You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆதார் - திரைப்பட விமர்சனம்
நடிகர்கள்: கருணாஸ், ரித்விகா, இனியா, உமா ரியாஸ், அருண் பாண்டியன்; இயக்கம்: ராம்நாத் பழனிக்குமார்.
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும்கூட, சில திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடும். அம்மாதிரி ஒரு திரைப்படமாக இந்த வாரம் வெளியாகியிருக்கிறது ஆதார்.
இந்தப் படத்தின் கதை இதுதான்: சென்னையில் ஒரு கட்டடத்தில் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் பச்சமுத்துவின் (கருணாஸ்) மனைவி துளசிக்கு (ரித்விகா) மருத்துவமனையில் குழந்தை பிறக்கிறது. அதற்குப் பிறகு துளசியும் அவளுக்குத் துணையாக இருந்த சரோஜாவும் (இனியா) காணாமல் போகிறார்கள். பச்சமுத்து காவல்துறையில் புகார் அளிக்கிறார். ஆனால், துளசி தனது முன்னாள் காதலருடன் சென்று விட்டதாக காவல்துறை வழக்கை முடிக்கிறது. அதை நம்ப மறுக்கும் பச்சமுத்து, தனது மனைவியைத் தேட ஆரம்பிக்கிறார். உண்மையில் துளசிக்கு என்ன நடந்தது என்பதுதான் மீதிக் கதை.
இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால், அதிகாரத்தைத் தன் பக்கம் திருப்பி, தனக்கு விரும்பியதைச் சாதித்துக் கொள்கிறது என்பதை அதிர்ச்சிகரமாகச் சொல்லியிருக்கிறது படம் என்கிறது தினமலர் நாளிதழின் விமர்சனம்.
அதிர்ச்சிக்கதை
"சாதாரண மக்கள் காவல் நிலையத்தில் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கான மதிப்பும், மரியாதையும் என்ன என்பதை உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார் இயக்குநர். அதே சமயம், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் தனக்கு என்ன தேவையோ அதைப் பெற்றுக் கொள்கிறது என்பதை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துடன் அவர் சொல்லியிருக்கிறார்.
ஒரு அழுக்கு லுங்கி, சட்டை, முகத்தில் தாடி, கையில் கைக் குழந்தை, முகம் நிறைய சோகம் என ஆரம்பக் காட்சியிலேயே நெகிழ வைக்கிறார் கருணாஸ். ஒரு ஏழை அன்புக் கணவனின், ஒரு அப்பாவின் பாசப் போராட்டத்தை காட்சிக்குக் காட்சி இயல்பாய் நடித்து உணர்த்துகிறார். காவல் துறையின் கட்டுப்பாட்டிற்கும் மிரட்டலுக்கும் முன்னால் ஒரு சாமானியன் எதுவுமே செய்ய முடியாது என்பது கருணாஸ் கதாபாத்திரத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும். படம் பார்க்கும் போது 'தூத்துக்குடி காவல் நிலைய மரணங்கள்' ஞாபகம் வந்து போகின்றன" என்கிறது தினமலர்.
மசாலா இல்லா படம்
ஒரு க்ரைம் திரில்லர் கதையை, வணிக மசாலா இல்லாமல் சமரசமின்றி படமாக்கி இருப்பதற்காக இயக்குநரை பாராட்டலாம் என்கிறது இந்து தமிழ்திசையின் விமர்சனம். மேலும் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது அந்த நாளிதழ்.
"மனைவியை காணாமல் கதறும்போதும், குழந்தையை கையில் வைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் தவிக்கும்போதும், அதிகாரத்தின் மிரட்டலில் ஏதும்செய்ய இயலாதவராகப் பரிதவித்து நிற்கும்போதும், கருணாஸ் நடிப்பில் ஒரு படி உயர்ந்திருக்கிறார். கர்ப்பிணியான ரித்விகாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் அவரைச் சுற்றிதான் கதை என்பதால் கிடைத்த கேப்-பில் ஸ்கோர் செய்கிறார். முதலில் கருணாஸுடன் மோதலில் ஈடுபட்டு, பிறகு பரிதாபத்தால் உதவும் இனியா பாத்திரம், முதல் பாதி சஸ்பென்ஸுக்கு கை கொடுக்கிறது. திருட்டுத் தொழில் செய்தாலும் அவருக்குள் இருக்கும் ஈரத்தை காட்டும் நேர்மையில் அவர் கேரக்டர் நிமிர்ந்து நிற்கிறது.
தங்கள் அதிகாரத்தை எப்படியும் வளைக்கும் உதவி காவல் ஆணையர் உமா ரியாஸ், கொடூரமான ஆய்வாளர், 'பாகுபலி' பிரபாகர் ஆகியோர் அந்தந்த பாத்திரத்தில் ஒன்றி இருக்கிறார்கள். சோகமான நடை, மெதுவான பேச்சு என வயதான காவலரை கண்முன் நிறுத்துகிறார், அருண் பாண்டியன். தவறுக்கு உடந்தையாக இருந்துவிட்டதற்காக அவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சிதான்.
சஸ்பென்ஸ் பலம், புரிய லேட் ஆகும்
இரண்டு மணி நேரப் படம் என்றாலும் மெதுவாகத்தான் நகர்த்திச் செல்கிறது திரைக்கதை. படத்துக்குப் பலமான சஸ்பென்சை இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்லி இருக்கலாம் என்பது போன்ற சிற்சில குறைகள் இருந்தாலும் அது 'ஆதாரு'க்கான திருஷ்டிப் பொட்டாகவே இருக்கிறது" என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ்.
ஆனால், திரைக்கதையில் கூடுதல் சுவாரஸ்யம் இருந்திருந்தால், இன்னும் கவனிக்கப்பட்டிருக்கும் என்கிறது ஏபிபி நாடு இணையதளத்தின் விமர்சனம்.
"ஒரு காட்சிக்கும் அடுத்தக்காட்சிக்கும் இடையே என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை இறுதிவரை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ராம்நாத். முதல்பாதியில் கருணாஸ் மனைவியை தேடும் படலமும், இராண்டாம் பாதியில் அதிகாரவர்க்கமானது தன்னை தப்பிவித்துக்கொள்வதற்காக ரித்விகாவை வைத்து ஆடும் ஆட்டமும் திரைக்கதையாக நீள்கிறது.
இதற்கு முன்னதாக இதே போன்று வெளியான படங்களில் வசனங்கள் பலமாக அமைந்திருந்தன. ஆதாரில் அது மிஸ்ஸிங். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமும், வேகமும் இருந்திருந்தால் 'ஆதார்' இன்னும் அதிகமாக கவனம் பெற்றிருக்கும்" என்கிறது அந்த இணையதளம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்