தமிழ்நாடு அரசு பாட நூல்: 2 டன் அளவுக்குத் திருடி காயலான் கடையில் விற்ற கல்வித்துறை ஊழியர் கைது

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட நூல்களை பழைய இரும்பு கடையில் விற்ற பள்ளி கல்வித் துறை இளநிலை உதவியாளர் உள்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 டன் எடையுள்ள பாடநூல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழைய இரும்பு கடையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறைக்கு புகார்கள் வந்தன.

திமுகவை சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை அடுத்து அந்த பழைய இரும்பு கடையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கவேண்டிய சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணை மேற்கொண்டதில் இந்தப் பாடநூல்கள் 2019-20ஆம் ஆண்டில் விநியோகம் செய்வதற்கானவை என்று தெரியவந்துள்ளது.

மேலும் பாட நூல்களை சட்ட விரோதமாக பள்ளிக்கல்வித்துறை இளநிலை உதவியாளர் மேகநாதன் என்பவர் எடை போட்டு விற்பனை செய்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக மேகநாதன் மற்றும் கடை உரிமையாளர் பெருமாள்சாமி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, "மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளோம். மயிலாடுதுறையில் பெருமாள்சாமி என்பருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடையை சோதனை செய்ததில், 2019-20 கல்வி ஆண்டில் 6 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு விநியோகம் செய்வதற்கான 3,134 பாட நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பாட நூல்களை மயிலாடுதுறை கல்வித்துறை இளநிலை உதவியாளர் மேகநாதன் இரும்பு கடையில் எடைக்கு விற்றுள்ளார். இந்தப் பாட நூல்களின் எடை 2,067 கிலோ எடை இருந்தது.

மேகநாதன் மற்றும் இரும்புக் கடை உரிமையாளர் பெருமாள்சாமி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு, மயிலாடு துறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

மேகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :