அமேசானின் தொலைந்து போன நகரத்தின் உண்மைக் கதை என்ன?

பட மூலாதாரம், Sofia Quaglia
- எழுதியவர், சோஃபியா குவாக்லியா
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
ஈக்வடார் காடுகளில் உள்ள இந்த பரந்து விரிந்த பழமையான பெருநகரம் அமேசானில் மட்டுமே காணப்படும் ஒரு தனித்துவமான நகரவியல் வடிவத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்த மர்மமான நாகரிகம் பற்றிய கட்டுரைக்காக சோஃபியா குவாக்லியா அந்த இடத்திற்குச் சென்றார்.
தொல்பொருள் ஆய்வாளரான ஆல்டென் யெபெஸ், வெப்பமண்டல மேய்ச்சல் புல்வெளியில் தனது துருப்பிடித்த பெரிய கத்தியைக் கொண்டு இடதும் வலதுமாக சீவி பாதையை ஏற்படுத்தியவாறு பிரகாசமான பச்சைப் புல் வயலைக் கடந்து செல்கிறார். அவர் தனது கையடக்கமான ஜிபிஎஸ் கருவியை ஒரு விதமான அவசரத்துடன் பின் தொடர்ந்து செல்கிறார். சூரியன் மறைவதற்கு உள்ளாக நாம் புல்வெளியைக் கடந்து சென்றுவிட வேண்டும் என்று அவர் தெரிவிக்கிறார். இந்த வேகத்தில் சென்றால் 30 நிமிடத்தில் உடலை வருடிச் செல்லும் இந்த தாவரங்களிலிருந்து வெளியே சென்றுவிடலாம்.
"நாம் வந்துவிட்டோம்," என மூச்சு வாங்கியவாறே கூறுகிறார். அவரும் நானும் தற்போது சிறிய மற்றும் செங்குத்தான மலைகள் எங்களைச் சுற்றி ஏற்படுத்தியுள்ள சிக்கலான வழியால் சூழப்பட்டிருக்கிறோம். இந்த அமைப்புகளுக்கு உள்ளே வந்த பிறகு, அதன் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தன்மை தெளிவாகிறது. இந்த உயர்ந்த புற்களுக்கு மத்தியில் ஆழமான, நீண்ட பாதை மற்றும் எட்டு குன்றுகள் ஒரு வடிவியல் பாணியில் இருக்கின்றன. ஒரு மலையைக் குடைந்து பாதை ஒன்று உள்ளது, அதன் உள்புறத்தில் அடர் பழுப்பு நிறத்தின் வெவ்வேறு வடிவிலான அடுக்குகள் கொண்ட சேறு இருக்கின்றது.
ஈக்வடார் பாண்டிஃபிகல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் பண்டைய அமேசான் நிபுணராக யெபெஸ் உள்ளார். இந்த இடம் தான் ஹுவாபுலா தளம் என்று அறியப்படுகிறது. ஈக்வடாரில் அமைந்துள்ள அமேசானின் தொலைந்து போன நகரம் என அறியப்படும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட குன்றுகளின் அடர்த்தியான வலைப்பின்னல் ஆகும். இத்தகைய டஜன் கணக்கான தொகுப்புகளைக் கொண்ட பரந்து விரித்த அமைப்பு அங்கு இருக்கிறது.
உள்ளூர் தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த அமைப்புகளை 50 ஆண்டுகளுக்கும் மேல் அறிந்துள்ளனர். ஆனால் 3,000 ஆண்டுகள் பழமையான இந்த நகர்ப்புற நிலப்பரப்பின் பிரமாண்ட அளவு புதிய வரைபடமாக்கல் தொழில்நுட்பத்தின் மூலமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு, அமேசானில் வசித்தவர்கள் நாடோடி வேட்டையர்களின் ஒரு சிறிய குழுக்கள் மட்டுமே என்கிற பழமையான எண்ணத்தை மாற்ற உதவியுள்ளது. அவர்கள் சிக்கலான நகர்ப்புற வலைப்பின்னல்களை உருவாக்கும் திறன் கொண்ட அதிநவீன நாகரிகங்களாக ஒருங்கிணைந்திருந்தனர் என்கிற கோட்பாட்டை வலியுறுத்துகிறது.
எனினும் இந்த இணைக்கப்பட்ட குன்றுகளைப் பற்றி மேலும் நாம் அறிந்துகொள்கிறபோது அவை இன்று நாம் புரிந்துகொள்கிற 'நகரங்கள்' இல்லை என்பது தெளிவாகிறது. அவை அமேசான் காட்டிற்கு மட்டுமே உரித்தான ஒரு விதமான நகரவியல் அமைப்பாக உள்ளது. சுற்றியுள்ள காடுகளின் பலங்கள் மற்றும் பலவீனங்களை பயன்படுத்திக் கொள்ளும் குறைந்த அடர்த்தி மற்றும் பல மையங்கள் கொண்ட அமைப்பாக இருக்கின்றன.
தற்போது இந்தச் சிக்கலான உலகம் எவ்வாறு, ஏன் உருவாக்கப்பட்டது, அது கண்டுபிடிக்கப்பட்டதால் என்ன நடக்கும் என்பதில் தெளிவு இல்லை.
நகர்ப்புற அமேசான்
அவரது நண்பரிடமிருந்து துப்பு கிடைத்த பிறகு போதகரான பெட்ரோ பொர்ராஸ் வடக்கு ஈக்வடாரின் உபானோ நதியில் பள்ளத்தாக்கில் உள்ள ஹுவாபலா மணல் மேடைகளை ஆய்வு செய்யத் தொடங்கினார்.
1978-இல் சங்கய் எரிமலையின் நிழலின் கீழ் இந்தப் பள்ளத்தாக்கில் 15 வெவ்வேறு இடங்களைத் தோண்டுவதில் 200-க்கும் மேற்பட்ட நாட்களை பொர்ராஸ் செலவிட்டார். ஹுவாபலா தளத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களில் இவருக்கு மிகவும் பிடித்தமானது, சேற்றின் அடுக்கு அமைப்பைக் காண பெரிய குன்றை அவர் கடந்த இடம் தான். அதன் வழியாகத் தான் யெபெஸும் நானும் நடந்து வந்தோம்.
1990-களில், தொல்லியல் ஆய்வாளர்கள் அவரது பணிகளை விரிவுபடுத்தும் வகையில், சிதறிக் கிடந்த இதர சிறிய அகழ்வாராய்ச்சிகளையும், வரைபடம் தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளையும் மேற்கொள்ளத் தொடங்கினர். அதன் பிறகு 2015 ஜூலையில் ஈக்வடாரில் கலாசார பாரம்பரியத்திற்கான தேசிய நிறுவனம் (ஐஎன்பிசி) 600 சதுர கிமீ இடத்தை ஒளி கண்டறிதல் மற்றும் வரம்பு (லிடார்) தொழில்நுட்பம் மூலம் வரைபடமாக்க முடிவு செய்தனர்.
ஐஎன்பிசிக்காக வேலை செய்யும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானம் மூலம் இந்தப் பள்ளத்தாக்கு மீது பறந்து, தரையை நோக்கி லட்சக்கணக்கான லேசர் பல்ஸ்களை படம்பிடித்தனர். இலைகளில் உள்ள சிறிய இடைவெளிகளிலும் நுழைந்து மண்ணில் பட்டு தெறித்து பெருமளவிலான தரவுகளை திருப்பிக் கொடுக்கின்றன. இவை நிலத்தின் சிக்கலான முப்பரிமாண வரைபடங்களை உருவாக்க உதவியாக இருக்கின்றன.
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட தரவுகளின் சமீபத்திய ஆய்வுகள் தான் பொர்ராஸின் முதல்கட்ட கண்டுபிடிப்புகள் ஒரு பெரும் விஷயத்தின் தொடக்கப் புள்ளி என்பதை வெளிப்படுத்தின.

பட மூலாதாரம், Sofia Quaglia
ஐஎன்பிசி ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, இந்த இடத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சுமார் 7,500 கட்டுமானங்களின் மிகப்பெரிய மற்றும் பரந்து விரிந்த வலைப்பின்னல் இருக்கின்றது. இதில் 5,000 மணல் மேடைகள், 1500 மலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான வட்ட வடிவிலான குன்றுகள் மற்றும் வளாகம் போன்ற இடங்கள், தட்டு நிலங்கள் மற்றும் பாதைகள், சாலைகள், அகழிகள் மற்றும் வடிகால்கள் அடங்கும்.
2024-ஆம் ஆண்டு அதே தரவுகளை வைத்து பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட மற்றுமொரு ஆய்வின்படி, இந்த மேடைகள் அகழிகள் மற்றும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் வெவ்வேறு காலங்களில் அதன் பயன்பாடு வேறுபட்டிருக்கலாம்.
ஈக்வடாரில் உள்ள யெபெஸ் தலைமையிலான தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு இந்த தளங்களில் முப்பரிமாண வரைபடங்களை உருவாக்கி பொதுவெளியில் வெளியிட்டுள்ளனர். அடுத்தகட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பண்டைய அமேசான் குடியிருப்புவாசிகள் பெரிய மற்றும் அதிநவீன நகர்ப்புற பகுதிகளை உருவாக்கி வந்ததாகத் தெரிகிறது. காட்டுத் தரையின் சேற்றைப் பயன்படுத்தி மலைகள் மற்றும் தாங்கி வசிக்கவும் குழுமுவதற்குமான குன்றுகளையும் உருவாக்கி அவற்றை இணைக்க சாலைகள் மற்றும் நதிகளையும் கூட உருவாக்கியுள்ளனர்.
பரந்து விரிந்த வலைப்பின்னல்
"அவர்கள் வடிவமைத்து, திசை அமைத்து, நிலைநிறுத்தியது முற்றிலும் இறுக்கப்பட்ட மண்ணைத்தான்," என்கிறார் ஈக்வடாரின் குயாகில் ரிடா லிட்பென். அதன் தரவுகளை ஆராய ஐஎன்பிசி அமைத்த இரு நபர் குழுவிலும் இவர் அங்கம் வகித்துள்ளார். "பிரமாண்ட மணல் வேலைப்பாடுகளாக அவர்கள் மாற்றிய இயற்கை கூறுகளைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
15-ஆம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவுக்கு ஸ்பானியர்கள் வருவதற்கு முன்பாக அமேசானின் புவியியல் மற்றும் காலநிலை என்பது சிறிய, சிதறிய வேட்டைக் குழுக்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது என்கிற அனுமானம் பல நூற்றாண்டுகளாக இருந்தது.
1950 மற்றும் 1960களில் அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர் பெட்டி மெக்கர்ஸ் பிரபலப்படுத்திய கோட்பாட்டில் இது நிறுவப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது மறுதலிக்கப்பட்டுவிட்டது. அந்தக் கோட்பாட்டின்படி அமேசானின் கடினமான மற்றும் சூடான காலநிலை மனித வளர்ச்சியை இயற்கையாகவே மட்டுப்படுத்திவிடும் என அறியப்பட்டது.
ஆனால் சமீபத்திய உபானோ பள்ளத்தாக்கு கண்டுபிடிப்புகள் லிடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு வலுசேர்க்கின்றன. பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அமேசான் பகுதி உண்மையில் நீண்ட காலமாகவே, தங்கள் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப நிலப்பரப்பைத் திட்டமிட்டு மாற்றியமைத்த, மேம்பட்ட நாகரிகங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
"இந்த புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அமேசான் குடியிருப்புகள் குறித்த நமது பார்வையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அமேசான் மக்கள் கூட்டங்கள் உண்மையில் எத்தகையவை என்பது குறித்த நமது கண்ணோட்டத்தையும் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளது," என்கிறார் லிட்பென்.
இந்த வலைப்பின்னல்கள் முழுவதும் உள்ள தளங்கள், பெரும்பாலும் ஒரு வளாகம் போன்ற இடத்தைச் சுற்றி மூன்று முதல் ஆறு அலகுகள் கொண்ட வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக ஐஎன்பிசியின் வெவ்வேறு ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Sofia Quaglia
இந்தக் குன்றுகள் உள்ளூர் மக்களால் டொலிடாஸ் அல்லது மான்டிகுளோஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவை 2 - 3 மீ உயரமும் செவ்வக வடிவிலும் இருக்கின்றன. இவற்றின் பக்கங்கள் 10மீ மற்றும் 20மீ அளவுடையவை. அமேசான் நாகரிகங்கள் இந்த சிறிய குன்றுகளின் உச்சியில் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அங்கு தான் அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டு பொருட்களான ஜாடிகள், அரைக்கும் கற்கள் மற்றும் சமைக்கப்பட்ட விதைகளின் சிறிய எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஆனால் சில வலைப்பின்னல்கள் இதைவிடவும் உயரமான தளங்களைக் கொண்டிருந்தன. 4.5 மீ உயரம் வரையும் சில சமயங்களில் 8மீ வரையும் செல்கின்றன. மேலும், இவை 40 மீட்டருக்கு 140 மீட்டர் அளவுடையதாக இருந்துள்ளன. அமேசான் மக்கள் இங்கு தான் சடங்கு சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பார்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இங்கு மனித செயல்பாடு அல்லது உணவுக்கான தடயங்கள் எதையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.
"இந்தத் தளங்களை உருவாக்க நிறைய மக்கள் தேவைப்பட்டிருப்பார்கள், அங்கு நிறைய மக்கள் வசித்திருந்தார்கள், நிறைய பேர் வேலை செய்திருந்தார்கள், பலரும் காடுகளை மாற்றியமைத்து வந்தனர்," என்கிறார் அலெஜான்ரா சான்ஷெஸ் போலோ. இவர் ஸ்பெயினில் உள்ள வல்லாடோலிட் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் மற்றும் ஐஎன்பிசி ஆய்வுகளின் இணை ஆசிரியராகவும் உள்ளார்.
பல நிபுணர்களும் தற்போது மக்கள்தொகை அளவைக் கணக்கிட்டு வருகின்றனர். குன்றுகளை அடிப்படையாக வைத்து, இவ்வளவு எண்ணிக்கையிலானவற்றை உருவாக்குவதற்கு ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு எவ்வளவு மணலை எடுத்துச் சென்றிருப்பார்கள் என்பதை அடிப்படையாக வைத்து இந்தக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணைக் குறிப்பிட யாரும் இன்னும் தயாராக இல்லை.
"இந்த நகரங்களின் விரிவாக்கத்தை பார்ப்பது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது," என்கிறார் ஸ்டீபன் ரோஸ்டெயின். நீண்டகாலமாக உபானோவை ஆய்வு செய்து வரும் இவர் அறிவியல் ஆராய்ச்சிக்கான பிரெஞ்சு தேசிய மையத்தில் புலனாய்வு இயக்குநராகவும் இருக்கிறார்.
"சிலர் மக்கள் தொகை 10,000 அல்லது 30,000 தொடங்கி 1 லட்சம் வரை இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். ஆனால் அதனை நிரூபிக்கும் முக்கியமான தரவுகள் இல்லாமல் என்னால் எதுவும் கூற முடியாது," என்று தெரிவித்தார்.
இந்தக் குன்றுகளின் வலைப்பின்னல் அதிநவீன சாலை அமைப்பால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளதை ரோஸ்டெயினின் ஆய்வு காட்டுகிறது. தோண்டப்பட்ட பாதைகள் 2 - 15மீ அகலமும் 5மீ ஆழமும் கொண்டவையாக இருக்கின்றன. அவை 25 கிமீ வரை சென்று, வர்த்தகத்துக்காக பள்ளத்தாக்கில் உள்ள இதர சமூகங்களுடன் இந்த வலைப்பின்னலை இணைத்திருக்கலாம்.
அந்த நிலப்பரப்பு ஒழுங்கற்றத் தன்மை கொண்டதாக இருந்தாலும் ஆச்சரியமளிக்கும் விதமாக சாலைகள் நேராக இருந்தன. "ஒரு சதுரங்கப் பலகையில் இவ்வளவு பெரிய தளத்தை ஒழுங்கமைப்பது சாத்தியம் என நாம் இதற்கு முன்னர் நினைத்துப் பார்த்ததில்லை," என்கிறார் ரோஸ்டெயின்.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிறிய வடிகால் வாய்க்கால்கள் மற்றும் சமதளப் படிகளைக் கொண்ட வடிவியல் ரீதியான நிலப்பிரிவுகளில், நூற்றுக்கணக்கான சதுர மீட்டர்கள் பரப்பளவிற்கு விரிந்து கிடந்த விவசாய நிலங்களும் இருந்ததாக ரோஸ்டெயின் குறிப்பிடுகிறார்.
திறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால மட்பாண்டங்களில் உள்ள மாவுச்சத்துத் துகள்கள் மீதான அவரது ஆய்வின்படி, இந்தப் பகுதியின் மிகவும் வளமான நிலத்தில் அமேசான் மக்கள் சோளம், அவரை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவற்றைப் பயிரிட்டனர்.
அவர்கள் இன்றும் கூட பிரபலமான நொதிக்கவைக்கப்பட்ட சோள பானமான சிசாவை பருகியுள்ளனர். உபானோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக மேற்கொண்ட அகழாய்வில் ரோஸ்டெயின் கண்டுபிடித்த கிண்ணங்களில் துண்டுகளைக் கணக்கிட்டால் கூட்டாக அருந்தும் சடங்குகள் மிகவும் பரவலாக இருந்திருக்கக்கூடும் என்று அவர் தெரிவிக்கிறார்.
"அமேசான் என்பது நாகரிகத்தின் முடிவு அல்ல, அது நாகரிகத்தின் தொட்டில்," என்கிறார் ரோஸ்டெயின்.
நகரங்கள் என அழைக்க வேண்டாம் என்று வலுக்கும் கோரிக்கை
உபானோ பள்ளத்தாக்கு பற்றிய ரோஸ்டெயின் ஆய்வு அறிக்கை 2024-இல் வெளியானபோது மிகப்பெரிய ஊடக வெளிச்சம் பெற்றது. ஆனால் சில சாத்தியமான பிழைகளுக்காக, குறிப்பாக யெபெஸின் குழு உள்பட சில விமர்சனங்களைப் பெற்றது. அதோடு லிட்பென் மற்றும் சான்ஷெஸ் போலா ஆகியோர் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காது உள்பட வேறு சில விஷயங்களுக்காகவும் விமர்சிக்கப்பட்டது.
யெபெஸின் குழுவின் விமர்சனங்களைத் தீவிரமாக மறுக்கும் ரோஸ்டெயின், தனது ஆய்வறிக்கையை எழுதும்போது லிட்பென் மற்றும் சான்ஷெஸ் போலோவால் மேற்கொள்ளப்பட்ட ஐஎன்பிசி பகுப்பாய்வு (அவை ஸ்பானிஷ் மொழியில் வெளியிடப்பட்டிருந்தன) பற்றி தனக்கு தெரியாது எனத் தெரிவிக்கிறார்.
ஊடகங்களில் இதைப்பற்றி மிகவும் பரவலாக செய்திகள் வந்த பிறகு உபானோ பள்ளத்தாக்கின் மணல் அமைப்புகள் "அமேசானின் தொலைந்து போன நகரங்கள்" என்கிற புனைப்பெயரைப் பெற்றன. சயின்ஸ் என்கிற ஆய்விதழ் ரோஸ்டெயின் ஆய்வறிக்கை தனது அட்டைப் படத்தில் "தொலைந்து போன நகரம்" என்கிற வார்த்தைகளுடன் வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தக் குறிப்பு சில நிபுணர்களை அசௌகரியத்தில் ஆழ்த்தியது. உபானோ பள்ளத்தாக்கில் இருந்தவை உள்பட பல லிடார் கண்டுபிடிப்புகளை ஊடகங்கள் மிகைப்படுத்திய விதத்தை கனடாவின் கல்கேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளரான கேற்றின் ரீஸ்-டெய்லர் 2025-இல் மேற்கொண்ட ஆய்வில் ஆராய்ந்துள்ளார்.
"தொலைந்த" என்கிற வார்த்தை அவை "இனி அறியப்படாத" அல்லது "அழிந்த அல்லது சிதைந்த" என்கிற பொருள்படுகிறது. ஆனால் உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் தொல்பொருள் ஆய்வாளர்கள், அதன் வலைப்பின்னல்களின் அளவை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றாலும் புதிய லிடார் தொழில்நுட்பம் வருவதற்கு பல காலம் முன்பே, குன்றுகளை அறிந்தும் ஆராய்ந்தும் வந்துள்ளனர். ரோம் உடன் ஒப்பிட்டு பிபிசி உள்ளிட்ட ஊடகங்களில் வந்த செய்திகள் அந்தக் கண்டுபிடிப்புகளை பிரமாண்டப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார். "அதன் அளவை ரோம் உடன் ஒப்பிடுவது சாத்தியமற்றது" என்றும் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Sofia Quaglia
ரோஸ்டெய்ன், தனது ஆய்வு ஒருபோதும் ரோமுடன் ஒப்பீடுகளை மேற்கொள்ளவோ அல்லது அந்தக் கண்டுபிடிப்பை ஒரு "தொலைந்துபோன நகரம்" என்று விவரிக்கவோ இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார்.
உபானோ பள்ளத்தாக்கில் உள்ள குன்றுகளின் கட்டமைப்பை ஒரு "நகரம்" என்று அழைப்பது, அதற்கு இழைக்கப்படும் அநீதியாகக்கூட இருக்கலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.
"இவை ஐரோப்பாவின் நகரம் அடிப்படையிலான நகரவியலுக்கு நேர்மாறானது. அவை பல்மயமான, குறைந்த அடர்த்தி கொண்ட ஒரு விதமான நகரம் இல்லாத நகரவியல்," என்கிறார் புளோரிடா பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளரான மைக்கேல் ஹெக்கென்பர்கர்.
உபானோ பள்ளத்தாக்கு ஆய்வுகளில் ஹெக்கர்பர்கர் ஈடுபடவில்லை என்றாலும் பிரேசிலில் அமேசான் நகரவியலை ஆய்வு செய்கிறார். இவர் "தோட்ட நகரங்கள்" மற்றும் "விண்மீன் மண்டல நகரவியல்" ஆகிய பதங்களைப் பிரபலப்படுத்தினார்.
"திடீரென, அமேசான் நமக்கு ஒரு மாற்று வகையான நகர்ப்புற அமைப்பை வெளிப்படுத்துகிறது. பரிணாம வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் இது ஐரோப்பிய நகரங்களை விடக் கீழான ஒன்றல்ல, மாறாக இது சமமான சிக்கல் தன்மை கொண்ட, முற்றிலும் மாறுபட்ட ஒரு நகர்ப்புற அமைப்பாகும்,:" என ஹெக்கன்பர்கர் குறிப்பிடுகிறார். உபானோ பள்ளத்தாக்கு ஆண்டிஸ் மலைத்தொடருக்கு மிகவும் அருகில் தனித்துவமான நிலப்பரப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே அதனை அனைத்து விதமான அமேசான் நகரவியலுக்கான மாதிரியான முன்னிறுத்தக்கூடாது.
இந்தப் பண்டைய நகரவியல் எவ்வாறு வேலை செய்திருக்கும் என்பதைப் பற்றி ஆராய இன்னும் நிறைய மீதமிருக்கின்றன.
ஒரு முடிவுறாத புதிர்
இன்று குன்றுகளுக்குச் செல்லும் கார் பயனங்களுக்கு இடையே யெபெஸ் குழுவின் தரவுகளை ஆராயும் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளரான ஜோனதன் பனிம்போஸா டெலெக் தனது கணினியில் உபானோ பள்ளத்தாக்கின் முப்பரிமாண உருவமைப்பை எனக்கு நேரலையாக காட்டினார்.
சிறிய பிரெமிட் வடிவிலான கொத்துக்களை குறிப்பிட்டு காண்பித்து அவை குன்றுகளாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். ஆனால் அதனை உறுதி செய்யும் அளவுக்கு லிடார் தரவு முழுமையாக இல்லை. இந்தத் தரவுப் புள்ளிகளில் 90% வரை இன்னும் வகைப்படுத்தப்படாமல் இருப்பதாகவும், அவை அந்த வலைப்பின்னலின் இன்னும் பல பகுதிகளை வெளிப்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.
தற்போதைய முடிவுகள் முழு உபானோ அமைப்பின் ஒரு பகுதியை மட்டுமே காட்டுகின்றன. ஐஎன்பிசியால் ஸ்கேன் செய்யப்பட்ட பகுதிகளில் பாதி மட்டுமே தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள தரவுகளை ஐஎன்பிசி தனக்கு வழங்கியுள்ளதாக கூறும் ரோஸ்டெயின் அதைப் பயன்படுத்தி பெரிய நிலப்பரப்பு மீது தனது 2024-ஆம் ஆண்டு ஆய்வினை விரிவுபடுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உபானோ பள்ளத்தாக்கின் குன்றுகள் மற்றும் வளாகங்கள் கூடுதலாக நீர் மேலாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிற கோட்பாட்டை யெபெஸ் மற்றும் பனிம்போஸா முன்வைக்கின்றனர்.
நீண்ட் புற்களில் மறைந்துள்ள குன்றுகளைத் அவர்கள் உடன் சென்று தேடிய ஒரு நாளில் பல மணி நேரம் இடைவிடாது பெய்த மழை எங்களை நனைத்தது. எங்கள் ரப்பர் பூட்ஸ்களுக்கு அடியில் தண்ணீர் பாய்ந்தோட, சேறு என் முழங்கால் வரை உயர்ந்தது. இந்தக் காலநிலையால் தான் இந்த குன்றுகளின் வலைப்பின்னல் உண்மையில் "ஆஸ்மாடிக் நகரங்களாக" வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என இரண்டு ஆராய்ச்சியாளர்களும் கோட்பாடு வகுக்கின்றனர்.
பெரும்பாலான அகழிகள் சாலைகள் என்பதைவிட நதிகளை நிறைக்கும் வடிகால் கால்வாய்களாக செயல்பட்டிருக்கலாம். பெரு மழைக்காலங்களில் சமூகத்தின் தேவைக்கு ஏற்ப தண்ணீரைக் கொண்டு செல்லவும் பயன்பட்டிருக்கலாம். இந்த வளாகங்கள் நீர்நிலைகளாகவும் இருந்திருக்கலாம் என யெபெஸ் தெரிவிக்கிறார்.
"இந்தக் கோட்பாடு, அமேசான் மக்கள் தகவமைத்துக் கொள்வதில் எவ்வளவு திறன் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கான கூடுதல் சான்று," என்கிறார் யெபெஸ். அவரது ஆய்வுக் குழு இப்போது இந்தக் கருதுகோளை உறுதிப்படுத்தப் பணியாற்றி வருகிறது.
ஆனால் இந்தக் கோட்பாட்டை "அபத்தமானது" மற்றும் "ஆதாரமில்லாதது" என்கிறார் ரோஸ்டெயின். அங்கு காலநிலை ஈரப்பதத்துடனும் மழையுடனும் இருந்தபோதிலும், அந்த நிலைமை பிரச்னைக்குரியது என்கிற நிலையில் இல்லை என்கிறார். அதனால் மிகப்பெரிய நீர் மேலாண்மை அமைப்புகளுக்கான நிச்சயத் தேவை இருக்கவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நகரங்களை உருவாக்கியது யார்?
இந்தக் குன்றுகள் முதலாவதாக எப்போது உருவாக்கப்பட்டது என்பதில் தெளிவு இல்லை. பிரெஞ்சு குழு, ஐஎன்பிசி நியமித்த குழு மற்றும் யெபெஸ் தலைமையிலான ஈக்வடார் குழு என அனைத்தும் நேர்காணல்களில் தோராயமாக 3,000 - 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக இந்த குன்றுகள் ஒரே நேரத்தில் கட்டப்பட்டு குடியிருப்பாக பயன்படுத்தப்பட்டனவா என்பது தெரியவில்லை. தற்போது எஞ்சியிருக்கும் கட்டுமானங்களின் தட்டையான தோற்றத்தை 'லிடார்' தொழில்நுட்பம் வழங்குகிறது; ஆனால், அவை எப்போது உருவாக்கப்பட்டன அல்லது எவ்வளவு காலம் பயன்பாட்டில் இருந்தன என்பதை அது நமக்குத் தெரிவிப்பதில்லை.
அவை அனைத்தும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டு மக்கள் வசித்து வந்திருந்தால், அந்த நாகரிகம் மிகப்பெரியதாகவும், மிகவும் மேம்பட்டதாகவும், ஒருவித நிர்வாகக் கட்டமைப்போடு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருந்திருக்கக்கூடும் என்று அர்த்தம். அவற்றை ஒவ்வொன்றாக, மெதுவாகக் கட்டுவதற்கு மிகக் குறைவான ஒருங்கிணைப்பும் குறைந்த அளவிலான ஊழியர்களுமே போதுமானதாக இருந்திருக்கும்.
இந்தக் குடியிருப்புகள் பெரிய அளவிலான நிரந்தரமாக குடியிருக்கும் மக்கள் தொகையைக் கொண்டிருந்ததா அல்லது சடங்கு நடவடிக்கைகளுக்கு அதிக அளவிலான மக்கள் வந்து செல்வதற்காக இருந்ததா என்பது தெரியவில்லை என்கிறார் யெபெஸ்.
அருகிலுள்ள சங்காய் எரிமலையின் சிதைவுப் பொருட்களிலிருந்து உருவான சிறிய, இயற்கையான மேடுகளான 'ஹம்மக்ஸ்' போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் கருதுகிறார். அமேசான் மக்கள் முதலில் அந்த மேடுகளைத் தங்கள் வீடுகளுக்கான தளங்களாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், பின்னர் மக்கள் தொகை அதிகரித்தபோது அவற்றைப்போலவே உருவாக்க முயன்றிருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார்.
"அவர்கள் இயற்கையான நில அமைப்புகளில் மிகவும் உகந்ததைத் தேடிக்கொண்டிருந்தனர்," என்று யெபெஸ் கூறுகிறார்.
பண்டைய அமேசான் மக்கள் எந்த அளவுக்கு காடுகளை வெட்டினர் அல்லது காடுகளைச் சுற்றிக் கட்டினர், அதனைச் சுற்றிய நிலங்களில் எந்த அளவுக்கு உளவு செய்தனர் என்பதை மற்ற ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

பட மூலாதாரம், Sofia Quaglia
"இந்தக் காடுகள் தங்களை மிக விரைவாக குணப்படுத்திக் கொள்ள முடியும். எனவே தான் கடந்த காலங்களில் மக்கள் எங்கு இருந்தனர் என்பதைச் சொல்வது கடினம்," என்கிறார் புளோரிடா தொழில்நுட்ப நிறுவனத்தின் தொல்லுயிர்ச் சூழலியலாளரான மார்க் புஷ்.
இன்று நாம் பார்க்கும் உபானோ பள்ளத்தாக்கு தாவரங்கள் பண்டைய காலங்களில் அல்லாமல் கடந்த 200 அல்லது 300 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த குன்றுகளில் சரியாக எந்த வகையான சமூகம் வாழ்ந்தது என்பதும், அவர்களின் கலாசாரம் எப்படிப்பட்டது என்பதும் ஒரு மர்மமாகவே உள்ளது.
"மானுடவியல் சார்ந்த கூடுதல் கேள்விகள் குறித்து மிகக் குறைவாகவே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன."என்கிறார் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியல் பேராசிரியரான புளோரெனிகோ டெல்காடோ. இந்தக் குன்றுகளை ஆய்வு செய்து வரும் ஈக்வடார் குழுவில் அவரும் இடம்பெற்றுள்ளார். இந்தப் பெரும் அளவிலான மணலை நகர்ந்த மேலிருந்து கீழான நிர்வாக, ஒரு திட்டம் மற்றும் ஒரு விதமான தலைமை இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
"இன்னும் பல விஷயங்கள் விடுபட்டுள்ளன," என்கிறார் டெல்காடோ. ஒரு வெளிப்படையான பிரச்னை என்னவென்றால் அங்கு உண்மையில் வாழ்ந்த மனிதர்களுக்கான எந்தச் சான்றும் இல்லை. இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் எந்த இடுகாடும் எலும்புக்கூடுகளும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. "மக்கள் எங்கே? என்பது தான் எனக்கு இருக்கும் மிக முக்கியமான கேள்வி," எனத் தெரிவித்தார் டெல்காடோ..
தொலைந்து போன நகரமா?

பட மூலாதாரம், Museo Gonsha/Doménica Ortega
இந்த அமேசான் நகரவியலைச் சுற்றிய தொலைந்து போன நகரம் என்கிற உரையாடலில், இந்தக் குன்று வலைப்பின்னல்கள் வெளியுலகில் இருந்து நாகரிகத்திலிருந்து வெகு தொலைவில், மரங்கள் சூழ்ந்த காட்டிற்கு நடுவே யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் மறைத்து வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றன.
அது சரியான தகவல் கிடையாது. பண்டைய காலம் போலவே தற்போதும் உபானோ பள்ளத்தாக்கில் மனிதர்கள் குடியேறியுள்ளனர்.
குன்று அமைந்திருக்கும் வளாகங்கள் ஐஎன்பிசி பாதுகாப்பின் கீழ் இருந்தாலும் அவற்றில் பல தனியார் நிலங்களில் அமைந்துள்ளன. எங்களின் அகழாய்வு ஆராய்ச்சிகளுக்காக இந்தக் குன்றுகளை அணுக வேண்டுமென்றால் உள்ளூர் விவசாயிகளின் நிலத்தின் மீது ஏறுவதற்கும் பசுக்களைக், மின்மயமாக்கப்பட்ட வேலிகளையும் கடந்து செல்வதற்கும் உள்ளூர் விவசாயிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
தங்களின் நிலத்தை உழ முடியவில்லை என சில விவசாயிகள் கவலையில் இருப்பதாகவும் தங்களின் நிலத்தில் உள்ள குன்றுகளை அழிக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் கார்மென் கீட்டோ தெரிவிக்கிறார். இவர் ஹுவாபலா வளாகம் அருகில் உள்ள 1,450 ஹெக்டேர் விவசாய நிலத்தைப் பராமரித்து வருகிறார். ஆனால் கீட்டோ உள்ளிட்ட மற்ற உள்ளூர் மக்கள் இந்த அகழாய்வு கண்டுபிடிப்புகளால் பெருமை கொள்கின்றனர். அவற்றைப் பாதுகாக்க கடினமாக வேலை செய்கின்றனர்.
இதுவரை பட்டியலிடப்பட்டுள்ள 5,300-க்கும் மேற்பட்ட மண் குன்றுகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டிருக்கும் மொரோனா மாகாணத்தில், உள்ளூர் வரலாற்றில் ஆர்வமுள்ள ஏழு பேர் கொண்ட குழுவினர், அந்தக் குன்றுகளைப் பாதுகாப்பதற்காகத் தன்னிச்சையான மற்றும் தன்னார்வ அடிப்படையிலான ஒரு கண்காணிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஒரு தரவு விஞ்ஞானி, ஒரு கட்டிடக் கலைஞர், ஒரு சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலதரப்பட்ட நபர்களைக் கொண்ட அவர்கள், தங்களைப் பாரம்பரியச் சொத்துக்களின் பாதுகாவலர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். 2025-ஆம் ஆண்டின் கோடைக்காலம் முதல், மணல் குன்றுகள் அழிக்கப்படுவது குறித்து அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிப்பது, அந்தக் குன்று அமைப்பின் வரலாறு குறித்து உள்ளூர் நில உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் ஆர்வமுள்ள புதியவர்களுக்காகச் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்வது போன்ற பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாகாணத்தில் உள்ள சிறிய நகரமான பாப்லோ செக்டோவில் இந்தக் குன்றுகளைக் கொண்டாடுவதற்காக ஒரு சிறிய தொல்லியல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. நகரின் மையச் சதுக்கத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள இங்கு, 'டொலிடாஸ்' என்ற சொல்லைக் குறிக்கும் பெரிய வெள்ளை நிற நெகிழி எழுத்துக்கள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட அறிவிப்புப் பலகைகளுக்குப் பக்கத்தில், மூன்று பெரிய பழங்கால குன்றுகள் உள்ளன.
அந்நகரின் மேயரான யஜைரா ரமோன் ரோடாஸ், காலப்போக்கில் 'டோலிட்டாக்கள்' அப்பகுதியின் தற்போதைய குடியிருப்புவாசிகளுக்கு நன்மைகளைத் தரும் என்று தான் நம்புவதாகக் கூறுகிறார்.
"நாங்கள் எப்போதும் எங்கள் குடிமக்களிடம், 'இங்கே உங்களுக்கு மிகுந்த மதிப்புமிக்க ஒன்று கிடைக்கப்போகிறது' என்று கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












