You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் டெல்லி: பொதுமுடக்கத்தைச் சரியாக பயன்படுத்த தவறியதா இந்திய தலைநகரம்?
இந்தியத் தலைநகர் டெல்லியில் 80,000திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் சரியாகப் பின்பற்றவில்லையா? அலட்சியம் காட்டினார்களா என்பது குறித்து விளக்குகிறார் பிபிசியின் அபர்ணா அல்லூரி.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த கடுமையான நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை டெல்லி மாநகர நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
அரசியல் மோதல்கள், தனியார் சுகாதார அமைப்புகளுடன் இணைந்து செயல்பட தயக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்தியாவில் உள்ள மிகச் சிறிய நகரங்கள் கூட கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால் இந்தியத் தலைநகரமான டெல்லியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. பெங்களூவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவியபோது, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டுக்களைப் பெற்றன. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தாலும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
பொதுச் சுகாதாரத்துறையை சிறப்பாக நிர்வகித்ததால் இந்த ஆண்டு தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது ஆம் ஆத்மி கட்சி என்று கூறப்பட்ட நிலையில் மும்பையைப் போல, டெல்லியும் கொரோனாவால் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகவும் சிறப்பாகச் செயல்படும் மருத்துவமனைகள் எனக் கருதப்பட்ட பல அரசு பொது மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க இடமின்றி தவிக்கின்றன.
போதுமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா?
டெல்லியில், ஜூன் மாத துவக்கத்திலிருந்து மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது. இதற்கு முக்கிய காரணாம் அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது தான். மேலும் அரை மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ளும் விதத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
''பரிசோதனை மேற்கொள்வது மட்டும் நோய்க்கு தீர்வல்ல'' என்கிறார் பிபிசியிடம் பேசிய தேசிய கோவிட் 19 டாஸ்க் ஃபோர்ஸின் உறுப்பினர் ஸ்ரீநாத் ரெட்டி.
"உறுதியாக நிறையப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் ஆனால் அது கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களிடமோ அல்லது ஏதேனும் திட்டத்தின் அடிப்படையிலேயோ மேற்கொள்ளப்பட வேண்டும்," என்கிறார் ஸ்ரீநாத். மேலும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மிக ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய வேண்டும், தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், இவை இரண்டும் டெல்லியில் நடைபெறுகிறதா? என்ற கேள்வியையும் ஸ்ரீநாத் முன்வைக்கிறார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில், ''இந்தியாவில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் சராசரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்ப்பில் இருந்த 20 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என ஐ.சி.எம்.ஆர் குறிப்பிடுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்களை மட்டும் பரிசோதித்ததாலேயே வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த மாத துவக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு கூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என ட்விட்டரில் புகார் தெரிவித்திருந்தனர்.
''எனக்கு தெரிந்த சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோதும் அவர்களுடன் தொடர்பிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் யாரும் பரிசோதனைக்கு அழைக்கப்படவில்லை என்பதை அறிவேன்,'' என சுகாதாரத்துறை கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த மாலினி ஐசோலா கூறுகிறார்.
''அரசாங்கத்திடம் பல முறை முறையிட்டு, வற்புறுத்தியதற்குப் பிறகு தற்போது தாமதமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என மாலினி கூறுகிறார்.
இந்நிலையில் சாத்தியமா என்று கேள்வி எழும் வகையில் பல திட்டங்களை டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி குடியிருப்புவாசிகள் 29 மில்லியன் பேருக்கும் வீடு வீடாக சென்று பரிசோதனை, நாளொன்றுக்கு நகரம் முழுவதும் 26,000 பரிசோதனை, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை பரிசோதிக்க ட்ரோன்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பு ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளை ஊரடங்கின்போதே மேற்கொண்டிருக்க வேண்டும், தாமதமாக மேற்கொள்வதால் பயனில்லை என்றும் சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
''கொரோனா வைரஸால் டெல்லியில் சுகாதார பிரச்சனையை விட சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரித்தது என்றே சொல்லலாம்,'' என்கிறார் டெல்லியில் கங்கா ராம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் அம்பரீஷ் சாத்விக்.
''பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டுப்பாடுகள், கொரோனா தொற்று இருப்பது உறுதியானால் அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற தகவல்கள் மக்களைச் சென்று சேரவில்லை. அரசாங்கம் அமைத்திருக்கும் தனிமைப்படுத்தும் மையங்களில் சரியான பராமரிப்பு இருக்காது என்ற அச்சத்திலேயே பலர் பரிசோதனை மேற்கொள்ள முன்வருவதில்லை என்றும் மருத்துவர் அம்பரீஷ் சாத்விக் கூறுகிறார்.
இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளின் பங்கு அதிகரித்திருப்பதால், தற்போது வழக்கத்திற்கு மாறாக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் இருந்தால் கூட பொதுச் சுகாதார மையம் சென்று காத்திருப்பதற்கு பதிலாக, பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.
சமீபமாக டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்ற செய்தி மக்கள் மத்தியில் பரவியபிறகு அதிக குழப்பமும் பதற்றமும் நிலவுகிறது என்கிறார் பேராசிரியர் ஸ்ரீநாத்.
"பரிசோதனைகளை அதிகப்படுத்த, மருத்துவமனை வசிதிகளுக்காக, சிகிச்சைக்கான செலவை குறைக்க என டெல்லி அரசு தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்திருக்க வேண்டும். ஆனால் அரசு தனியார் மருத்துவமனைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது,"
மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ ஊழியர்கள் தங்களை நன்றாக கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட வேண்டும் என்றும் பேராசிரியர் ஸ்ரீநாத் குறிப்பிடுகிறார்.
உலகம் முழுவதும் தொற்று அதிகரித்து வரும் இந்த சூழலில் இதற்கு மேலும் தாமதிக்காமல் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார் பேராசிரியர் ஸ்ரீநாத்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: