You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜனவரி 4ல் பள்ளிகள் திறப்பு
(பிபிசி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நாளில் நடக்கும் நிகழ்வுகளில் முக்கியமானவற்றை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.)
கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டது. 8 மாத இடைவெளிக்குப் பிறகு ஊரடங்கு தளர்வால் மருத்துவக் கல்லூரிகளை டிசம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதன்படி, புதுச்சேரியில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இதையடுத்து இம்மாதம் 17ஆம் தேதி முதல் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகளை துவங்க உயர்கல்வித்துறை நேற்று(டிசம்பர் 15) உத்தரவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து, ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய அவர், "கொரோனா தொற்று தொடங்கியது முதல் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படிப்பதற்கான சூழல் ஏற்பட்டது. தற்போது புதுவையில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும்" என்று கூறினார்.
"ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்து சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளலாம். விருப்பப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். ஏற்கனவே, 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு சந்தேகங்களை கேட்கும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
"நாளை (டிசம்பர் 17) முதல் கல்லூரிகள் இயங்கும். இளங்கலை, முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொடர்பான விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளோம்."
தற்போது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வு முடிந்ததும் பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்படும்," என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
"மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் திட்ட கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை"
மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாயில் அமையவுள்ள 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த மருத்துவமனை கட்டுமான திட்டத்துக்கான நிதியை, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையான "ஜய்க்கா" கடனாக வழங்கும் என்றும் வரும், 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் பணிகள் முடிக்கப்படும் என முதலில் உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், இதுவரை ஜய்க்காவிடம் இருந்து நிதியே கிடைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட பதிலில் தெரிய வந்துள்ளது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மதுரை எய்ம்ஸ் குறித்து, பல்வேறு விவரங்களை மத்திய அரசிடம் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, 'மதுரை எய்ம்ஸ்க்கு, ஜய்க்காவிடம் கடன் பெறும் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானால்தான் கடன் விபரம் தெரிவிக்கப்படும் எனவும் கடன் கிடைத்த பின்தான் கட்டுமான பணி துவங்கும். இன்றைய நிலவரப்படி, எய்ம்ஸ்க்கான நிலத்தை, மத்திய அரசிடம் மாநில அரசு ஒப்படைக்கவில்லை' என தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், எய்ம்ஸ் பற்றி விபரம் கோரிய பாண்டியராஜா, கட்டுமான பணி துவக்கம், முடியும் மாதம், ஜய்க்கா கடன் திட்டத்தின் தற்போதைய நிலை, மருத்துவ, நர்சிங் படிப்பு எப்போது துவங்கும், எய்ம்ஸ்க்கு மத்திய - மாநில அரசுகள் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனரா? எய்ம்ஸ் மாதிரி வரைபடம் கிடைக்குமா என்பன உள்ளிட்ட, 17 கேள்விகளை கேட்டு இருந்தார்.
பிற செய்திகள்
- வாடகை பாக்கி: லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு
- 180 கோடி நட்சத்திரங்களை எண்ணி முடித்த விண்வெளி தொலை நோக்கி: வியப்பூட்டும் தகவல்கள்
- மதுரை கிராமத்தின் ஓயாத போராட்டம்: எரிவாயு குழாய் திட்டத்துக்கு எதிர்ப்பு
- கொரோனா வைரஸ்: பிளாஸ்மா தெரபியுடன் சில இந்திய மருத்துவர்கள் முரண்படுவது ஏன்?
- கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: அடக்கம் செய்ய வேறு நாட்டிடம் உதவி கோரும் இலங்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்