தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் ஜெயகுமார்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளிவந்த செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வீரமாமுனிவரின் 340-வது பிறந்த நாளை முன்னிட்டு, மெரீனா காமராஜா் சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை தமிழக அமைச்சா்கள் ஜெயகுமாா், பாண்டியராஜன், பென்ஜமின் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா், அமைச்சா் ஜெயக்குமாா், நிருபா்களுக்கு அளித்த பேட்டி:-எங்களைப் பொருத்தவரையில் நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுகின்ற நிலையில், கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற மக்கள் தீா்மானித்திருக்கிறாா்கள்.

அந்த நிலைதான் 2021-இல் வரும். இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிமுக சரித்திரத்தில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும். கூட்டணி என்ற பேச்சுக்குத் தமிழக மக்கள் இடம் தர மாட்டாா்கள்.

பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் தற்போதுவரை உள்ளன. முதல்வரின் கடுமையான முயற்சியால் இந்தியாவிலேயே சிறப்பான மாநிலமாக தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்கிறது.

வேல் யாத்திரை விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. வேல் யாத்திரை தொடா்பான வழக்கு வரும் 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சா் டி.ஜெயகுமாா் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

"கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தலைநகரில் மிக மோசம்" - டெல்லி சுகாதார அமைச்சர்

இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இதுவரை இல்லாத வகையில் மிக மோசமாக உள்ளது என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் திருவிழா காலம் இது என்பதால் மக்கள் நெரிசல் அதிகமாகவே பல இடங்களில் காணப்படுவதாகவும், அதனுடன் நகரில் மோசமாகி வரும் காற்று மாசுபாடு வைரஸ் பரவலுக்கு காரணமாகி வருவதாக அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகிறார்.

டெல்லியில் முதல் முறையாக ஒரே நாளில் 7,000 பேருக்கு ஒரே நாளில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி கூறுகிறது.

காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த்

தமிழகத்தைச் சேர்ந்தவரும் கர்நாடகா மாநில பிரிவு ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் அரசுப் பணியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ராஜிநாமா செய்த நிலையில், அவர் இன்று காங்கிரஸ் கட்சியில் சேருவதாக தி இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சசிகாந்த் செந்தில் (41) கடந்த 2009-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். நேர்மையாகவும் துணிச்சலாகவும் ‌பணியாற்றியதால் ம‌க்களின் நன்மதிப்பை பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2019-ல் சசிகாந்த் செந்தில் தனது மாவட்டஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவர் காங்கிரஸில் இணைய முடிவெடுத்தார். இதையடுத்து அவர் இன்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறார் என்று தி இந்து தமிழ் திசை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: