You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆல்வரேஸ்: மெஸ்ஸியை நாயகனாக பற்றிக்கொண்ட சிறுவனின் கனவு மெய்ப்பட்ட தருணம்
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
அந்தக் காணொளியில் வரும் சிறுவனிடம் கேட்கிறார்கள்.
“கால்பந்தில் உனது கனவு என்ன?”
“உலகக் கோப்பையில் ஆட வேண்டும்”
“உனது லட்சிய நாயகன் யார்?”
“மெஸ்ஸி”
பத்தாண்டுகளுக்கு முன்பு படம்பிடிக்கப்பட்ட இந்தக் காணொளியில் வரும் சிறுவன் ஜூலியன் ஆல்வரேஸ். இப்போது கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக ஆடிக் கொண்டிருப்பவர்.
“சிறுவனாக இருந்தபோது எனக்கு மெஸ்ஸிதான் லட்சிய நாயகர்.அவருடன் தேசிய அணியில் ஆட வேண்டும் என்பது என கனவு” என்று பேட்டி ஒன்றில் ஆல்வரேஸ் கூறியிருக்கிறார்.
இளம் வயதில் ஆல்வரேஸுக்கு இரண்டு கனவுகள்தான் இருந்திருக்கின்றன. ஒன்று உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஆட வேண்டும். மற்றொன்று தனது லட்சிய நாயகன் மெஸ்ஸியைப் போல ஆக வேண்டும். இந்த இரண்டில் முதலாவது வெற்றிகரமாகவே நிறைவேறிவிட்டது.
உலகக் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார். மெஸ்ஸியைப் போல ஆக வேண்டும் என்ற மற்றொரு கனவும் நிறைவேறிக் கொண்டிருப்பதையே அவரது ஆட்டம் காட்டுகிறது.
தனது கனவு மாத்திரமல்ல, தனது லட்சிய நாயகனான மெஸ்ஸியின் கனவை நனவாக்குவதற்கும் இப்போது ஆல்வரேஸ் உதவிக் கொண்டிருக்கிறார். குரேஷியா அணியுடன் அவர் அடித்த இரண்டு கோல்களும் மெஸ்ஸியை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதை நேரலையிலேயே பார்த்திருக்க முடியும்.
பெனால்ட்டி முறையில் முதல் கோலை மெஸ்ஸி அடித்து முன்னிலை கொடுத்தாலும், தன்னந்தனியாக நெடுந்தொலைவுக்குப் பந்தைக் கடத்திவந்து இரண்டாவது கோலை ஆல்வரேஸ் அடித்ததுதான் அர்ஜென்டினாவுக்கு கூடுதலான நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் சிறுவனாக இருந்த ஆல்வரேஸ் இன்று அவரே முத்தமிட்டுப் பாராட்டும் வகையில் உயர்ந்திருக்கிறார். கனவு மெய்ப்படுவது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அர்ஜென்டினா ரசிகர்கள் சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கிரிக்கெட், தடகளம், கால்பந்து, நீச்சல் என பல விளையாட்டுகளிலும் தனது ஆதர்ச நாயகர்களைப் போல ஆக முயன்றவர்கள் பிற்காலத்தில் அவர்களுக்கு நிகராகவே வளர்ந்த உதாரணங்கள் ஏராளமாக இருக்கின்றன. அந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்திருக்கிறார் ஆல்வரேஸ்.
ஆல்வரேஸுக்கும் மெஸ்ஸிக்கும் இடையிலான் ஆடுகளப் புரிதலை, குரோஷியா அணிக்கு எதிரான அர்ஜென்டினாவின் மூன்றாவது கோல் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு த்ரோ மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் வந்த பந்தை, உலகின் முன்னணி தடுப்பரண் வீரர்களைத் தாண்டி மிகவும் லாவகமாக பெனால்ட்டி பாக்ஸுக்குள் கொண்டு வந்தார் மெஸ்ஸி. அப்போதை அது “அற்புதமானது” என்று தொலைக்காட்சி வர்ணணையாளர்கள் மெச்சிக் கொண்டிருந்தார்கள்.
சில நொடிகளில் கோல் லைன் எனப்படும் கடைசி எல்லைக் கோடு வரை பந்தைக் கொண்டு சென்ற மெஸ்ஸி, தடுப்பரண் வீரர்கள் யாரும் எதிர்பாராத வகையில் ஆல்வரேஸை நோக்கி பந்தைத் தட்டி விட்டார். இமைக்கும் நேரத்தில் அதைக் கோலுக்குள் தள்ளினார் ஆல்வரேஸ்.
“நம்ப முடியாத கோல்” என்று அப்போது வர்ணணையாளர்கள் மீண்டும் ஒருமுறை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். “அபாயகரமான” ஆட்டத்தை மெஸ்ஸி வெளிப்படுத்தியதாக எதிரணியான குரோஷியாவின் மேலாளர் லாட்கோ டேலிக் வியந்து கூறினார். இப்படி மெஸ்ஸியின் உச்சநிலைப் போட்டி ஒன்றில் அவருக்கு பெருந்துணையாக இருந்திருக்கிறார் ஆல்வரேஸ்.
ஜூலியன் ஆல்வரேஸுக்கு இப்போது 22 வயதாகிறது. பண்பாட்டு ரீதியாக கால்பந்துடன் பிணைந்திருக்கும் பகுதியில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவர், மிக இளம் வயதிலிலேயே கால்பந்தில் ஜொலிக்கத் தொடங்கிவிட்டார். 16-வயதாக இருக்கும்போது அர்ஜென்டினாவின் கிளப் ஒன்றுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது அற்புதமான ஆட்டத்தால், கோப்பா அமெரிக்கா தொடருக்காக கடந்த ஆண்டில்தான் அர்ஜென்டினா தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். பந்தை மிக வேகமாகக் கடத்திச் செல்வதற்குப் பெயர்பெற்ற ஆல்வரேஸ், குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டாவது கோலை அடித்தபோது இதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார்.
கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினாவின் முதல் இரு போட்டிகளில் ஆட்டத்தைத் தொடங்கும் 11 பேரில் ஆல்வரேஸ் இடம்பெறவில்லை. ஆனால் போலந்துக்கு எதிராக களமிறங்கி போட்டியிலேயே கோல் அடித்தார். அதன் பிறகு மூன்று கோல்களை அடித்திருக்கிறார். இறுதிப் போட்டியிலும் கோல்களை அடித்து அர்ஜென்டினாவுக்கு வெற்றி தேடித் தந்தால் அது தன்னைக் கவர்ந்த லட்சிய நாயகனுக்கு அவர் செய்யும் மிகப்பெரிய நன்றியாக அமையும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்