You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைய என்ன காரணம்?: விஜயபாஸ்கர் பிரத்யேகப் பேட்டி
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுவது குறைந்து வருகிறது. இறப்பு விகிதமும் குறைந்திருக்கிறது.
கொரோனா பரவுவது குறைந்திருக்கிறதா, இரண்டாவது அலை ஏற்பட்டால் என்ன செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து:
கே. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. உண்மையில் இதற்கு என்ன காரணம்?
ப. அண்டை மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. ஏன், ஏற்கனவே பாதிக்கப்பட்டு மீண்ட ஐரோப்பிய நாடுகளிலேயே புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. ஐரோப்பாவில் ஒரு நாளைக்கு இரண்டரை லட்சம் புதிய நோயாளிகள் வருகிறார்கள். அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் நோயாளிகள் வருகிறார்கள்.
இந்தியத் தலைநகரமான டெல்லியில் ஒரு நாளைக்கு ஆறாயிரத்திற்கும் மேல் நோயாளிகள் வருகிறார்கள். தமிழ்நாட்டில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு முக்கியக் காரணம், நாம் தொடர்ந்து ஆர்டி - பிசிஆர் சோதனைகளை மட்டும் செய்வதுதான். கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆர்டி - பிசிஆர் சோதனைகளை நாம் தமிழ்நாட்டில் செய்திருக்கிறோம். ஒரு நாளைக்கு 80,000 - 90,000 ஆர்டி - பிசிஆர் சோதனைகளை நாம் செய்கிறோம். கொரோனா பாஸிடிவாகக்கூடிய ஒருவரையும் நாம் தவறவிடுவதில்லை. இதனால்தான் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஆனால் இந்த நேரத்தில் நம்மை நாமே பாராட்டிக்கொண்டுவிட முடியாது. இப்போதுதான் நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
- கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா சானிடைசர் தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
கே. பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அதைத் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
ப. இரண்டாவது அலை வராமலிருப்பது நம் கையில்தான் இருக்கிறது. எல்லோருமே பொது சுகாதாரத் துறையின் விதிகளின்படி முகக் கவசத்தை அணிந்து, கைகளைக் கழுவி, சமூக இடைவெளியை சரியாக கடைபிடித்தால் மூன்று வாரங்களில் தமிழ்நாட்டில் புதிய நோயாளிகளே இருக்கமாட்டார்கள். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப சொல்கிறோம். அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்தால், நிச்சயமாக இரண்டாவது அலையைத் தடுக்கலாம்.
கே. கொரோனா பரவ ஆரம்பித்த காலத்தில், ரெம்டெசிவிர் மருந்து மிகவும் நல்ல பலனை அளிக்கக்கூடிய மருந்தாக முன்வைக்கப்பட்டது. இப்போது இத்தனை மாதங்கள் கழிந்துவிட்டது. அந்த மருந்து உண்மையிலேயே பலனளிக்கிறதா?
ப. கொரோனாவிற்கென drug of Choice என்று ஒன்று கிடையாது. ஆகவே, நோய்க் குறிகளுக்குத்தான் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது. அதைத்தான் செய்கிறோம். இந்த நிலையில், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர், டோசிலிசிமாப் போன்ற உயிர்காக்கும் மருந்துகளைத் தருவித்து, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே செலுத்துகிறோம்.
ஆகவே நுரையீரல் பாதிப்பு இல்லாமல் உயிர் காக்கப்படுகிறது. களத்தில் இருக்கக்கூடிய எங்களுடைய மருத்துவர் அணி இது நல்ல பலனை அளிக்கிறது என்கிறார்கள். ஐசிம்ஆருக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட, இது நல்ல பலனளிக்கிறது என்ற நம்முடைய கருத்தைப் பெற்று சிகிச்சை வழிமுறைகளை மாற்றியமைக்க வேண்டுமென சொல்லியிருக்கிறோம். மருத்துவர்களின் கூற்றுப்படி, துவக்க நிலையில் கொடுத்தால் இந்த மருந்துகள் நல்ல பலனை அளிக்கின்றன.
கே. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீண்டுவிட்டாலும்கூட, அவருக்கு நீண்ட கால பாதிப்புகள் இருக்குமென சொல்லப்படுகிறது. இது நமது பொது சுகாதாரத் துறையின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Post - Covid (கொரோனா தொற்றிலிருந்து மீண்டதற்குப் பிந்தைய) பிரச்சனைகள் குறித்து தமிழக பொது சுகாதாரத் துறையின் நிலை என்ன?
ப. சிலருக்கு நோய்க் குறிகளே இருப்பதில்லை. ஆனால், ஒரு சிலருக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. 50- 60 நாட்கள் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க நேர்கிறது. அவர்களையும் நம்முடைய மருத்துவர்கள் சிறப்பாக சிகிச்சையளித்து மீட்கிறார்கள்.
ஆனாலும், Post - Covid பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகவேதான் தமிழ்நாட்டின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவனைகளிலும் Post - Covid க்ளீனிக்குகளைத் திறந்திருக்கிறோம். அங்கு நுரையீரலின் திறனை தொடர்ந்து பரிசோதிக்கிறோம். கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் இந்த க்ளீனிக்குகளுக்கு வந்து தங்களை தொடர்ந்து பரிசோனை செய்துகொள்வது அவசியம்.
கே. தமிழ்நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சோதனைகளும் குறைந்திருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது..
ப. நிச்சயமாகக் கிடையாது. சோதனைகள் எப்போது செய்வோம்? ஒன்று காய்ச்சல் வர வேண்டும். அல்லது மூச்சுத் திணறலோடு வருபவர்களுக்கு சோதனை செய்வோம். அல்லது யாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதோ அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து சோதனை செய்வோம். இப்போது புதிய தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கையே குறையும் நிலையில், சோதனைகளும் குறையும். துவக்கத்தில் சோதனை செய்யப்படுபவர்களில் 13 - 14 சதவீதம் பேருக்கு தொற்று இருந்தது.
இப்போது அந்த வீதம், 3.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் புதிதாக ஏழாயிரம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலை மாறி, இப்போது இரண்டாயிரத்திச் சொச்சம் என்ன எண்ணிக்கையில்தான் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். இருந்தாலும்கூட, 70,000 - 80,000 என்ற எண்ணிக்கையில் சோதனைகள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. அப்படிச் செய்வதால்தான் தமிழ்நாட்டில் உடனடியாக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு, புதிய நோயாளிகள் உருவாவது தடுக்கப்படுகிறது.
கே. நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு பரவுகிறது என்ற விகிதம் எந்த அளவில் இருக்கிறது..?
ப. முகக் கவசம் அணியாமல் இருந்தால், கண்டிப்பாக பெரிய அளவில் பரவும். தவிர, நோய் பரவும் சங்கிலித் தொடரை அறுக்க வேண்டும். அதைத் தமிழ்நாட்டில் செய்கிறோம். தீவிரமாக சோதனைகளைச் செய்வது, துவக்கத்திலேயே நோயாளிகளைக் கண்டறிவது, தொடர்பிலிருந்துவர்களைக் கண்டறிவது, அவர்களைத் தனிமைப்படுத்துவது என்ற இந்த வியூகம்தான் நோயாளிகள் குறைவதற்கு காரணம்.
கோவிட் கேர் மையங்கள் மூடப்பட்டுவிட்டன. கோவிட் சுகாதார மையங்கள் மூடப்பட்டுவிட்டன. சித்தா மையங்கள் மூடப்பட்டுவிட்டன. காரணம் என்னவென்றால் அந்த அளவுக்கு நோயாளிகள் இல்லை. இருந்தபோதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்ட ஒரு லட்சத்து முப்பத்தி ஐந்தாயிரம் படுக்கைகளை எந்த சூழலையும் சமாளிக்க தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.
கே. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்திற்கும் இப்போதைக்கும் இடையே தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பு எந்த அளவுக்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது?
ப. அரசு மருத்துவக் கட்டமைப்பு ஏற்கனவே வலுவாக இருந்தது. நம்முடைய கிராமப்புற பொது சுகாதார அமைப்பு மிகவும் வலுவானது. தமிழ்நாட்டின் மாதிரியை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டுமென பிரதமரே பாராட்டியிருக்கிறார்.
இருந்தாலும் சீனாவில் நோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து நாம் நம்முடைய கட்டமைப்பை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தினோம். அந்தத் தருணத்தில் இந்நோயைப் பரிசோதிக்க இந்தியாவில் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் வைராலஜி என ஒரே ஒரு சோதனைச் சாலைதான் இருந்தது. அதற்குப் பிறகு இரண்டாவதாக கிங் இன்ஸ்ட்டிடியூட்தான் கொரோனாவை சோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்டது. முதலில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கொரோனா வார்டை துவங்கினோம்.
ஆனால், இன்று 203 சோதனைச் சாலைகள் தமிழ்நாட்டில் இயங்கிவருகின்றன. ஒரு லட்சத்து பதினாறாயிரம் படுக்கைகளை உருவாக்கியிருக்கிறோம்.
கே. கொரோனா பரவலுக்குப் பிறகு, பொதுமக்கள் அரசு மருத்துவக் கட்டமைப்பைச் சார்ந்திருப்பது அதிகரித்திருக்கிறது. இதற்கு தமிழகத்தின் கட்டமைப்பு தயாராக இருக்கிறதா?
ப. நிச்சயமாக. இப்போது ஒரு கோடி ஆர்டி - பிசிஆர் சோதனைகளைச் செய்திருக்கிறோம் என்றால் அதில் 76 -80 சதவீதம் அரசின் ஆய்வகங்களில்தான் செய்யப்பட்டிருக்கின்றன. சிகிச்சையைப் பொறுத்தவரையிலும் 80 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இது தவிர, புதிய 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகரம் வாங்கப்பட்டுள்ளது. 16,000 மருத்துவர்கள், 20,000 சுகாதாரப் பணியாளர்கள் இந்தப் பத்தாண்டுகளில் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே இதுபோல கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
கே. கொரோனா சிகிச்சையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் தாண்டி தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது..
ப. தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தவறு. பல மாவட்டங்களில் கூடுதலாக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்துசெய்திருக்கிறோம். இப்போதும் ஆய்வகங்களையும் மருத்துவமனைகளையும் அரசு கண்காணித்து வருகிறது. ஸ்கேன் மையங்களைக் கண்காணித்து வருகிறது. யார் தவறு செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
பிற செய்திகள்:
- கமல்ஹாசன் பிறந்தநாள்: 66 சுவாரஸ்ய தகவல்கள்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை
- டிரம்ப் ஆற்றிய 17 நிமிட உரை: அதில் இருக்கும் உண்மைகள் என்ன?
- காலாவதியாகும் நிலையில் 'டெட்' தேர்வு சான்றிதழ்: பீதியில் பட்டதாரிகள்
- அமெரிக்க தேர்தலில் 71 சதவீத வாக்கு பெற்ற தமிழர் ராஜா கிருஷ்ணமூர்த்தி - யார் இவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்