கேஜிஎஃப் 2 விமர்சனம்: காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நடிகர் யாஷ் நடித்து பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் 2 திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? ஊடகங்களின் மதிப்பீட்டில் கேஜிஎஃப் 2 எப்படி இருக்கிறது?

'கேஜிஎஃப் உலகத்துக்குள் பிரவேசிக்கலாம்'

ஒளிப்பதிவு இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம் என உலகத் தரமான படமாக வந்திருக்கிறது கேஜிஎஃப் 2. இதன் காரணமாக 2 மணி நேரம் 48 நிமிடங்கள் கேஜிஎஃப் என்ற அந்த உலகத்துக்கு சென்றுவந்த உணர்வை அளித்திருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல் என்கிறது தினமணி.

அதே சமயம், ஹீரோ வில்லன் எல்லோருக்கும் பில்டப் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். யானை, புலி, மான், மீன் என பள்ளிக்கூட சிறுவர்களுக்கு சொல்லும் உதாரணங்களைக் கொண்டு தத்துவம் பேசிக்கொண்டே இருப்பதும் சலிப்பை ஏற்படுத்தியது. அது ஒரு சில இடங்களில் எரிச்சலூட்டும் வகையிலும் இருக்கிறது. தமிழில் வசனங்கள் யதார்த்தமாக இல்லை என்றும் தினமணியின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

கொடுத்த வாக்கை நிறைவேற்றும் படங்கள் குறைவுதான். அந்த வகையில் வெளியீட்டுக்கு முன்பாக உருவாக்கிய எதிர்பார்பை பூர்த்தி செய்திருக்கிறது கேஜிஎஃப் 2 என்கிறது `தி நியூஸ் மினிட்` செய்தித்தளம்.

யஷ்ஷின் ரசிகர்கள் இத்தனை மாதங்கள் காத்திருந்ததற்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு இந்த படம் ஒரு உற்சாகமான சவாரியாக அமைந்திருக்கிறது. படத்தில் இருக்கும் சிறுசிறு குறைகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால் படத்தில் வெளிப்பட்டுள்ள அபாரமான கற்பனைக்கும், தொழில்நுட்ப நேர்த்திக்கும் பார்வையாளர்கள் இதனை என்றும் நினைவுகூரலாம்.

'காட்சிகளை ஊகிக்கலாம்'

இடைவேளைக்கு பின் மேலும் விறுவிறுப்பு கூடுகிறது என்கிறது ஃபிலிம் கம்பேனியன்.

தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாக வந்திருக்கும் இந்தப் படத்தில், ஸ்டண்ட், ஒலி அமைப்பு ஒளிப்பதிவு என எல்லாமும் பாராட்டுக்குரியவை. அதே சமயம், அடுத்தடுத்து வரபோகும் காட்சிகளை நம்மால் யூகிக்க முடிகிறது என்கிறது விமர்சனம்.

'விசுவல் ட்ரீட் என்றாலும், பில்டப்புகள் சலிக்க வைக்கின்றன'

ஒட்டுமொத்த கலைஞர்களின் உழைப்பில் 'விஷுவல் ட்ரீட்' ஆக வந்திருக்கிறது படம். அதேபோல விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சின்ன சின்ன ட்விஸ்ட்களுடன் கதை நகரும் போக்கும் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது என்கிறது இந்து தமிழ் திசை.

ஆனால், படத்தில் வரும் பில்டப் காட்சிகள் தொடக்கத்தில் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியைக் கடக்கும்போது திகட்டத் தொடங்கி விடுகிறது.

நம்ப முடியாததை நம்ப வைப்பதுதான் கேஜிஎஃப் 1-ன் ஹைலைட். ஆனால், இங்கோ நாடாளுமன்ற, பிரதமர் அலுவலக காட்சிகள் என பார்வையாளர்களை டயர்டாக்கும் இடங்களும் ஆங்காங்கே உண்டு என்று இந்து தமிழ் திசை இணையம் தெரிவித்துள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாள் இந்தப்படமும் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய நல்ல விமர்சனங்களின் விகிதம் அதிகமாக இருக்கிறது என்னும் நிலையில், பீஸ்ட்டின் வசூலுக்கு கேஜிஎஃப் போட்டியாக இருக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :