ஏமன்: போர், கொரோனா வைரஸ், இப்போது பெருமழை - உருக்குலைந்த ஏமன், மனதை உலுக்கும் புகைப்படங்கள்

பிரசுரிக்கப்பட்டது

கடந்த ஜூலை மாதத்திற்கு மத்தியில் இருந்து ஏமன் நாட்டில் பெய்து வரும் கனமழையால், இதுவரை 130க்கும் அதிகமானோர் பலி ஆகி உள்ளதாக, கிளர்ச்சிக்குழு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏமன் தலைநகர் சனாவில் பணியாற்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மழையின் காரணமாக பலர் காயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சனா நகரில் இருக்கும் பாரம்பரிய சின்னங்கள் உருகுலைந்துவிட்டதாக யுனெஸ்கோ அமைப்பு கூறுகிறது.

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல பாரம்பரிய கட்டடங்கள், இந்த நகரில் அமைந்துள்ளன.

பல ஆண்டுகளாக நீடித்த போரால், ஏற்கெனவே அந்த கட்டடங்கள் உருக்குலைந்து இருந்தன.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய முகம்மது அலி அல் தல்ஹி, அவர் தங்கி இருந்த பழமையான கட்டடம் இடிந்துவிட்டதாகவும், அதன் காரணமாக அவர் வீதிக்கு வந்துவிட்டதாகவும் கூறி உள்ளார்.

அவர், "எங்களிடம் இருந்த அனைத்தும், இடிபாடுகளில் புதைந்துவிட்டன," என்று கூறுகிறார்.

உள்நாட்டு போரும், ஏமனும்

அரபு நாடுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள நாடு ஏமன். அங்கு 2015 ஆவது ஆண்டு முதல் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கு ஆதரவாக செளதி அரேபியா தலைமையிலான படைகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.

செளதி தலைமையிலான கூட்டணி, ஏமன் அரசை ஆதரிக்கிறது. இரான், ஹுத்தி கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கிறது,

இந்தப் பிரச்சனையின் காரணமாக 2016ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா கூறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், தெற்கு ஏமனை சேர்ந்த பிரிவினைவாதிகள் அமைதி ஒப்பந்தத்தை மீறி சுயாட்சியைப் பிரகடனம் செய்தனர்.

ஏடனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தெற்கு இடைநிலை கவுன்சில், அவசரநிலையை பிரகடனப்படுத்தி, இனி தாங்களே துறைமுகமான ஏடன் நகரம் மற்றும் தெற்கு மாகாணங்களை ஆளப் போவதாகக் கூறியது.

தெற்கு இடைநிலை கவுன்சிலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரிக்கிறது.

இது ஆபத்தான பெருங்கேட்டை விளைவிக்கும் என சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசை ஆதரிக்கும் செளதி அரேபியா கூறி இருந்தது.

கொரோனா தொடுத்த தாக்குதல்

கொரோனா காரணமாக மோசமாகப் பாதிக்கப்படும் 5 நாடுகளில் ஏமனும் ஒன்று.

உள்நாட்டுக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டில், தற்போதைய கொரோனா பரவல், அந்த நாட்டில் நிலவும் மனிதநேய சிக்கலை மேலும் அதிகமாக்கியுள்ளது.

ஒப்பீட்டு அளவு எண்ணிக்கையில், அங்கு கொரோனா பரவல் குறைவு என்றாலும் அங்கு உள்ள மோசமான உள்கட்டமைப்பு, நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.

மோதல்கள் நடக்கும் காலம் நீடிக்கும் போது, அதன் காரணமாகப் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கையும் அதிகமாகிறது. 2016 ஆம் ஆண்டில் ஏமனில் நாங்கள் 30 முதல் 40 லட்சம் வரையிலான மக்களுக்கு உதவி செய்தோம்.ஆனால் தற்பொழுது ஒரு கோடியே 20 லட்சம் மக்களுக்கு உதவி செய்கிறோம் என்று பிபிசியிடம் கூறுகிறார், உலக உணவுத் திட்ட தலைமை பொருளாதார வல்லுநர் ஆரிஃப் ஹுசேன்.

ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாடுகளில் இருக்கும் பகுதிகளில் மக்களுக்கு உதவிகள் சென்று சேருவதைத் தடுத்து வருவதாகவும் உலக உணவுத்திட்டம், கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் தெரிவித்து இருந்தது.

All photos subject to copyright.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :