You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரெண்டகம் - திரைப்பட விமர்சனம்
நடிகர்கள்: அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராஃப், ஈஷா ரெப்பா, ஆடுகளம் நரேன்; இயக்கம்: ஃபெலினி டி.பி.
மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட 'கேங்க்ஸ்டர்' படம் இது. மலையாளப் படமான 'ஓட்டு' செப்டம்பர் எட்டாம் தேதி வெளியாகிவிட்ட நிலையில், தமிழ் பதிப்பான ரெண்டகம், செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் கதை இதுதான்: வேலையில்லாமல் சுற்றித் திரியும் கிச்சுவுக்கு (குஞ்சாக்கோ போபன்) தனது காதலி கல்யாணியுடன் (ஈஷா ரெப்பா) நார்வே சென்று செட்டிலாகி விட ஆசை. அதற்கான பணமில்லாமல் அலையும் அவரை ஒரு மர்ம கும்பல் அணுகுகிறது. பழைய நினைவில்லாமல் இருக்கும் தாவூத் (அரவிந்த் சாமி) என்பவரிடம் பழகி, அவரது நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்ற வேலையைக் கொடுக்கிறது. தாவூதிற்கு பழைய நினைவு திரும்பியதா, கிச்சுவுக்கும் தாவூதிற்கும் என்ன தொடர்பு என்பது மீதிப் படம்.
கதையில் வலு இல்லை
திரைக்கதை வலுவானதாக இல்லாமல், மோலோட்டமானதாக இருக்கிறது என விமர்சித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.
"ஒரு பதற்றம் நிறைந்த ஆக்ஷன் கதைக்கான எல்லா திருப்பங்கள், ஆவலைத் தூண்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கின்றன. ஆனால், அது போதாது. காரணம், ஒரு பெரிய கதையின் ஒரு பகுதிதான் நமக்குக் காட்டப்படுகிறது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா, கதையே அப்படி ஆகி விட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதனால், கதையில் சொல்லப்படாத இடங்களை பார்வையாளர்களே நிரப்பும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
திரைக்கதையும் வலுவாக இல்லை. மேலோட்டமாகவே பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கிச்சுவின் கதையைக் கேட்டு, உடனடியாக நம்பிவிடும் டேவிட், அவனுடன் ஒரு பயணத்தை மேற்கொள்ள ஒப்புக்கொள்கிறான். டேவிட்டைத் துரத்துபவர்களிடமிருந்து அவன் தப்பிக்க வேண்டும் என கிச்சு விரும்பும் அளவுக்கு எப்படி நெருக்கம் ஏற்பட்டது என்பதும் விளக்கப்படவில்லை. வாயசைப்புகளும் ஒரு டப்பிங் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.
நிறைய விஷயங்களை வெளிப்படுத்தி விடக் கூடாது என்ற இயக்குநரின் சஸ்பென்ஸ் பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுப்பதால், முழுமையான படத்தை பார்த்த உணர்வு ஏற்படவில்லை என விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசை நாளிதழ்.
"மெதுவாக நகரும் படத்தின் முதல் பாதி பெரிய அளவில் சுவாரஸ்யமோ, விறுவிறுப்போ இன்றி கடக்கிறது. அரவிந்த் சாமியுடன் குஞ்சாகோபோபன் பழகும் காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது பெரும் அயற்சி. அதனுடன் சேர்ந்து வரும் காதல் காட்சிகள், பாடல்கள் என கதைக்கு உதவாத காட்சிகள் முதல் பாதியில் நிரம்பிக் கிடக்கின்றன. இடைவேளைக்குப் பின் சூடுபிடிக்கும் படம் முழுக்க முழுக்க பயணத்திலேயே கடக்கிறது. அதில் சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், மீதிக் காட்சிகள் உரையாடலாகவே கடக்கிறது.
ஈர்ப்பு வரவில்லை
இறுதி காட்சியை நெருங்கும்போது, படம் மொத்தமாக பல்வேறு திருப்பங்களுடன் உருமாறுவது படத்தின் தரத்தை உயர்த்துகிறது. ஆக்ஷன் காட்சிகளையும், சில ட்விஸ்ட் காட்சிகளையும் தவிர்த்து விட்டால் 'ரெண்டகம்' படத்தின் திரைக்கதை எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் கடப்பது படத்தின் பெரிய பலவீனம்.
மேற்கண்ட இரண்டையும் தவிர்த்து விட்டு பார்வையாளர்களை தக்க வைக்க படத்தில் காட்சிகள் இல்லை என்பதும், நிறைய விஷயங்களை வெளிப்படுத்திவிடக் கூடாது என்ற இயக்குநரின் அந்த சஸ்பென்ஸ் பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுப்பதால், முழுமையான படத்தை பார்த்த உணர்வு மிஸ்ஸிங்! அதேபோல கொடுக்கப்படும் பில்டப்புகளுக்கு ஏற்ற நியாயம் காட்சிகளில் இல்லாதது பெரிய அளவில் பார்வையாளர்களுடன் ஒட்டவில்லை." என்கிறது இந்து தமிழ் திசை.
கேங்ஸ்டர் படமா டிராவல் படமா?
ஒரு மாறுபட்ட 'கேங்ஸ்டர்' படம் பின்னர் ஒரு 'டிராவல்' படமாக மாறுவது 'இடிக்கிறது' என விமர்சித்துள்ளது தினமலர் நாளிதழ். ஆனால், அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபனின் நடிப்பு சிறப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளது.
"ஒரு மாறுபட்ட கேங்ஸ்டர் படம் பின்னர் ஒரு டிராவல் படமாக மாறுவது மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. மும்பை டூ மங்களூர் பயணத்தைக் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். கிளைமாக்சுக்கு முன்பாக நடக்கும் துப்பாக்கி சூடுகள் நம்பும்படியாக இல்லை. ஒரு நூறு பேரையாவது சுட்டுத் தள்ளியிருப்பார்கள்.
நினைவுகளை இழந்த கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்தவராக அரவிந்த்சாமி. அமைதியாக, சாந்தமாக, அப்பாவியாக படத்தில் அறிமுகமாகிறார். அதிர்ந்து கூட பேசாமல் இருக்கிறார். அவர் மீது நமக்கும் அனுதாபம் வரும் அளவிற்கு நடிக்கிறார். கடைசியில் அவர் யார் என்று தெரிய வரும் போதும், அதன்பின் அவருடைய நடவடிக்கைகளும் அதிரடியாக அமைந்து ரசிக்க வைக்கின்றன.
மலையாளத்தில் பல படங்களில் முத்திரை பதித்த குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்திருக்கும் தமிழ்ப் படம். மலையாள நடிகர்கள் என்றாலே இயல்பான நடிப்பால் கவர்வார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு கதாபாத்திரம். அப்படி பணம் வாங்கிக் கொண்டு அரவிந்த்சாமி பின்னால் சென்று அவரிடம் இருந்து உண்மைகளைக் கறக்கும் ஒரு கதாபாத்திரம். கடைசியில் குஞ்சாக்கோவுக்கும் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார்கள். அது நமக்கும் பேரதிர்ச்சியாகவே இருக்கிறது" என்கிறது தினமலர் நாளிதழ்.
மூன்று பாகங்களைக் கொண்ட இந்தப் படத்தில், கதையின் நடுப் பகுதியே தற்போது வெளி வந்துள்ளது. இந்த கதைக்கு முற்பட்ட காலத்தில் நடக்கும் கதையும் (prequel), தற்போதைய காலகட்டத்திற்கான தொடர்ச்சியும் (sequel) அடுத்தடுத்த பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்