என்சிஇஆர்டி புத்தகத்தில் சர்ச்சையான சிலை உண்மையில் 'நடன மங்கைதானா'? வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

மொஹஞ்சதாரோவின் இந்தச் சிறிய 'நடன மங்கை' சிலை சுமார் 10 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.

பட மூலாதாரம், NCERT

படக்குறிப்பு, மொஹஞ்சதாரோவின் இந்தச் சிறிய 'நடன மங்கை' சிலை சுமார் 10 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.
    • எழுதியவர், ஷகீல் அக்தர்
    • பதவி, பிபிசி உருது
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மொஹஞ்சதாரோவின் 'நடன மங்கை' தற்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்த நிர்வாண சிலை, சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக முக்கியமான தொல்பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சமீபத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 'மதுரிமா' என்ற கலைப் புத்தகத்தை வெளியிட்டிருந்தது.

அந்தப் புத்தகத்தில், 4,500 ஆண்டுகள் பழமையான இந்த வெண்கலச் சிலையின் நிர்வாண உடல் மற்றும் மேல் பகுதி, டிஜிட்டல் ஷேடிங் மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தி மங்கலாக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இது குறித்து கடுமையான விவாதம் எழுந்தது.

கலை மற்றும் வரலாற்று நிபுணர்களின் விமர்சனங்களுக்குப் பிறகு, அந்தப் புகைப்படத்தை அதன் அசல் வடிவத்திலேயே வெளியிடுவதாக என்.சி.இ.ஆர்.டி அறிவித்துள்ளது.

உண்மையிலேயே நடன மங்கைதானா?

சமீபத்தில் என்.சி.இ.ஆர்.டி (NCERT) வெளியிட்ட புத்தகம் ஒன்றில், நான்காயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையான இந்த வெண்கலச் சிலை குறித்து விவாதம் எழுந்துள்ளது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சமீபத்தில் என்.சி.இ.ஆர்.டி வெளியிட்ட புத்தகம் ஒன்றில், 4500 ஆண்டுகள் பழமையான இந்த வெண்கலச் சிலை குறித்து விவாதம் எழுந்துள்ளது.

மொஹஞ்சதாரோவின் இந்தச் சிறிய 'நடன மங்கை' சிலை சுமார் 10 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தச் சிலையில் உள்ள இளம்பெண்ணின் இடது கையில் வளையல்கள் உள்ளன, அவரது வலது கை இடுப்பில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இரு கால்களும் முழங்கால்களுக்குக் கீழே சற்றே மடங்கியும், முன்னோக்கியும் உள்ளன.

இந்தச் சிலையின் தோரணை காரணமாகவே, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜான் மார்ஷல் இதற்கு 'நடன மங்கை' என்று பெயரிட்டார். 4,500 ஆண்டுகள் கடந்தும், இந்தச் சிலையின் உண்மையான அடையாளம் இன்றும் ஒரு மர்மமாகவே உள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இது குறித்து லாகூர் அருங்காட்சியகத்தின் காப்பாளர் எஹ்தஷாம் அஜீஸ் கூறுகையில், "இந்தச் சிலையை உற்று நோக்கினால், அந்தப் பெண் நடனமாடுவது போன்ற தோற்றம் தெரியும். குறிப்பாக இந்து மதத்தில் நடனம் என்பது மதச் சடங்குகளின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது. நீங்கள் பார்க்கும் பல தெய்வங்களின் சிலைகள் நடனமாடுவது போன்றோ அல்லது இதே போன்ற தோரணைகளிலோ இருப்பதைக் காணலாம். நடனம் என்பது மத நம்பிக்கைகளின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது" என்று தெரிவித்தார்.

வரலாற்றாளர் கிரிகோரி எல். பொசெல்ல தனது 'தி இண்டஸ் சிவிலைசேஷன்' புத்தகத்தில், இந்தச் சிலை ஒரு நடன மங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று எழுதியுள்ளார். மேலும் பல வரலாற்றாளர்களும் இதனை நடன மங்கை என்று ஏற்க மறுத்துள்ளனர்.

'எ நியூ ஹிஸ்டரி ஆஃப் இந்தியா' புத்தகத்தின் ஆசிரியர்களான ஆர். முகர்ஜி, ஷோபிதா புஞ்சா மற்றும் டோபி சிங்க்ளேர் ஆகியோர் எழுதியுள்ளதாவது: "இந்தச் சிலைக்கு 'நடன மங்கை' என்று பெயர் சூட்டப்பட்டது, பெரும்பாலும் அதன் நின்றிருக்கும் தோரணையின் அடிப்படையில் இருக்கலாம். ஆனால், உண்மையான விஷயம் என்னவென்றால், இதன் சரியான அடையாளம் இன்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரு புதிராகவே உள்ளது."

புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ஏ.எல். பாஷம் தனது 'தி வண்டர் தட் வாஸ் இந்தியா' புத்தகத்தில், "சில வரலாற்று ஆய்வாளர்கள், இந்த நடன மங்கை கோவில்களில் நடனமாடும் கலைஞர்களையோ அல்லது அந்த சமூகத்தையோ குறிப்பதாக வாதிட முயன்றனர். ஆனால், இதை வரலாற்று ரீதியாக நிரூபிக்க முடியாது. இந்தச் சிலையில் உள்ள பெண் உண்மையில் ஒரு நடன மங்கைதானா என்பதே தெளிவாகத் தெரியவில்லை; அவர் கோவில் நடனக் கலைஞர் என்ற வாதம் இன்னும் நம்பத்தகுந்ததாக இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சிலை இந்தியா வந்து சேர்ந்தது எப்படி?

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மொஹஞ்சதாரோவின் தொல்பொருள் எச்சங்கள்.

பட மூலாதாரம், DeAgostini/Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மொஹஞ்சதாரோவின் தொல்பொருள் எச்சங்கள்.

'நடன மங்கை' சிலை தற்போது புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மார்டிமர் வீலர் 1944 முதல் 1948 வரை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் தலைவராக இருந்தார்.

சுதந்திரத்துக்கு முன்பு, மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 12,000 தொல்பொருட்களையும் மாதிரிகளையும் கண்காட்சிக்காக லாகூர் அருங்காட்சியகத்திலிருந்து தில்லிக்கு அவர் கொண்டு வந்தார்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா போன்ற பண்டைய இடங்கள் பாகிஸ்தானுக்குச் சென்றன. அதேநேரம், குஜராத்தின் லோத்தல், ராஜஸ்தானின் காளிபங்கன் மற்றும் தோலாவீரா போன்ற ஹரப்பா பண்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில இடங்கள் இந்தியாவின் பகுதியாக மாறின.

பஞ்சாப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர் ஆஷிஷ் குமார் தனது ஆய்வுக்கட்டுரை ஒன்றில், "பிரிவினையின் போது, சிந்து சமவெளி நாகரிகத்தின் பெரும்பாலான தொல்பொருட்கள் தில்லியில் வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் பாகிஸ்தான் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதால், அவற்றை மீண்டும் ஒப்படைக்க பாகிஸ்தான் கோரியது. 1950-களில் மார்டிமர் வீலரின் உதவியுடன், இந்தத் தொல்பொருட்களில் பாதியை பாகிஸ்தானுக்கு வழங்குவது என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது" என்று எழுதியுள்ளார்.

பாகிஸ்தான், 'மதகுரு மன்னர் ' மற்றும் 'நடன மங்கை' ஆகிய இரண்டு சிலைகளையும் திரும்பப் பெற விரும்பியதாகவும், ஆனால் இந்தியா அவற்றில் ஒன்றை மட்டுமே வழங்கத் தயாராக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வரலாற்றாளர்களின் கருத்துப்படி, 'நடன மங்கை'யின் நிர்வாணச் சிலை சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்று கருதி, பாகிஸ்தான் அதிகாரிகள் 'மதகுரு மன்னர் சிலையை மட்டும் பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால், இந்த விவகாரம் இதோடு முடிந்துவிடவில்லை.

2016-ஆம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியாவிலிருந்து நடன மங்கை சிலையை மீண்டும் கொண்டு வர பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

1926-ஆம் ஆண்டு மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சிலைக்கு, பாகிஸ்தானே உண்மையான வாரிசு என்று அந்த மனுவில் வாதிடப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில், பாகிஸ்தான் மட்டுமே ஹரப்பா நாகரிகத்துக்கு வாரிசு அல்ல என்றும், இது ஒட்டுமொத்த தெற்காசியாவின் கூட்டு பாரம்பரியம் என்றும் இந்திய வரலாற்றாளர்கள் சிலர் வாதிட்டனர்.

ஆட்ரி ட்ருஷ்கே தனது 'இந்தியா: ஃபைவ் தவுசண்ட் இயர்ஸ் ஆஃப் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தில், சிந்து சமவெளி நாகரிகம் என்பது எகிப்து, மற்றும் சீனா ஆகியவற்றுடன் பண்டைய காலத்தின் நான்கு பெரும் நாகரிகங்களில் ஒன்றாக இருந்தது என்று எழுதியுள்ளார். புவியியல் ரீதியாக, சிந்து சமவெளி பிராந்தியமானது எகிப்து மற்றும் மெசபடோமியாவின் ஒருங்கிணைந்த பரப்பளவை விடப் பெரியது, அதன் மக்கள் தொகையும் அதிகமாக இருந்திருக்கக்கூடும்.

சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொருட்களில் தெரியாத எழுத்துருக்களில் எழுதப்பட்ட தகவல்கள் உள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார். அக்காலத்தைச் சேர்ந்த முத்திரைகளில் எழுதப்பட்டுள்ள செய்திகளை இன்றுவரை யாராலும் வாசிக்க முடியவில்லை.

இந்த விவாதங்களுக்கு மத்தியில், சிந்து சமவெளி நாகரிகத்தைப் போலவே 'நடன மங்கை' சிலையும் ஒரு புதிராகவே நீடிக்கிறது.

அவள் யார்? அவளை உருவாக்கியது யார்? அவள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறாள்? அவள் உண்மையிலேயே ஒரு நடன மங்கைதானா?

இத்தகைய அனைத்து கேள்விகளுக்கும் இன்றும் விடைகள் தேடப்பட்டு வருகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு