கொரோனா ஆக்சிஜன்: நீதித்துறை தலையீட்டை தவிர்க்கக் கோரும் இந்திய அரசு

பட மூலாதாரம், Getty Images
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து ஆக்சிஜன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வரும் நிலையில், திங்கட்கிழமை காலையில் வழக்கு காணொளி மூலமாக விசாரிக்கப்பட்டது. ஆனால், தொடக்கத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீதிபதிகள் அமர்வின் காட்சிகள் திடீரென திரையில் இருந்து மறைந்தன.
இதைத் தொடர்ந்து மீண்டும் தோன்றிய நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் வியாழக்கிழமை தள்ளிவைப்பதாகக் கூறினார். அதற்குள்ளாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பிரமாண பத்திரத்தை படித்துப் பார்த்து தங்களுடைய நிலையை தெளிவுபடுத்துகிறோம் என நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தடுப்பூசி விலை, கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில் அரசு கடைப்பிடிக்கும் கொள்கை போன்றவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
"தற்போதைக்கு முன்னுரிமை கொடுக்கும் இடத்தில் தடுப்பூசிகளின் கையிருப்பை உறுதிப்படுத்துவது, அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் மேம்படுத்துவது, பாதிக்கப்படக்கூடிய குழுவினருக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்வது போன்றவை உள்ளன," என பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
"தடுப்பூசிகளின் விலை நிர்ணயம் என்பது இந்தியாவுக்கு நீண்ட கால பிரச்னை. அதனால் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் பல தளங்களில் தடுப்பூசிகள் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது."

பட மூலாதாரம், Getty Images
நிபுணர்கள் வழங்கிய ஆலோசனை அடிப்படையில், தடுப்பூசி முன்னுரிமைப் பகுதிகளில் கவனம் செலுத்துவதே அரசின் உத்தி. மேலும், தடுப்பூசியின் மேம்பட்ட உற்பத்தி, மேலதிக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எந்தவொரு உண்மையான அல்லது உணரப்பட்ட தடைகளுமின்றி தொடர அரசு விரும்புகிறது என்று அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சில நேரங்களில், உடனடி தேவைகளுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், உடனடி நெருக்கடியைக் கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட கால பிரச்னையாகி விடுகின்றன.
இருப்பினும், அவை பாராட்டப்பட வேண்டும், புரிந்து கொள்ளப்பட வேண்டும், ஒப்புக் கொள்ளப்பட வேண்டும், உடனடி, நடுத்தர மற்றும் நீண்ட கால தேவைகளின் முழுமையான உத்தி, கொள்கை மற்றும் முழுமையான சூழலை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் துல்லியமாக கணிக்க முடியாத வகையிலும், கூடுதல் அனுபவம் மற்றும் ஆராய்ச்சி இல்லாத மாறக்கூடிய வைரஸை, நமக்கு இருக்கும் திறனை கொண்டு கையாண்டோம்.
இந்த நீதிமன்றத்திற்கு முழுமையாக உதவ மத்திய அரசு கடமைப்பட்டிருக்கும் வேளையில், இந்த உலகளாவிய தொற்றை சமாளிக்கும் நடவடிக்கையில் தேசிய, பிராந்திய மற்றும் அடிமட்ட நிலையில் எடுக்கப்படும் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் கவனித்து வருகிறது.
மருத்துவ நிபுணத்துவம் மற்றும் அறிவியல்பூர்வ ஆலோசனையின் அடிப்படையில் கொள்கை, உத்திகளை நிர்வாகம் எடுக்கிறது. மருத்துவ நெருக்கடி நிலையிலும் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டும்.
அந்த காரணங்களுக்காக, இந்த நடவடிக்கைகளில் நீதித்துறை குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. மிகப்பெரிய அளவிலான நலன்களை கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கையை அரசு நிர்வாகமே சுதந்திரமாக எடுக்க விட்டு விட வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
சந்தேக கொரோனா தொற்று, உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களை கையாள, ஏற்கெனவே மாநிலங்களிடம், மூன்றடுக்கு சுகாதார உள்கட்டமைப்புகளை சரியான முறையில் செய்யுமாறு மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டது. மிதமான அறிகுறி கொண்டவர்களுக்கு சிகிச்சை வழங்க கொரோனா பராமரிப்பு மையத்தை நிறுவியது, விடுதிகள், அரங்குகள், தங்குமிடங்கள், கொரோனா பாதிப்பில்லாதவர்களுக்காக மருத்துவமனைகளாக இயங்கிய சமுதாய சுகாதார மையங்களும் கடைசி நேரத்தில் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டது போன்றவையும் அரசின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தவிர, கொரோனா சுகாதார மையமாக அறிவிக்கப்பட்ட கொரோனா மருத்துவ மையங்களில் மிதமான அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இவை முழுமையான மருத்துவமனையிலோ மருத்துவமனையில் தனி நுழைவு வாயில் கொண்ட தனி வளாகமாகவோ இருக்கலாம்.
தனியார் மருத்துவமனைகளை கோவிட் மருத்துவ நிலையங்களாக மாற்றலாம். அந்த மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சேவை வழங்கக் கூடியதாக இருக்கும். கடுமையான பாதிப்புள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு இந்த தனி மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை தரலாம் என்றும் அரசு திட்டமிட்டுள்ளதாக பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள் :
- இந்திய வகை கொரோனாவால் அண்டை நாடுகளில் தொற்று அதிகரிக்கிறதா? #REALITYCHECK
- ரமலான் சமயத்தில் இஸ்ரேல் -பாலத்தீன தரப்பு 3வது இரவாக மோதல்: என்ன நடக்கிறது?
- கொரோனா நோயாளிகளுக்கு குடும்பத்தினரே சிகிச்சை தரும் அவலம்
- ஆக்சிஜன் சிலிண்டர் உதவி யாருக்கு தேவை? மருத்துவர்கள் விளக்கம்
- ஆந்திர கொரோனா திரிபு 1,000 மடங்கு வேகமாக பரவுமா? உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












