தாயாக ஏங்கும் பெண்களை விந்து தானம் என்ற பெயரில் சுரண்டும் ஆண்கள் - பிபிசி புலனாய்வு

விந்து நன்கொடையாளர், இங்கிலாந்தின் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு, கருத்தரிப்பு, விந்தணு தானம், சமூக வலைதளங்கள்
படக்குறிப்பு, பெண்களுக்கு, சட்டவிரோத விந்து நன்கொடையாளர்களால் சுரண்டப்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தின் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு எச்சரிக்கிறது
    • எழுதியவர், ஜெம்மா டன்ஸ்டன்
    • பதவி, பிபிசி வேல்ஸ் இன்வெஸ்டிகேட்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கும் பெண்கள், இணையதளங்கள் வாயிலாக பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதோடு அவர்களுக்கு மலிவான மற்றும் சட்டவிரோத வழிகளில் விந்தணு மாதிரிகளும் வழங்கப்படுகின்றன.

முறையான கருவுறுதல் சிகிச்சையைப் பெற முடியாத சிலர், சமூக ஊடக தளங்களில் இதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். இது கட்டுப்பாடு இல்லாத மிகப் பெரிய சட்டவிரோத சந்தையை வளர்த்து வருகிறது. அதிலும் சிலர் விந்தணுக்களைத் தேடுவதற்காக, டிண்டர் போன்ற டேட்டிங் ஆப்ஸ் மற்றும் வலைத்தளங்களை நாடும் நிலைக்குக் கூட தள்ளப்படுகிறார்கள்.

பிபிசி வேல்ஸ் நடத்திய புலனாய்வில், இணையதளத்தில் தனது விந்தணுவை விளம்பரம் செய்த ஒரு நபருக்கு 100 பவுண்டுகள் பணம் செலுத்தப்பட்டது. அந்த மாதிரி, உறைந்த தக்காளி பாசாட்டா அட்டைப்பெட்டியுடன் ஒரு பெட்டியில் வைத்து அனுப்பப்பட்டது. பெண்கள் இதுபோன்ற ஏமாற்றும் நோக்கமுள்ள விந்து நன்கொடையாளர்களால் ஏமாறும் அபாயத்தில் உள்ளதாக பிரிட்டனின் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த புலனாய்வின் ஒரு பகுதியாக, இணையதளத்தில் விந்தணுவைப் பெறுவது எவ்வளவு எளிது என்பதைப் பார்க்க நான் களம் இறங்கினேன். தங்கள் சேவைகளை வழங்க முன்வரும் ஆண்களுக்குப் பஞ்சமே இல்லை. "ஜோ டோனர்" என்றழைக்கப்படும் நபர் தபாலில் விந்தணுவை டெலிவரி செய்வார் என்றும், அவரை நான் "நம்பலாம்" என்றும் ஓர் இணையதள விளம்பரம் எனக்குக் காட்டியது.

அவர் உலகெங்கிலும் பாலியல் உறவு மற்றும் செயற்கை கருவூட்டல் மூலம் 180 குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பதாகக் கூறும் ஒரு தீவிர விந்து நன்கொடையாளர் என விளம்பரம் கூறுகிறது.

அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. முறைப்படுத்தப்படாத விந்தணு தானத்தின் ஆபத்துகள் குறித்து மக்களை எச்சரிப்பதற்காக, கார்டிஃப் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கிற்குப் பிறகு ஒரு அரிதான நடவடிக்கையாக அவர் பெயர் ராபர்ட் ஆல்பன் என நீதிபதி அவரை பகிரங்கமாக அடையாளம் காட்டினார்.

சொந்தப் பெயரை மறைத்து புனைப்பெயரைப் பயன்படுத்தி அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் விந்தணுவை அடுத்த நாளே எங்களுக்கு அனுப்பினார். அதற்கு இரண்டு மின்னஞ்சல்களும், ஒரு சிறிய தொலைபேசி அழைப்புமே போதுமானதாக இருந்தது. நாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தும்படி அவர் எங்களிடம் கேட்கவும் இல்லை, அதேபோல தனது உடல்நலப் பரிசோதனை அறிக்கைகள் எதையும் அவர் எங்களுக்கு வழங்கவும் இல்லை.

ஒரு சிரிஞ்சில் அடைக்கப்பட்ட விந்தணுவிற்கு அவர் எங்களிடம் தபால் மூலம் 100 பவுண்ட் தொகையை பெற்றுக் கொண்டார். அந்த விந்தணு குளிரூட்டப்பட்ட நிலையில் இருப்பதற்காக, ஒரு பெட்டி தக்காளி சாறு ஐஸ் கட்டியாகப் பயன்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. அந்த மாதிரியை நாங்கள் பெற்ற நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, உரிமம் பெற்ற ஒரு மருத்துவமனை அதனைப் பரிசோதித்து, அதில் இருந்த அனைத்து விந்தணுக்களும் இறந்துவிட்டன, அதாவது உயிர்ப்புடன் இல்லை என்று கூறியது.

இது குறித்து ராபர்ட் ஆல்பனிடம் நாங்கள் கேட்டதற்கு, அதை எவ்வாறு சேமித்து எடுத்துச் சென்றோம் என்று எதிர்கேள்வி எழுப்பினார். பொதுவாக தான் இவ்வாறு அனுப்புவதில் கருவூட்டலுக்குத் தேவையான அளவு விந்தணுக்கள் உயிர்வாழும் என்று கூறினார். இந்த வழியில் தனது விந்தணுக்களை பயன்படுத்தி வெற்றிகரமாக பல கருக்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விந்து நன்கொடையாளர், இங்கிலாந்தின் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு, கருத்தரிப்பு, விந்தணு தானம், சமூக வலைதளங்கள்

பட மூலாதாரம், Fabulous

படக்குறிப்பு, 'ஜோ டோனர்' தான் ஒரு விந்து நன்கொடையாளராக இருப்பது குறித்து வெட்கப்படவில்லை. 'ஃபேபுலஸ்' இதழ் உட்பட பல ஊடகங்களுக்கு ஏராளமான நேர்காணல்களையும் அவர் அளித்துள்ளார்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

விந்து தானம் பெற விரும்பும் பெண்களுடன் தொடர்புகொள்ள ராபர்ட் ஆல்பன் மற்றும் அவரைப் போன்ற நூற்றுக்கணக்கான ஆண்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக்கில் இதுபோன்ற சில குழுக்களில் 40,000 உறுப்பினர்கள் வரை உள்ளனர்.

நான் ஃபேஸ்புக்கில் எந்த விவரமும் இல்லாத ஒரு வெற்றுப் பக்கத்தைக் கொண்டு அத்தகைய விந்து நன்கொடையாளர் குழு ஒன்றில் இணைந்தேன். எனக்கு வந்த சில செய்திகள் உண்மையானவை போல் தோன்றினாலும், பல செய்திகள் பாலியல் உறவிற்கு அழைப்பு விடுத்தன அல்லது விந்தணு மாதிரிகளுக்குப் பணம் கேட்டன; மேலும் சிலர் என்னுடைய ஆபாசமான புகைப்படங்களைக் கேட்டதோடு, நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தொடர்ந்து செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தனர்.

அங்கிருந்த ஆண்களில் சிலர் பாலியல் உறவு கொள்ளுமாறு தொடர்ந்து என்னை வற்புறுத்தியதோடு, அதுதான் கருவுறுவதற்கு மிகவும் மலிவான மற்றும் பயனுள்ள வழி என்று என்னை நம்ப வைக்க முயன்றனர்.

வடமேற்கு வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடமிருந்து தான் விந்தணுப் பெற்றதாகவும், பின்னர்தான் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு பாலியல் குற்றவாளி என்று தனக்குத் தெரியவந்ததாகவும் ஒரு பெண் எச்சரித்திருந்ததை நான் பார்த்தேன்.

மனித கருவூட்டல் மற்றும் கருவியல் ஆணையம் (HFEA), தங்களது உரிமம் பெற்ற மருத்துவ வளாகங்களுக்கு வெளியே நடக்கும் விந்தணு நன்கொடைகளை 'சட்டவிரோத/முறைசாரா நன்கொடை' என்று வரையறுத்துள்ளது; இது பிரிட்டனில் கடுமையான குற்றவியல் குற்றம் என்றும் அது தெரிவித்துள்ளது.

தாயாக விரும்பும் பெண்களை சுரண்டும் ஆண்கள் - பிபிசி புலனாய்வு

தெற்கு வேல்ஸைச் சேர்ந்த டியானா மற்றும் அவரது மனைவி நிக்கி ஆகியோர் இந்த முறைசாரா விந்தணு நன்கொடை வழியை நாடினர். அரசு மருத்துவ சேவை நிதியுதவி பெறுபவர்களின் பட்டியலில் தாங்கள் இல்லை என்றும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது அதிக செலவுமிக்கதாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர். "நான் தாயாக விரும்பினேன். குழந்தை இல்லாதது எங்கள் குடும்பத்தில் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதை எங்களுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது" என்று டியானா கூறினார்.

இதில் உள்ள ஆபத்துகளைப் பற்றி அறிந்திருந்ததாகவும், விந்தணு வழங்க முன்வருபவர்களிடமிருந்து வரக்கூடிய தேவையற்ற அழுத்தங்கள் குறித்தும் தான் எச்சரிக்கையாக இருந்ததாகவும் அவர் கூறினார். "முற்றிலும் தவறான நோக்கங்களுக்காக இதில் ஈடுபடும் விசித்திரமான நபர்களும் இருக்கிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

"அங்கு ஒரு வலைத்தளம் உள்ளது, அது ஒரு பொருள்களின் பட்டியல் (catalogue) மற்றும் டிண்டர் (Tinder) ஆகியவற்றின் கலவை போன்றது. அதில் கண்ணின் நிறம், முடியின் நிறம் போன்றவற்றை தேர்வு செய்து, உங்களுக்குத் தேவையானதை அப்படியே துல்லியமாகத் தேடிக் கண்டறியலாம்."

இந்தத் தம்பதியர் செயற்கை கருவூட்டல் முறையையே தேடினர். ஆனால் அங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் பாலியல் உறவு கொள்வதே சிறந்த வழி என்று பரிந்துரைத்ததாகக் கூறினர்.

"இந்த விஷயத்தில் நானும் என் மனைவியும் ஒன்றாக இணைந்து பரஸ்பர புரிதலுடன் செயல்பட்டது மிகவும் உதவியாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் விரும்பாத ஒன்றைச் செய்யும்படி யாரும் எங்களை வற்புறுத்த முடியவில்லை. ஏனென்றால், குழந்தை மட்டும்தான் வேண்டும் என்ற தீவிரமான ஆர்வத்தில் இருக்கும்போது, மிகவும் பலவீனமான அல்லது எளிதில் ஏமாறக்கூடிய சூழ்நிலையில் இருப்பீர்கள்."

டியானாவும் நிக்கியும் இறுதியாக 'கூட்டுப் பெற்றோர்' (co-parenting) முறைக்கான ஒரு இணையதளத்தில் தங்களுக்குப் பாதுகாப்பானதாகத் தோன்றிய விந்து தானம் செய்யும் ஒருவரைக் கண்டறிந்தனர். எதிர்காலத் தொடர்பு மற்றும் பெற்றோர் உரிமைகள் குறித்த தங்களின் திட்டங்களை இருதரப்பும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினர்.

ஆனால் இது ஒரு சட்டப்பூர்வமான ஒப்பந்தம் அல்ல. "எதிர்காலத்தில் அவர் வந்து பெற்றோருக்கான உரிமைகளைக் கோரவும், எங்களை நீதிமன்ற வழக்குக்கு இழுக்கவும் இன்னும் வாய்ப்பு உள்ளது" என்று டியானா ஒப்புக்கொண்டார்.

"இருப்பினும், அப்படி நடப்பதைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன்; அவர் ஒருபோதும் எங்களுக்கு அப்படிச் செய்யமாட்டார் என்று மனதார நம்புகிறேன்."

அவர்களுக்கு இப்போது ஒரு வயதில் ஒரு மகன் இருக்கிறான். "நாங்கள் அவனுக்காக நீண்ட காலம் காத்திருந்தோம். நாங்கள் ஒரு ஆபத்தான முடிவை எடுத்தோம் என்பது உண்மைதான். ஆனால், அந்த முயற்சிக்கு அது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது" என்று டியானா நெகிழ்ச்சியுடன் கூறினர்.

விந்து நன்கொடையாளர், இங்கிலாந்தின் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு, கருத்தரிப்பு, விந்தணு தானம், சமூக வலைதளங்கள்
படக்குறிப்பு, தெற்கு வேல்ஸைச் சேர்ந்த டியானா, குழந்தை பெறத் தீவிரமாக விரும்பும்போது, ​​ஒருவர் "மிகவும் பலவீனமான நிலையில்" இருப்பதாகக் கூறுகிறார்

முறையான கட்டுப்பாடுகளுக்கு உட்படாத விந்து நன்கொடையாளர்கள் பல்வேறு வழிகளில் சேவைகளை வழங்குகிறார்கள். சிலர் உடலுறவு மூலம் இலவசமாக தானம் செய்கின்றனர், வேறு சிலர் செயற்கை கருத்தரிப்புக்காக உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கான செலவுகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயதான டேனியல் பேயன், 2025 கோடைகாலத்தில் செயற்கை கருவூட்டலுக்காக விந்தணு தானம் செய்வதற்காக பிரிட்டனுக்குச் சென்றார். அந்தப் பயணத்தின் மூலம் நான்கு குழந்தைகள் பிறந்ததாக அவர் கூறுகிறார்.

பிபிசி நிறுவனம் டேனியல் பேயனுடன் மூன்று நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தியது. அவர் தனது இணையதள வீடியோக்களில், தான் "அதிக கட்டணம் பெறும் நன்கொடையாளர்" என்றும், அதே சமயம் "லாப நோக்கமின்றி" உழைப்பவர் என்றும் முரண்பாடான கூற்றுகளைக் கூறிக்கொள்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "விந்தணு தானம் பெறுபவர்கள் எனது பயணச் செலவை மட்டுமல்லாமல், எனது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அனைத்தையும் ஏற்க உதவ வேண்டும். இதற்கான தகவல் தொடர்பு, ஆரோக்கியம், இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது, தகவல்களைப் பரப்புவது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செலவுகளும் இதில் அடங்கும்" என்றார்.

பிரிட்டனில் இருப்பவர்களிடம் பயணச் செலவை மட்டுமே கேட்பதாகக் கூறும் அவர், வேறு இடங்களில் விந்து தானத்திற்காக 20,000 அமெரிக்க டாலர்கள் வரை தனக்கு வழங்க முன்வந்ததாகக் குறிப்பிட்டார். பணம் செலவழிக்கத் தயாராக இருக்கும் மக்களின் சூழ்நிலையை அவர் சாதகமாகப் பயன்படுத்துகிறாரா என பிபிசி அவரிடம் கேள்வி எழுப்பியது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், "மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் யாருக்காக தானம் செய்கிறேனோ, அந்தக் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் எது நல்லது என்பதில் மட்டுமே நான் அக்கறை காட்டுகிறேன்" என்று கூறினார்.

தான் ஒரு 'வெளிப்படையான விந்து நன்கொடையாளர்' என்று அழைத்துக் கொள்ளும் டேனியல் பேயன், தனது விந்தணு தானம் மூலம் பிறக்கும் குழந்தைகள் தன்னைப் பற்றி அறிந்துகொள்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறுகிறார். அவர் தனது வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியப் பரிசோதனை முடிவுகள் பற்றிய வீடியோக்களையும் இணையத்தில் பதிவிடுகிறார். இருப்பினும், எல்லா விஷயங்களிலும் அவர் வெளிப்படையாக இருப்பதில்லை.

"விந்தணு தானம் செய்பவராக உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, உங்கள் பெயரில் அதிக சொத்துகளை வைத்திருக்காமல் இருப்பது நல்லது; அப்போதுதான், யாரேனும் உங்கள் வாழ்க்கையையோ அல்லது உங்கள் குடும்பத்தையோ அழிக்க நினைத்தாலும், அவர்களால் அதைச் செய்ய முடியாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்," என்று அவர் கூறினார்.

"ஆரோக்கியம் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களுக்கான பரிசோதனைகள் குறித்து நீங்கள் பொய் சொல்லக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆனால், எங்கு வேலை செய்கிறோம், என்ன வேலை செய்கிறோம் என்பது போன்ற விவரங்கள் மற்றும் விந்தணுவைப் பெற்றவர்கள் உங்கள் மீது வழக்குத் தொடரப் பயன்படுத்தக்கூடிய உங்கள் முழுப் பெயர் அல்லது முகவரி போன்ற தகவல்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தவறில்லை" என்றார். பிரிட்டனில் விந்தணு தானம் செய்தபோது தான் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என்றும் டேனியல் பேயன் தெரிவித்தார்.

விந்து நன்கொடையாளர், இங்கிலாந்தின் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு, கருத்தரிப்பு, விந்தணு தானம், சமூக வலைதளங்கள்

பட மூலாதாரம், Daniel Bayen

படக்குறிப்பு, தான் அதிக ஊதியம் பெறும் நன்கொடையாளர்" என்று கூறும் டேனியல் பேயன், அதே சமயம் "லாப நோக்கற்ற" அடிப்படையில் பணியாற்றுவதாகவும் கூறுகிறார்

பிரிட்டனில் உரிமம் பெற்ற மருத்துவமனைகளை மனித கருவூட்டல் மற்றும் கருவியல் ஆணையம் கண்காணிக்கிறது. சட்டம் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அந்த அமைப்பு தனது இணையதளத்தில் ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளது. சட்டவிரோதமாகத் தொடர்ந்து விந்தணு தானம் செய்து வரும் பலரை கண்டறிந்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக மனித கருவூட்டல் மற்றும் கருவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

"அங்கீகரிக்கப்படாத நன்கொடையாளரிடமிருந்து விந்தணுவைப் பெறுவது குற்றவியல் குற்றம் அல்ல, இதன் மூலம் நீங்கள் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ஆனால், அந்த விந்தணுவை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நன்கொடையாளர்கள் அல்லது இதர நபர்கள் ஒரு கடுமையான குற்றத்தைச் செய்கிறார்கள் என்று அர்த்தம்" என அந்த அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதப் பயன்பாட்டிற்கான இனப்பெருக்க உயிரணுக்களை (கருமுட்டை அல்லது விந்தணுக்களை) பயன்படுத்துதல், சேமித்தல், திரட்டுதல், பரிசோதித்தல், பதப்படுத்துதல் மற்றும் விநியோகித்தல்" ஆகிய அனைத்தும், HFEA-வின் உரிமம் பெற்ற மருத்துவமனையால் செய்யப்படாத பட்சத்தில், அவை சட்டவிரோதமானவை என்று 'மனித கருவூட்டல் மற்றும் கருவியல் (HFE) சட்டம் கூறுகிறது.

ராபர்ட் ஆல்பனிடமிருந்து எங்களுக்கு அனுப்பப்பட்ட விந்தணு விநியோக முறை "அதிர்ச்சியளிக்கிறது" என்று மனித கருவூட்டல் மற்றும் கருவியல் ஆணையத்தின் உத்தி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இயக்குநர் கிளேர் எட்டிங்ஹவுசென் தெரிவித்தார். "மனித கருவூட்டல் மற்றும் கருவியல் ஆணையத்தின் உரிமம் இல்லாமல், விந்தணுவைப் பதப்படுத்தவோ அல்லது விநியோகிக்கவோ முடியாது என்று சட்டம் மிகவும் தெளிவாக வரையறுத்துள்ளது. ஆனால் அவர் அதைத் தபாலில் அனுப்புவதன் மூலம் சட்டவிரோதச் செயலைச் செய்கிறார்" என்று அவர் மேலும் கூறினார்.

விந்து நன்கொடையாளர், இங்கிலாந்தின் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு, கருத்தரிப்பு, விந்தணு தானம், சமூக வலைதளங்கள்

பட மூலாதாரம், Getty Images

இதற்குப் பதிலளித்த ராபர்ட் ஆல்பன், தனிப்பட்ட முறையில் விந்தணு தானம் செய்வதும், அதற்குக் கட்டணம் வசூலிப்பதும் சட்டப்பூர்வமானது என்று தான் புரிந்து வைத்திருப்பதால், இந்த விதிமுறைகள் தனக்குப் பொருந்தாது என்று கூறினார். மேலும், எந்தவொரு பெண்ணுக்கும் தன்னால் "நேரடி ஆபத்து" கிடையாது என்றும் அவர் கூறினார்.

ஃபேஸ்புக்கின் உரிமையாளரான மெட்டா நிறுவனம், "சட்டத்தை மீறும் செயலுக்குத் துணைபுரிகிறது" என்று எட்டிங்ஹவுசன் கூறினார்; இந்தக் கருத்தை அவர் மார்ச் மாதத்தில் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் தேர்வுக் குழு ஒன்றிலும் முன்வைத்திருந்தார்.

இது குறித்து மெட்டா நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டதாக மனித கருவூட்டல் மற்றும் கருவியல் ஆணையம் தெரிவித்தது. இருப்பினும், இத்தகைய சமூக ஊடகக் குழுக்களை முழுமையாக மூடினால், அந்த நடைமுறை வேறு இடங்களுக்கு மாறிவிடுமே தவிர ஒழியாது என்ற யதார்த்தமான பார்வையையே தான் கொண்டிருப்பதாக எட்டிங்ஹவுசன் குறிப்பிட்டார்.

"தொடர்ச்சியான சுகாதார எச்சரிக்கைகளையும், பாதுகாப்பான முறையில் ஆதரவு மற்றும் சிகிச்சையை எங்குப் பெறுவது என்பதற்கான வழிகளையும் (சமூக ஊடகங்களில்) காட்டுவது இப்பிரச்னையை முழுமையாகத் தீர்த்துவிடாது, ஆனால் அது உதவியாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "இந்த நன்கொடையாளர்களில் சிலர் 'இயற்கை கருவூட்டல்' (அதாவது பாலியல் உறவு) மட்டுமே சாத்தியம் என்று விளம்பரம் செய்கிறார்கள். இது சில சந்தர்ப்பங்களில், பெண்கள் விரும்பாத போதிலும் அவர்களைப் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்துவதற்குச் சமமாகும்" என்றார்.

விந்து நன்கொடையாளர், இங்கிலாந்தின் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு, கருத்தரிப்பு, விந்தணு தானம், சமூக வலைதளங்கள்

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து கூறும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா , "எங்களுடன் பகிரப்படும் எந்தவொரு குழுக்கள் அல்லது பதிவுகளையும் நாங்கள் மதிப்பாய்வு செய்து, எங்கள் விதிகளை மீறும் உள்ளடக்கத்தை அகற்றுவோம்" என்று கூறியுள்ளது.

"எங்களது கொள்கைகளை மீறாமல், ஆனால் உள்ளூர் சட்டங்களை மீறும் உள்ளடக்கங்களை ஒழுங்குமுறை அமைப்புகள் எங்களுக்குச் சுட்டிக்காட்டுவதற்காக பிரத்யேகப் புகார் அளிக்கும் முறை எங்களிடம் உள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாங்கள் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்" என்றும் அது மேலும் கூறியது.

தேசிய போலீஸ் தலைவர்கள் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்: "ஒழுங்குபடுத்தப்படாத விந்தணு தானம் பல அபாயங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது மிகவும் பலவீனமான சூழ்நிலையில் உள்ளவர்களைச் சுரண்டக்கூடும். பொதுமக்கள் இதன் அபாயங்களைப் புரிந்துகொண்டு, சட்டப்பூர்வமான வழிகளை மட்டுமே பின்பற்றுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்றார்.

"இது குறித்து யாருக்கேனும் புகார்கள் அல்லது கவலைகள் இருந்தால், அதை காவல்துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், நாங்கள் விசாரணை நடத்தி உங்களுக்கு உதவுவோம்" என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு