யுக்ரேன் Vs ரஷ்யா: ஐ.நா.வில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இன்று 'அக்னிப் பரீட்சை'

பிரசுரிக்கப்பட்டது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இந்தியா மீண்டும் ஒருமுறை ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தைப் புறக்கணித்திருக்கிறது. எனினும் இந்திய நேரப்படி இன்று இரவு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் நடக்க இருக்கும் விவாதத்தில் இந்தியா என்ன செய்யப் போகிறது, உலக நாடுகள் என்ன பேசப் போகின்றன என்பது எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக பொதுச் சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி பாதுகாப்பு அவையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா எதிர்த்து வாக்களித்தது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

எனினும் இந்தத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படி வீட்டோ செய்ய முடியாது என்பதால், 11 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் மொத்தம் 15 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளுக்கு வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் நிரந்தர உறுப்பு நாடுகள்.

இவற்றில் ஒரு நாடு நினைத்தாலும், தீர்மானங்களை ரத்து செய்ய முடியும். ஆகையால் ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிறைவேற இந்த 5 நாடுகளின் ஆதரவு அவசியம். ஆனால் இந்தத் தீர்மானம் நடைமுறை சார்ந்தது என்பதால் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து இன்று இரவு ஐநா பொதுச் சபைக் கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் 193 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டேரஸ் அறிவித்துள்ளார்.

வாக்கெடுப்பின்போது பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் தூதர் டி.எஸ். திருமூர்த்தி, யுக்ரேனில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்முறை தீவிரமடைந்திருப்பது வருத்தமளிப்பதாகவும் பாதுகாப்பு சபை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

இதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் பேச்சுவார்த்தையைத் தவிர இந்தப் பிரச்னைக்கு வேறு தீர்வு எதுவும் இல்லை எனவும், யுக்ரேன் மற்றும் ரஷ்யத் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோதி இதுபற்றி வலியுறுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த முறை பாதுகாப்பு அவையில் நடந்தது என்ன?

கடந்த வெள்ளிக்கிழமையன்றும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு அவையில் கொண்டுவரப்பட்டது. யுக்ரேனில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற வேண்டும், ரஷ்யாவைக் கண்டிக்க வேண்டும் என்று கோரி அமெரிக்காவும் அல்பேனியாவும் ஐக்கிய நாடுகள் அவையில் பாதுகாப்பு சபையில் கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற்கடித்து விட்டது.

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 11 நாடுகள் ஆதரித்தன. ரஷ்யா நிராகரித்தது. மீதமுள்ள இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. வீட்டோ அதிகாரம் கொண்ட ரஷ்யா தீர்மானத்தை எதிர்த்ததால், தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. அதனால் வீட்டோ அதிகாரம் செல்லுபடியாகாத பொதுச் சபைக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்வதாக அமெரிக்கா அப்போது உறுதியளித்தது.

அப்போது இந்தியா ஏன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறித்து ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் தூதர் டி.எஸ். திருமூர்தி இந்தியா சார்பிலான விளக்க அறிக்கையை வெளியிட்டார்.

யுக்ரேனில் நடந்து வரும் நிகழ்வுகள் மிகவும் கவலையளிப்பதாகவும், சண்டையை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வுக்கான வழி என்பதை அனைத்து உறுப்பு நாடுகளும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.

அரசுமுறைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதற்கான வழிகள் கைவிடப்பட்டதற்கு வருத்தமளிப்பதாகவும், மீண்டும் அந்தப் பாதைக்குத் திரும்ப வேண்டும் எனவும் அந்த அறிக்கை கூறியது.

பாதுகாப்பு அவையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து யுக்ரேன் தனது அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தியது. சில நாடுகள் போரைச் சகித்துக் கொண்டிருக்கின்றன என்று யுக்ரேன் பிரதிநிதி செர்ஜி கிஸ்லிட்ஸியா கூறினார்.

அமெரிக்காவும் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்த்தது. வாக்களிப்பில் பங்கேற்காதது அல்லது நடுநிலை வகிப்பது என்பது ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்று அமெரிக்காவின் பிரதிநிதி லிண்டா பேசினார். இது ரஷ்யாவின் தன்னிச்சையான போர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில் இந்தத் தீர்மானம் ரஷ்யாவுக்கு எதிரானது என்று கூறிய ரஷ்யப் பிரதிநிதி, இது யுக்ரேனுக்கும் எதிரானது என்று குறிப்பிட்டார்.

இந்தத் தீர்மானத்தில் சீனாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் கூட வாக்களிக்கவில்லை. யுக்ரேன் எப்போதும் மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் இடையேயான பாலமாக இருக்க வேண்டுமே தவிர வல்லரசுகளின் சண்டைக்கான களமாக இருக்கக் கூடாது என்று சீனாவின் பிரதிநிதி ஷாங் ஜுன் பேசினார்.

ஒட்டுமொத்தமாக இந்தக் கூட்டத்தில் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்று கூட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் அவையில் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டேரஸ் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

ரஷ்ய தாக்குதல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு

2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யா க்ரைமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்ட காலகட்டத்தில் ​​அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனன், "க்ரைமியா மீது ரஷ்யாவுக்கு முற்றிலும் நியாயமான அக்கறை உள்ளது," என்று கூறியிருந்தார்.

அதாவது ரஷ்யா க்ரைமியாவை இணைத்துக்கொண்டதை இந்தியா எதிர்க்கவில்லை.

அப்போது ​​இந்தியா அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், "க்ரைமியாவில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். க்ரைமியாவில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு முக்கிய ஆதரவு அளித்த சீனாவுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்தியாவின் நிதானம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்,"என்று கூறினார். அப்போது இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் இருக்கவில்லை.

2020ஆம் ஆண்டு ஏப்ரலில் கிழக்கு லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டின் 'நிலைமையை' சீனா மாற்ற முற்பட்டது.

அந்த நடவடிக்கையின்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அங்குள்ள எல்லையில் இப்போதும் பதற்றம் நீடிக்கிறது. கூடவே 2020ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலை, மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை.

எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பைப் பார்க்கும்போது ​​இந்தியாவுக்கு ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆதரவும் தேவை.

யுக்ரேன் தொடர்பாக ரஷ்யாவும் மேற்கத்திய நாடுகளும் மோதல் போக்கில் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் இந்தியா யாருடைய பக்கமும் எடுக்க முடியாது. பார்வையாளராகவும் இருக்க முடியாது. இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா பேசி வருகிறது. ஆனால் ரஷ்யா நடுநிலையை கடைப்பிடித்தது.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

அடல் பிஹாரி வாஜ்பேயி ஆட்சியில் வெளியுறவுத்துறை செயலராகவும், ரஷ்யாவுக்கான இந்திய தூதராகவும் இருந்த கன்வல் சிபல், ரஷ்யா-யுக்ரேன் நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து பிப்ரவரி 21 அன்று 'India Narrative' இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், "அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் நாம் எந்த சார்பு பக்கமும் எடுக்கக்கூடாது. மிகவும் புத்திசாலித்தனமான வெளியுறவுக் கொள்கை இப்போது தேவை. இந்தியா யாருடன் செல்கிறது என்பதை இரு தரப்பும் கவனித்து வருகிறது. இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் இந்தியா சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்.

அமெரிக்காவின் நெருக்குதலின் கீழ் வரக்கூடாது என்று ரஷ்யா கருதுகிறது. எந்தவொரு ராணுவ மோதலும் இந்தியாவுக்கு நல்லதல்ல, ஏனெனில் அது கடுமையான சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தும்."என்று கன்வல் சிப்பல் எழுதியுள்ளார்.

"ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் இந்தியாவின் ராணுவ ஒப்பந்தம் பாதிக்கப்படும். மறுபுறம் ரஷ்யாவின் ஹைட்ரோகார்பன் துறையில் முதலீடு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்கியதற்காக, 'கவுண்டரிங் அமெரிக்காஸ் அட்வெர்ஸரீஸ் த்ரூ சாங்ஷன் ஆக்ட்' (CAATSA) வின் கீழ் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா இன்னும் பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை.

ஆனால் இப்போது அமெரிக்கா அதை பரிசீலிக்கக்கூடும். கச்சா எண்ணெய் விலை உயர்வது மட்டுமின்றி இந்திய பொருளாதாரத்தையும் அது பாதிக்கும். கோவிட் தொற்றுநோயின் மந்த நிலையிலிருந்து நமது பொருளாதாரம் இப்போதுதான் மீண்டு வரத்தொடங்கியுள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: