You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை தொடரும்: முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடருமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் மீண்டும் அ.தி.மு.கவிற்கு வந்தால் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, சிறு, குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகள், விவசாயிகள், சுய உதவிக் குழுவினர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சரிடம், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவு இரு மொழிக் கொள்கைதான். அது தொடரும். இது தொடர்பாக ஏற்கனவே விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
தற்போது பா.ஜ.கவில் உள்ள முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மீண்டும் அ.தி.மு.கவிற்கு வந்தால் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என செய்தியாளர்கள் கேட்டபோது, அ.தி.மு.கவில் இருந்துதான் அவர் பாரதிய ஜனதாக் கட்சிக்குச் சென்றார். அவர் எங்கள் கட்சிக்கு மீண்டும் வந்தால் நிச்சயமாக சேர்த்துக்கொள்வோம் என்று தெரிவித்தார்.
நடிகர் எஸ்.வி. சேகர் அ.தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது குறித்தும் முதலமைச்சருக்கு இந்தி தெரியும் எனக் கூறியிருப்பது குறித்தும் கேட்டபோது, "எங்களுக்கு இந்தி தெரியுமென அவருக்கு எப்படித் தெரியும்? முதலில் அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? அவர் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர் என்றால், பிரச்சாரத்திற்கு வரவேயில்லையே? அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இணைந்து தேர்தலைச் சந்தித்தபோது அவர் எங்கேயுமே பிரச்சாரத்திற்கு வரவில்லையே? முதலில் அ.தி.மு.கவில்தானே இருந்தார்? அ.தி.மு.கவைத்தானே புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்? அவர் சரியாகச் செயல்படாத காரணத்தால்தானே வெளியேற்றப்பட்டார்? அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது பேசுவார், வழக்கு வந்தால் ஒளிந்துகொள்வார்." என்று தெரிவித்தார்.
ராமர் கோவில் கட்டப்படுவது குறித்த முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, அது பல ஆண்டு காலப் பிரச்சனை என்றும் நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு செயல்படுவதாகவும் முதல்வர் கூறினார்.
இ-பாஸ் முறையை பொருத்தவரை அதனை வழங்கும் முறை எளிதாக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதுவரை ஒரு மாவட்டத்திற்கு ஒரு குழுதான் அதனை வழங்கும் பணியில் ஈடுபட்டுவந்ததாகவும் தற்போது இரண்டு குழுக்கள் அதனை வழங்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: