You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு: சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், திருச்செந்தூர் கோயில் இந்தி கல்வெட்டு: வைகோ எதிர்ப்பு
(இன்று 30.04.2021 வெள்ளிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு: ஹர்ஷவர்தன்
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று அங்குள்ள வசதிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நேற்று ஆய்வு செய்தார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது "இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கே இறப்பு விகிதம் 1.11 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்தாலும், ஒவ்வொரு மரணமும் வேதனையானதுதான்.
கொரோனாவுக்கு எதிரான சிறந்த ஆயுதம், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதுதான். முக கவசம் அணிதல், அடிக்கடி சோப்பால் கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை விட மிகப்பெரிய ஆயுதம் இல்லை. இதைத்தான் பிரதமர் மோதி, ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விட குறைவாக இருந்தது. அதேபோல், இப்போதும் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையை குறைத்து விடுவோம்.
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பீதி அடைய வேண்டாம். நீங்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு 17 லட்சத்துக்கு மேற்பட்ட பரிசோதனைகளைச் செய்யும் அளவுக்கு இந்தியாவின் திறன் மேம்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போர் நடந்து வருகிறது. கொரோனாவை ஒடுக்க தனது அனைத்து அனுபவங்களையும் மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது" கூறினார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் இந்தியில் கல்வெட்டா? வைகோ கண்டனம்
திருச்செந்தூர் கோவிலில் இந்தியில் கல்வெட்டு வைக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் "அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூரில், தமிழ் கடவுள் முருகனின் ஆலயத்தில், திடீரென இந்தி கல்வெட்டுகள் முளைத்துள்ளதாக இன்று ஏடுகளில் வந்துள்ள செய்தியால், உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
கொதி நிலையை அறிவதற்கு, குரங்கு தன் குட்டியின் கையை எடுத்துச் சுடும் நீரில் வைத்துப் பார்ப்பது போல, ஆதிக்க உணர்ச்சிக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று பார்க்க, இந்தக் கல்வெட்டு மோ(ச)டி வித்தையை, அரங்கேற்றி உள்ளனர்" என்று வைகோ கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இதை யார் வைத்தார்கள், எப்போது வைத்தார்கள், என்ன நோக்கத்திற்காக வைத்தார்கள்? இந்தி ஆதிக்க சக்திகள் நடத்தும் கொல்லைப்புற ஏற்பாடுகளுக்கு, எந்தவிதத்திலும் தமிழ்நாட்டு அரசு இம்மி அளவும் இடம் தரக் கூடாது.
திருச்செந்தூருக்கும், வட ஆரியத்திற்கு எந்த காலத்திலும் எந்த தொடர்பும் இல்லை. இத்தகைய கல்வெட்டுகளுக்கு இடம் அளித்து, எதிர்காலத்தில் வரலாறைத் திரித்துக் கூறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடக் கூடாது.
தமிழ்நாட்டில், 1938 இல் தொடங்கிய மொழிப்போர்க் கனல், நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் இராஜாஜியும், தலைவர் கலைஞரும் போர்க்கொடி ஏந்திய உணர்வு கொஞ்சமும் மங்கி விடாமல், மானம் உள்ள தமிழ் மக்கள் இன்றைக்கும் போர்க்களம் புகுவதற்கு துடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அதற்கு முன்பாக, ஆட்சியாளர்கள், அந்த கல்வெட்டுகளை உடனே அகற்ற வேண்டும்; திருச்சீர் அலைவாய் என்று போற்றப்படும் செந்தில் ஆண்டவனின் சன்னிதியில், இந்திக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
வேல் ஏந்தி, சூரனை வதைத்துக் கோவில் கொண்டு இருக்கிற செந்தூர் ஆண்டவன் கோவிலுக்கு, மக்கள் கால்நடையாகவே வந்து வணங்கி வழிபட்டு, தமிழர் பண்பாட்டையும், மரபையும் பேணிக் காத்த மண்ணில், இந்தியைத் திணிக்க முயல்வதை, நொடிப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள்தான் ஆட்சி மொழிகள் என, பேரறிஞர் அண்ணா, 1967 ஆம் ஆண்டு, சட்டம் இயற்றினார்கள். அதை இனி யாராலும் மாற்ற முடியாது என்றும் உறுதிபட அறிவித்தார்கள். அந்தச் சட்டம்தான் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. அதன்படி, அந்த கல்வெட்டுக்கு அங்கே இடம் கிடையாது. எனவே, அவற்றை அகற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை; உடனடியாக அகற்றுங்கள்" என கூறியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
போலி ஆக்சிஜன் சிலிண்டர்களை விற்ற 2 பேர் கைது
தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் என கூறி போலி சிலிண்டர்களை விற்றவர்களை கைது செய்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்த நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் காத்திருக்கும் நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் சிலிண்டர்கள் என கூறி தீயணைப்புக் கருவிகளை சிலர் நேற்று விற்றுள்ளனர். ஒரு கருவியை ரூ.10 ஆயிரத்துக்கு அவர்கள் விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து கீதா அரோரா என்பவர் போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படை யில், டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்த அஸுதோஷ் சவுஹான் (19), ஆயுஷ் குமார் (22) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ரெம்டிசிவிர் அரசியல்: தமிழ்நாட்டுக்கு பாகுபாடு? யாருக்குத் தேவை? எப்படி விநியோகம்?
- தமிழ்நாடு தேர்தல்: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் யாருக்கு சாதகம்?
- மாநில தேர்தல் 2021: மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளாவில் புதிய ஆட்சி யார்?
- கொரோனா தடுப்பூசி: கோவிஷீல்டை தொடர்ந்து கோவேக்சின் தடுப்பூசி டோஸ் ரூ. 400 ஆக குறைப்பு
- தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஊரடங்கு நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: