You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை: சீமான், ஹரி நாடார் மீது புகார் - இன்றைய செய்திகள்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என காணொளி பதிவு செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியிடம் மருத்துவமனையில் குற்றவியல் நடுவர் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி.
நடிகை விஜயலட்சுமி சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். நேற்று முன் தினம் அதிக மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி, தற்போது அடையாறில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் வெளியிட்டிருந்த காணொளியில் ‘‘சீமானும், சீமான் கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றேன். அதேபோல, ஹரி நாடார் என்பவரும் என்னை அசிங்கப்படுத்தினார். எனவே, சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும்’’ என்று கண்ணீர் வடித்தபடி அதில் கூறியிருந்தார்.
வைரலாக பரவியது
சமூக வலைத்தளங்களில் இந்தக் காணொளி வைரலாகப் பரவியது. இந்நிலையில், மருத்துவ மனைக்கு எழும்பூர் நீதிமன்ற குற்றவியல் நடுவர் வெங்கடேசன் வந்து, விஜயலட்சுமியிடம் நேரில் விசாரணை நடத்தினார். விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை அவர் பதிவுசெய்து கொண்டார்.
அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் போலீஸார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
தினத்தந்தி: தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் ரூ.1,500 கோடி இழப்பு
திரையரங்கங்கள் 4 மாதங்களாக மூடிக்கிடப்பதால், திரையரங்க அதிபர்களுக்கு ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
சென்னையில் உள்ள ‘ரோகிணி’ தியேட்டர் அதிபரும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளருமான ஆர்.பன்னீர்செல்வம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “கொரோனா ஊரடங்கு140 நாட்கள் ஆகிவிட்டன. திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வது? என்று தெரியாமல், வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர்.
அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? என்று அவர்களுக்கே தெரியாத நிலை இருக்கிறது. இதன் மூலம் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.” மேலும், “ஒவ்வொரு திரையரங்கத்துக்கும் ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் படத்தயாரிப்புகள் இல்லாமல் திரையரங்கங்கள் சார்பான இழப்பு ரூ.3 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறுகிறார்கள். திரையரங்குகளை திறக்க எப்போது அனுமதி வழங்குவார்கள்? என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இப்போது விமானங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்துவிட்டன. விமானத்தில் நெருக்கமாக அமர்ந்து தான் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் வராத ‘கொரோனா’, திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும்?.
திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்ய சொன்னால், செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.
தினமணி: “இணையம் மூலம் பத்திரப் பதிவு ஆவணங்களை பொதுமக்களே உருவாக்கலாம்”
பதிவுத் துறையின் இணையதளம் வழியாக பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ்.
பதிவுத் துறையின் இணையதளம் வழியே (www.tnreginet.gov.in) பொது மக்களே ஆவணங்களை உருவாக்கலாம். இதற்காக இணையதளத்தில் புதிய உள்நுழைவை (லாகின்) ஏற்படுத்த வேண்டும். பின்பு அதற்குரிய பயனா் பெயா், கடவுச்சொல்லை உள்ளீடு செய்து ஆவணத்தினை உருவாக்குக என்ற பிரிவை தெரிவு செய்ய வேண்டும்.
ஆவணத்தை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொள்ளலாம்.பதிவு செய்ய விரும்பும் ஆவணத்தின் தன்மையை தோ்வு செய்ய வேண்டும். சொத்தினை விற்பவா் அந்த சொத்தினை வாங்கிய ஆவண விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பூா்வீக சொத்தாக இருந்தால் அதனை பூா்த்தி செய்ய வேண்டியதில்லை.
எழுதிக் கொடுப்பவரின் பெயா், தந்தை பெயா், முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். முன் ஆவணத்தில் இருந்தும் இந்த விவரங்களை எடுத்துக் கொள்ளலாம். எழுதிப் பெறுபவரும் பெயா், தந்தை பெயா், முகவரி போன்ற விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.சொத்து விவரத்தின் கீழ் சா்வே எண், சொத்தின் பரப்பு, பட்டா எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
கைமாற்றுத் தொகை செலுத்தப்பட்ட விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். சொத்தின் நான்கு எல்லைகள் விவரம், சொத்து குறித்த மற்ற விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பிறகு அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தானாகவே திரையில் தோன்றும்.
அதனை இணையதளம் வழியே செலுத்தலாம். இதன்பின் ஆவணம் தானாகவே உருவாக்கப்பட்டிருக்கும். இதனை பிரதி எடுத்து சரிபாா்த்துக் கொள்ளலாம். தவறான விவரங்களை இணையதளத்தில் சென்று திருத்திக் கொள்ளலாம் என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
- இவ்வாறாக திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அரசுக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :