You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Paytm: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கம்
இந்தியாவை சேர்ந்த பிரபல திறன்பேசி வழி பணப்பரிமாற்ற செயலியான "Paytm", கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அலுவல்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
எனினும், இந்த தகவலை பேடிஎம் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
அதில், தங்களது செயலியை தற்காலிகமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து புதிதாக பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும், ஏற்கனவே பயன்படுத்தி வருபவர்கள் புதிய பதிப்புகளை பதிவிறக்கம் செய்ய இயலாது என்றும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"எங்களது சேவை விரைவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். உங்களது பணம் பாதுகாப்பாக உள்ளது. மேலும், நீங்கள் வழக்கம்போல் பேடிஎம் செயலியை பயன்படுத்தலாம்" என்று அந்த நிறுவனத்தின் டிவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் விதிமுறைகளை பேடிஎம் செயலி தொடர்ந்து மீறி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெக்கிரன்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பேடிஎம் செயலியை ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் மிகப்பிரபலமான பேடிஎம் பணப்பரிவர்த்தனை செயலி, தொழில்முறை பரிவர்த்தனை, பணப்பரிமாற்றம் போன்றவற்றுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கான பணப்பரிவர்த்தனைக்கு பல இடங்களில் தடை உள்ளது. இதனால் கூகுள் நிறுவனம் உருவாக்கிய புதிய விதிகளில், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட பரிவர்த்தனைகளுக்கு தங்கள் தளத்தில் அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய சர்ச்சையில் பேடிஎம் நிறுவனம் இருப்பதாகவும், அதன் செயலியை சட்டவிரோத சூதாட்ட பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்தப்பின்னணியிலேயே பேடிஎம் செயலி அந்த குறைபாட்டை சரி செய்யாதவரை தமது தளத்தை அந்த நிறுவனம் பயன்படுத்தாத வகையில், பேடிஎம் செயலியை ஆண்ட்ராய்டு ப்ளேஸ்டோர் நீக்கியிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கூகுள் ப்ளே ஸ்டோர் புதிய விதிகள் தொடர்பாக அதன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரிவு துணைத் தலைவர் சூசான் ப்ரே எழுதியுள்ள வலைப்பதிவில், "பயனர்களை தீங்கில் இருந்து பாதுகாக்கும் கொள்கைகளை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். ஒரு செயலி, இந்தக் கொள்கைகளை மீறும் போது, அது குறித்த விதி மீறலை முறைப்படி அந்த செயலின் டெவலப்பருக்கு தெரிவிக்கிறோம். அதன் பிறகு விதிகளுக்கு உட்பட்டு அந்த செயலி இருப்பதை உறுதிப்படுத்துகிறோம். அதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அந்த செயலியை நீக்கி வைக்கிறோம். கொள்கை மீறல்களில் தொடர்ந்து அந்த செயலி ஈடுபடுமானால், அதை நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கையை கடுமையாக மேற்கொள்வோம்," என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: