும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுவிட்டதா என்பது குறித்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் இருந்தோ அமைச்சர் தரப்பில் இருந்தோ தெளிவான விளக்கம் ஏதும் இதுவரை வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பரந்தூர் விவகாரத்தில் அரசு விரைந்து முடிவெடுத்தால் மட்டுமே தங்களால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி விவசாயிகள் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு