பிகாசோ 6 மாதங்களாக உருவாக்கிய இந்த ஓவியத்தை பார்த்ததும் மற்றவர்கள் 'அதிர்ச்சியானது' ஏன்?

    • எழுதியவர், ப்ரசியஸ் அடெசினா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பாப்லோ பிகாசோவின் சர்ச்சைக்குரிய 'அவிஞ்ஞான் நகரத்து இளம்பெண்கள்' ஓவியம் எந்த அளவுக்கு ரசிக்கப்பட்டதோ அந்த அளவுக்கு விமர்சனங்களையும் சந்தித்தது. தற்போதும் அந்த ஓவியம் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது.

அந்த ஒவியம் உருவாக்கப்பட்டு நூறு ஆண்டுகள் கழித்து புகழ்பெற்ற அமெரிக்க ஓவியரான ஹென்ரி டெய்லர் அதனை மீட்டுருவாக்கம் செய்து புதிய வடிவத்தில் உருவாக்கினார். சமீபத்தில் அவரது புதிய வடிவம் பாரிசில் பிகாசோ அருங்காட்சியகத்தில் நடைபெற்ற முக்கியமான ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

1907-ஆம் ஆண்டு, பாப்லோ பிகாசோ தனது நண்பர்களையும் கலைஞர்களையும் பாரிசில் உள்ள தனது ஸ்டூடியோவுக்கு அழைத்திருந்தார். ஆறு மாதங்களாக தான் உருவாக்கி வந்த ஓவியத்தை அவர்களிடம் காட்ட விரும்பினார். அங்கு வந்த அனைவருமே ஒரே மாதிரியான அதிர்ச்சி மற்றும் அருவருப்பு உணர்வை வெளிப்படுத்தினர்.

பிரெஞ்சு ஓவியரான ஜார்ஜஸ் ப்ராக் அந்த அனுபவத்தை பெட்ரோல் குடிப்பதுடன் ஒப்பிட்டார். ஹென்றி மேட்டீஸ் அதிலிருந்த பெண்ணை "அருவருப்பானவர்" என்று குறிப்பிட்டார். அதற்குப் பல ஆண்டுகள் கழித்து 1916-இல் தான் அந்த ஓவியம் பொதுவெளிக்கு வந்தது.

நூறு ஆண்டுகள் கழித்தும் பிகாசோவின் மிகவும் அடையாளம் காணக்கூடிய மற்றும் சர்ச்சைக்குரிய ஓவியமாக இது திகழ்கிறது. முந்தைய வடிவம் பற்றி டெய்லர் ஒரு முக்கியமான புள்ளியை வலியுறுத்தி குறிப்பிடுகிறார். பிகாசோ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் அந்த ஓவியத்தில் ஆப்ரிக்க கலையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பிகாசோ தனது சகாக்களுக்குக் காண்பித்தது அவிஞ்ஞான் நகரத்து இளம் பெண்கள் (1907) ஓவியத்தைத் தான். இது பார்சிலோனாவில் உள்ள ஒரு பாலியல் விடுதியில் ஐந்து நிர்வாணப் பெண்கள் பார்வையாளரின் கவனத்தைக் கோரும் விதத்தில் இருந்த பெரிய எண்ணெய் ஓவியமாகும்.

இரண்டு பெண்களுக்கு முகமூடி போன்ற முகம் இருந்தன, மூன்று பெண்கள் பார்வையாளர்களை உற்று நோக்குகின்றனர். அனைவருக்கும் கரடுமுரடான, சிதைந்த உடல்கள் இருந்தன. பிகாசோவின் கற்பனைத்திறன் கொண்ட பயணத்தில் இது பெரிய திருப்பமாக இருந்தது. அந்தக் காலத்தின் கலைசார் நெறிமுறைகளில் இருந்து மாறுபட்டதாகவும் அமைந்தது.

"உணர்வுப்பூர்வமான, உருவக ஓவிய முறையில் இருந்து விலகிச் சென்ற பிகாசோ வடிவங்களைப் பிரித்து உடலும் வெளியும் காட்டப்படும் விதத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தினார். இந்த மாற்றம் தான் கியூபிசம் மற்றும் பரந்த அளவில் நவீன கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டது," என பிகாசோ தேசிய அருங்காட்சியகத்தின் பொறுப்பாளரான ஜோவான் ஸ்னெர்ச் கூறுகிறார்.

அவிஞ்ஞான் நகரத்து இளம்பெண்கள் (The Young Ladies of Avignon) ஓவியம் 1916-ஆம் ஆண்டு வரை அவிஞ்ஞானின் பாலியல் விடுதிகள் (or The Brothel of Avignon) என்றே பெயரிடப்பட்டிருந்தன. அந்த ஆண்டில் தான் ஓவியத்தின் தலைப்பு சர்ச்சையற்ற ஒன்றாக மாற்றப்பட்டது.

கியூபிசத்தின் தோற்றத்துக்கு இது அடிப்படை பணியாக கருதப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலை இயக்கமான கியூபிசம் சிதறிய மற்றும் வடிவியல் வடிவங்களுக்காகப் பாரம்பரிய மற்றும் யதார்த்த பிரதிநிதித்துவத்தை கைவிட்டதற்காக அறியப்படுகின்றன.

இந்த ஓவியத்தில் பிகாசோ செய்ததைப் போல கியூபிசம் ஒரு பொருள் அல்லது நபரின் பல்வேறு கோணங்களை ஒரே புகைப்படத்தில் இணைத்தன.

"இந்த ஓவியத்துக்கு இவ்வளவு வலுவான எதிர்வினை வந்ததற்கு காரணம் என்னவென்றால் பிகாசோ ஒன்றை மட்டும் மாற்றவில்லை, ஒரே நேரத்தில் அனைத்தையும் மாற்றிவிட்டார். புதிய வடிவங்களை ஆராய்ந்து வந்த கலைஞர்களுக்கு கூட இது அகலக் கால் வைத்ததைப் போன்ற உணர்வையே கொடுத்தது," என்கிறார் ஸ்னெர்ச்.

ஆனால் பிகாசோவின் புதுமைகள் ஏதுமற்ற சூழலில் இருந்து தோன்றியவை அல்ல. அவை ஆப்ரிக்க துணைக் கண்டத்தில் இருந்து நேரடியாக வந்திருக்கலாம் என வாதிடப்படுகிறது.

இந்த ஓவியத்துக்கு நெடுங்காலம் முன்பே, ஒரு சிறிய உருவச் சிலையால் தூண்டப்பட்ட பிகாசோ ஆப்ரிக்க முகமூடிகள் மற்றும் சிற்பங்களின் மீது குறிப்பிட்டதொரு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்.

அந்தச் சிலை தற்போது காங்கோ குடியரசு என அறியப்படும் பகுதியில் இருந்து வந்தது. 1906-ஆம் ஆண்டில் மேட்டிஸ் அதனை பாரிசில் வாங்கியிருந்தார். பாரிசில் உள்ள ட்ரொகடெரோவின் இனவரைவியல் அருங்காட்சியகத்தின் ஆப்ரிக்க பிரிவுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார் பிகாசோ. தனது புதிய படைப்புக்கான நூற்றுக்கணக்கான தயாரிப்பு வரைபடங்களை அங்கு உருவாக்கினார்.

"அவை எவ்வாறு தெரிந்தன என்பது மட்டுமல்ல, அவை எவ்வாறு வேலை செய்தன என்பதும் அவரைக் கவர்ந்தது. முகங்கள் மிகவும் எளிமையான, சிதைந்த நிலையில் இருந்தன, சில நேரங்களில் தீவிரமாகவும் அமைதியற்றும் தோன்றின," என்றார் ஸ்னெர்ச்.

தொடர்ந்து பேசிய அவர், "மனித முகத்தை வித்தியாசமாக அணுகிய இந்த அணுகுமுறை அவருக்கு உந்துதலாக இருந்தது. அது இயற்கையான வடிவத்தில் இருந்து மாறுபட்ட வடிவங்களை நோக்கி அவரை நகர்த்தியது." என்றும் தெரிவித்தார்.

இந்தப் படைப்பு மட்டுமல்லாது அவரின் பெரும்பாலான படைப்புகளும் ஆப்ரிக்க கலைப் படைப்புகளின் தாக்கத்தால் உருவாகியிருந்தாலும் அதன் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டதற்காக பிகாசோ அறியப்படுகிறார்.

1920-ஆம் ஆண்டு ஒரு இதழுக்காக ஆப்ரிக்க கலை பற்றிய தொடரில் வேலை செய்து வந்த ஒரு விமர்சகரிடம் "இதைப்பற்றி கேள்விபட்டதே இல்லை." என அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்ரிக்க கலையால் பலனடைந்த பிகாசோ தனது படைப்புகளில் அதன் தாக்கத்தை ஒப்புக்கொள்ள மறுப்பது கலாசார சுரண்டல் குற்றச்சாட்டுகளை எழுப்பின. பிகாசோ அவதானித்த, ஆனால் புறக்கணித்ததாக தோன்றும் பொருட்களின் கலாசார, மத மற்றும் சமூக முக்கியத்துவத்தையும், அந்தக் காலத்தில் ஆப்ரிக்க கலை "பழமையானது" எனப் பார்க்கப்பட்ட பரந்த கருத்தாக்கத்துக்கு எவ்வாறு அது வலுசேர்த்தது என்பதையும் விமர்சனங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இளம்பெண்கள் ஓவியத்தின் மீட்டுருவாக்கம்

2007-இல் (இந்த ஓவியம் உருவாக்கப்பட்டு சரியாக நூறு ஆண்டுகள் கழித்து) தனது முதல் ஐரோப்பிய கண்காட்சி பயணத்துக்கான பாரிஸ் வந்தபோது பிகாசோவின் இந்தப் பிரபலமான ஓவியத்தை ஹென்றி டெய்லர் மீண்டும் ஆராயத் தொடங்கினார்.

டெய்லரின் பதிப்புக்கு 'காங்கோ டூ தி கேப்பிடல் அன்ட் ப்ளாக் அகெயின்' எனத் தலைப்பிடப்பட்டிருந்தது. அது தற்போது பாரிசில் உள்ள பிகாசோ தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த ஓவியத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் ஐந்து நிர்வாணப் பெண்கள் நிற்கும் விதத்தையும் இரண்டு முகமூடி அணிந்த முகங்களையும் அவ்வாறே வைத்துக் கொண்டார்.

முதலில் வெள்ளையாக இருந்த உருவங்கள் தற்போது கருப்பாக உள்ளன. இது ஆப்ரிக்க கலைக்கு மேலும் நெருக்கமாக உள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்ததற்காக அறியப்பட்ட டெய்லர், இந்த ஓவியத்தை, வித்தியாசமான கலாசார மற்றும் சமூகப் பின்னணி கொண்ட ஒரு கலைஞராக தனது பார்வையில் மீள் கற்பனை செய்து பார்த்தார்.

"வரலாற்று ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தப்படாத மக்களை மையப்படுத்தி டெய்லரின் பணிகள் உள்ளன, இது அவர்களுக்கு இருப்பு மற்றும் தனித்துவத்தை அளிக்கின்றன," என்றார் ஸ்னெர்ச்.

"இந்த இரண்டு வடிவங்களையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால் அதில் கலைசார் வித்தியாசங்கள் மட்டுமல்ல, அதிகாரம், செல்வாக்கு மற்றும் யாருடைய கதைகள் கூறப்படுகின்றன என்பது பற்றிய பரந்துபட்ட கேள்விகளை முன்வைக்கின்றன," என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு ஓவியங்களும் பெண்கள் மீதான வித்தியாசமான 'அணுகுமுறையும் சுட்டிக்காட்டுகின்றன. வரலாற்று ரீதியாகவே எதிர் பாலினத்தவருடனான பிகாசோவின் சிக்கலான உறவை அவரது ஓவியங்களில் இருந்து பிரித்துப் பார்ப்பது கடினமாகிறது. சிக்கல்கள் நிறைந்த காதல் உறவுகளால் அறியப்பட்ட பிகாசோ, அனைத்து பெண்களும் ஒன்று "கடவுள்கள் அல்லது மிதியடிகள்" என்றும் "துன்பத்துக்கான இயந்திரங்கள்" என்றும் ஃப்ரான்சாய்ஸ் கிலோட் என்கிற ஓவியரிடம் கூறியுள்ளார். சிதறிய உடல்கள் மீதான வன்முறை அழகியல் என்பதைவிடவும் தனிப்படை ஒன்றாகவே தெரிவதாக சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

"ஒரு பாலியல் விடுதியில் நிர்வாணப் பெண்கள் குழுவாக இருப்பது என்பது ஏற்கெனவே ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கின்றன, பிகாசோ அதில் இருந்த சிறிதளவு மென்மைத்தன்மையும் நீக்கிவிட்டார்," என்கிறார் ஸ்னெர்ச். இந்தப் புதிய வடிவம் சற்று மாற்றப்பட்டிருந்தாலும் அவர்களின் உடல்கள் அவ்வளவாக பிரிந்திருக்கவில்லை. அதன் முடிவு தீவிரமானது என்பதைவிடவும் சக்திவாய்ந்த ஒன்றாக இருக்கின்றன.

டெய்லர் மேம்படுத்திய ஓவியத்தில் நடுவில் இருக்கும் பெண் கைகளைப் பகுதியளவு தனக்குப் பின்னால் கட்டியவாறு நின்றார். அவர் வைத்திருக்கும் குட்டையான, சமச்சீரற்ற பாப் சிகை அலங்காரம், உலகப் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாரான முதல் கறுப்பினப் பெண் என்று அறியப்படும் அமெரிக்க-பிரெஞ்சு நடனக் கலைஞரும் பாடகியுமான ஜோசபின் பேக்கரின் சிகை அலங்காரத்தை ஒத்திருக்கிறது. இதைச் செய்வதன் மூலம் அந்தக் கலைஞர் "அடையாளம், இனம் மற்றும் பிரதிநிதித்துவத்தின் கேள்விகளைக் கொண்டு வருகிறார்," என்றார் ஸ்னெச்.

டெய்லர் தனது படைப்புக்கு வைத்த தலைப்பான 'காங்கோ டூ தி கேபிடல் அன்ட் ப்ளாக் அகெயின்' என்பது ஆப்ரிக்க கலையில் பிகாசோவின் ஆர்வத்தைத் தூண்டிய மேட்டீஸ் வாங்கிய காங்கோ உருவத்தைக் குறிக்கிறது. ஆப்ரிக்காவில் இருந்து பாரிஸ் வந்த அதன் நகர்வைக் குறிக்கிறது.

டெய்லர் அந்த ஓவியத்தை கருப்பின பெண்களைச் சேர்த்து அந்த ஓவியத்தை மீண்டும் கருப்பின அடையாளம் கொண்டதாக மாற்றியதையும் அது குறிப்பிடுகிறது. தங்கக் கடிகாரம் அணிந்திருக்கும் ஒரு வெள்ளை ஆணின் கை இடது ஓரத்தில் ஒரு பெண்ணைச் சீண்டுவது போல அமைந்திருக்கிறது. இது பிகாசோ முதலில் இந்த ஓவியத்தில் சேர்க்க நினைத்த ஒரு மாலுமி மற்றும் ஒரு மருத்துவ மாணவன் ஆகிய இருவரைக் குறிப்பதாக இருக்கலாம். "அவர் பிகாசோவைக் குறிப்பிட மட்டும் செய்யவில்லை, அவரைக் கேள்விக்கு உள்படுத்தி மறு ஆய்வுக்கு உட்படுத்துகிறார்," என்கிறார் ஸ்னெர்ச்.

இந்த ஓவியம் பற்றிய ப்ராக்கின் ஆரம்பக் கருத்து இருந்தபோதிலும் அதன் பிறகு தனது ஓவியத்துக்கு ஒரு கோணம் கொண்ட அணுகுமுறையைக் கடைபிடித்தார். 1920ம் ஆண்டு வாக்கில், பிகாசோவின் ஓவியங்களில் முதலில் அருவருப்பை ஏற்படுத்தியவையே பிற்காலத்தில் அது ஒரு தலைசிறந்த படைப்பாக காட்சிப்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது.

எழுத்தாளரும் கவிஞருமான ஆன்ட்ரே ப்ரெட்டன் இந்த ஓவியம் புரட்சிகரமானது எனப் புகழ்ந்து பிரெஞ்சு ஆடை வடிவமைப்பாளரும் கலைப்பொருள் சேகரிப்பாளருமான ஜாக் டூசெட் அதை வாங்க ஒப்புக்கொள்ள வைத்தார். 1939-இல் நியூ யார்கின் நவீன கலைக்கான அருங்காட்சியம் அதை ஒரு செவ்வியல் படைப்பாகப் பெற்றது. தற்போதும் இந்த ஓவியம் அங்கு தான் இருக்கிறது.

ஒரு நூற்றாண்டு கழித்தும் 'அவிஞ்ஞான் நகரத்து இளம் பெண்கள்' ஓவியம் எந்த அளவுக்கு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது என்றால் அதன் உள்ளிருக்கும் கருப்பொருள்கள் பற்றி கலைஞர்கள் தற்போதும் விவாதித்து வருகின்றனர். ஒரு ஓவியம், ஒரே நேரத்தில் எந்த அளவுக்கு ரசிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும், கலை வரலாற்றில் ஒரு தத்ரூபமான திருப்புமுனையை விவரிக்க முடியும் என்பதற்கு நிச்சயம் இது சான்று.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு