You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசியா நிலச்சரிவு: குறைந்தது 16 பேர் பலி - பலரை காணவில்லை
- எழுதியவர், ஃபிரான்சஸ் மாவோ
- பதவி, பிபிசி நியூஸ்
- பிரசுரிக்கப்பட்டது
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது முகாம்களில் தங்கியிருந்த குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள படாங் காளி (Batang Kali) டவுன்ஷிப் பகுதியில் உள்ள ஒரு பண்ணை தங்குமிடத்தில் வெள்ளிக்கிழமை (19:00 GMT வியாழன்) பிற்பகல் உள்ளூர் நேரம் 3 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது அதனுள்ளே சில குடும்பங்கள் தங்கள் கூடாரங்களில் தூங்கிக் கொண்டிருந்ததாக அறிய முடிகிறது.
நூற்றுக்கணக்கான மீட்புப் பணி ஊழியர்கள் சேறும் சகதியுமாகிப் போன சம்பவ பகுதியை அடைந்து நிலச்சரிவில் சிக்கியிருந்த உயிர் பிழைத்தவர்களை பார்த்தனர். இந்த முகாமில் 90க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்த முகாம் பண்ணையின் மேலாளர்கள், குறைந்தபட்சம் 30 குழந்தைகள் மற்றும் 51 பெரியவர்கள் வரை ஒரே இரவில் தங்குவதற்கு பதிவு செய்திருந்ததாக கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் தங்கியிருந்த முகாம் இருந்த பகுதியை விட 30 மீ (100 அடி) உயரத்திற்கு மேல் இருந்த நிலப்பகுதி தாழ்வாக சரிந்து சுமார் ஒரு ஏக்கர் நிலப்பகுதிவரை உருண்டது.
மலேசியாவின் மீட்பு அமைப்புகள் ஆன்லைனில் நிலச்சரிவு தொடர்பான சில படங்களை பகிர்ந்துள்ளன. அதில், ஹெல்மெட் அணிந்த மீட்புப்பணி ஊழியர்கள் சீரற்ற நிலச்சரிவு பகுதியில் வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள் மற்றும் பிற குப்பைகளை கடந்து செல்வதை பார்க்க முடிந்தது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி அந்த இடத்தில் இருந்து 60 க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். ஆனால் 17 பேர் இன்னும் காணவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். குறைந்தது ஒரு குழந்தை, 5 வயது சிறுவன் பலியாகி விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அங்கு தங்கியிருந்த ஒருவரான டேஹ் லின் ட்ஸுவான் என்ற பெண், நிலச்சரிவில் இருந்து தாமும் தமது தாயும் உயிர் பிழைத்ததாக கூறினார். ஆனால் சம்பவத்தில் இவரது சகோதரர் பலியானதாகவும் மற்றொரு சகோதரர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
"கூடாரங்கள் நிலையற்றதாக மாறி, எங்களைச் சுற்றி மண் விழுவதை நாங்கள் உணர்ந்தோம்," என்று மலேசிய நாளிதழான பெரிட்டா ஹரியனிடம் டே லின் ட்ஸுவான் கூறியுள்ளார்.
மேலும், "நானும் என் அம்மாவும் ஊர்ந்தபடி வெளியே வந்ததால் எங்களைக் காப்பாற்றிக் கொண்டோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பெண் 40க்கும் மேற்பட்டோர் அடங்கிய பெரிய குழுவுடன் இந்த பகுதியில் முகாமிட்டிருந்ததாக கூறியுள்ளார்.
உயிர் பிழைத்த மற்றொருவரான லியோங் ஜிம் மெங், நிலம் குலுங்கத் தொடங்கும் முன்பாக பலத்த சத்தம் கேட்டதாகக் கூறினார்.
அதை வைத்து தாமும் தமது குடும்பத்தினரும் விழிப்படைந்ததாகவும் வெளியே வருவதற்கு முன்பே நிலச்சரிவால் ஏற்பட்ட குப்பை மற்றும் சகதியில் கூடாரங்களில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
"என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகப் பார்க்க முடியாத அளவுக்கு இருட்டாக இருந்தது," என்றும் அவர் கூறினார்.
சம்பவ பகுதிக்கு விரையும் பிரதமர்
மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம், சில துறைகளின் அமைச்சர்களுடன் சம்பவ பகுதிக்கு வெள்ளிக்கிழமை மாலையில் வரவிருப்பதாக தெரிய வந்துள்ளது.
நடந்த சம்பவம் தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலையும், உயிர் பிழைத்தவர்களுக்காக பிரார்த்தனைகளையும் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
கோலாலம்பூருக்கு வடக்கே சுமார் 50 கிமீ (30 மைல்) தொலைவில் உள்ள படாங் காளியில், விடுமுறைக் காலமான ஜென்டிங் ஹைலேண்ட் பகுதிக்கு அருகே, சாலையின் ஓரத்தில் உள்ள காடுகள் நிறைந்த மலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு தூண்டப்பட எது காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அங்கு லேசான மழை பெய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதற்கு முன் அங்கு பலத்த மழையோ நிலநடுக்கமோ ஏற்படவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த ஏழு நாட்களுக்கு ஆற்றங்கரைகள் மற்றும் பிற அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள அனைத்து முகாம்களையும் அகற்றுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்