கத்தி முனையில் காதலன் முன் கூட்டு பாலியல் வல்லுறவு - வேலூரில் கொடூரம், நடந்தது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

வேலூரில் ஒரு பெண் தம் ஆண் நண்பருடன் இருந்தபோது கொடூரமாக தாக்கப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்(24), வேலூரில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவ தினத்தன்று(சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கடையின் வேலைகளை முடித்துவிட்டு அதே கடையில் தன்னுடன் வேலை செய்து வரும் தனது காதலனுடன் இரவு 9.30 மணிக்கு வேலூர் கோட்டைக்கு சென்றுள்ளனர், கோட்டையின் நுழைவு வாயிலுக்கு அருகே உள்ள பூங்கா ஒன்றில் தனிமையில் இருவரும் இருந்துள்ளனர்.

அப்போது அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மர்ம நபர்கள், தனிமையில் இருந்த காதல் ஜோடியை தாக்கி, அவர்களிடமிருந்த நகை மற்றும் செல்போன்களை பறித்துக்கொண்டு, காதலன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதுடன், அந்த பெண்ணை கடுமையாக தாக்கி கூட்டாக மூன்று பேர் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரிடம் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, "நான்கு பேர் கொண்ட கும்பல் காதல் ஜோடியை தாக்கியுள்ளனர், நான்கு பேரில் ஒருவர் காதல் ஜோடியிடமிருந்த நகை மற்றும் செல்போன்களை பறித்துகொண்டு சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து மீதமிருந்த மூன்று நபர்கள் காதலனை கத்தியைக் காட்டி மிரட்டி அந்த பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அன்று இரவு காதல் ஜோடிகள் அவரவர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

காயத்துடன் வந்த பெண்ணை கண்ட பெற்றோர், அவரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களையும், மேலும் காதல் ஜோடிகளிடம் நகை மற்றும் செல்போன்களை பறித்துச்சென்று மற்றொரு நபர் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நலமுடன் இருக்கிறார்," என தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: