சர்ச்சையில் இந்திய அமைச்சர் - விவசாயிகள் போராட்டத்துக்கு பாகிஸ்தான், சீனாவை தொடர்புபடுத்தியவர்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

டெல்லியிலும் பிற மாநிலங்களிலும் நடந்து வரும் விவசாயிகளின் போராட்ட பின்னணயில் பாகிஸ்தானும், சீனாவும் இருந்து கொண்டு தூண்டி விடுவதாக இந்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே வெளியிட்ட சர்ச்சை கருத்தால் அவர் கடுமையாக நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்னா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தற்போது நடந்து வரும் போராட்டம் விவசாயிகளுடையதே இல்லை. சீனாவும், பாகிஸ்தானும் அதன் பின்ணயில் உள்ளன. முதலில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை அவை தூண்டி விட்டன. தேசிய குடியுரிமை பதிவேடு வருகிறது, குடிமக்கள் திருத்த சட்டம் வருகிறது, அதனால் முஸ்லிம்கள் நாட்டை விட்டு ஆறு மாதங்களில் வெளியேற வேண்டும் என பீதியை கிளப்பின. ஆனால், அப்படியேதேனும் நடந்ததா?" என்று கூறினார்.

"இதுபோன்ற முயற்சிகள் எல்லாம் பலன் கொடுக்காது. இந்த போராட்டங்களால் விவசாயிகளுக்கே இழப்பு நேரிடும். இது மற்ற நாடுகளின் சதி" என்று அமைச்சர் தன்வே பேசினார்.

அவர் பேசிய காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளியான நிலையில், பல்வேறு விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் "உணர்வுப்பூர்வமிக்க விவசாயிகள் போராட்டத்தை இப்படியா கொச்சைப்படுத்துவார் ஒரு மத்திய அமைச்சர்" என்று கடுமையாக சாடினார்கள்.

டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியின் தலைவர் எஸ். மன்ஜிந்தர் சிங் சிர்ஸா, தலைநகரில் அமைதியாக விவசாயிகள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதி அவர்கள் போராடுகிறார்கள். இந்த நாட்டுக்காக போராடி உயிர் விட்டவர்கள் நமது விவசாயிகள். இந்த நாட்டுக்காக தங்களின் உயிர்த்தியாகம் செய்த பிள்ளைகளை பெற்ற நமது விவசாயிகள் அங்கு போராடுகிறார்கள். அவர்களை தேச விரோதமானவர்களாக சித்தரிக்காதீர்கள" என்று மன்ஜித் சிங் சிர்ஸா கூறினார். இது தொடர்பாக ஒரு காணொளியையும் அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

"எந்த பிரச்னைக்கு யார், யாரையெல்லாம் இந்த மத்திய அமைச்சர் இழுக்கிறார்" என்று மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனை அரசின் அமைச்சர் பச்சு காடூ விமர்சித்தார். "கடந்த முறை கூட ஏதோவொரு பொதுப்பிரச்னையில் வாய்க்கு வந்தபடி உளறியதால் அவரது வீட்டை முற்றுகையிட்டு எங்களுடைய கட்சியினர் கேரோ செய்தனர். இனி அவரது வீட்டுக்குளேயே செல்ல வேண்டியதுதான்" என்று அமைச்சர் பச்சு கூறினார்.

முன்னதாக, சிவசேனை கட்சியின் எம்.பி சஞ்சய் ரெளட், "ஒரு மத்திய அமைச்சரே விவசாயிகள் போராட்டத்தில் அண்டை நாடுகளின் பின்னணி இருப்பதாக கூறுகிறார் என்றால் அந்த தகவல் உண்மை என்றால் அந்த நாடுகள் மீது ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை பாதுகாப்பு அமைச்சர் நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறினார்.

கடந்த புதன்கிழமை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி சீக்கிய எம்.பி, இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேசியபோது, அதை தவறுதலாக புரிந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், "இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னை. அதை அந்த நாடுகளே தீர்த்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார். அவரது கருத்து பரவலாக விமர்சிக்கப்பட்டது. எனினும், பிறகு பிரிட்டன் வெளியுறவுத்துறை தலையிட்டு இது இந்தியாவில் நடக்கும் உள்விவகாரம் என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது என்று இந்தியா டுடே நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவின் மத்திய அமைச்சரே விவசாயகள் போராட்டத்தை பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் தொடர்புபடுத்தி பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: