You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராகுல் காந்தி போராட்டம், மத்திய அரசுக்கு முன்வைத்த 5 கோரிக்கைகள் - இரவில் வேகமாக அரங்கேறிய காட்சிகள்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் முன்பு 5 கோரிக்கைகளை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சத்ரசால் அரங்கத்தில் தடுப்புக் காவலில் இருந்தபோது அவர் அந்த காணொளியை எடுத்துள்ளார், பின்னர் அது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.
பிரதமர் இல்லத்துக்கு வெளியே போராட்டம் நடத்த முடிவெடுத்தது ஏன் என்பது குறித்து அதில் ராகுல் காந்தி விளக்கியுள்ளார்.
சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா உட்பட பலரும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஜந்தர் மந்தர் சென்றிருந்தனர்.
ராகுல் காந்தி அந்த காணொளியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை தான் சந்தித்து மானவர்கள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என கோரியதாகவும், அதற்கு அரசின் அனுமதி வேண்டும் என சபாநாயகர் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி கூறுகையில், "ஆனால், அரசுக்கு அத்தகைய நோக்கம் இருப்பதாக எனக்குத் தெரியாததால், பிரதமர் இல்லத்துக்கு வெளியே போராட்டம் நடத்த முடிவெடுத்தோம். அதன்மூலம், மாணவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து நாட்டின் கவனத்தை ஈர்க்கலாம் என நினைத்தோம்." என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் கேள்விகளும், 5 கோரிக்கைகளும்
ராகுல் காந்தி, "கல்வி முறை ஏன் பாழாகிறது? வினாத்தாள் கசிவு ஏன் நடக்கிறது? இந்தியாவில் கல்வி ஏன் இவ்வளவு விலையுயர்ந்ததாக இருக்கிறது? பிள்ளைகளைப் படிக்க வைக்க மக்கள் ஏன் நிதி ரீதியாக சீரழிகிறார்கள்? இதுபோன்ற கேள்விகளைக் கேட்பதில் எந்தத் தவறும் இருக்கக்கூடாதே," என்றார்.
ராகுல் காந்தி அரசுக்கு 5 கோரிக்கைகளை வைத்துள்ளார். அவை-
- உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் ராஜினாமா
- மாணவர்களை அடித்தவர்கள் மற்றும் அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- மாணவர்கள் மீது உள்ள வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.
- அவையில் இந்த விஷயம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும்.
- மாணவர்களை நடத்திய விதத்துக்காக மோதியின் அரசும் அவரது உள்துறை அமைச்சரும் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ராகுல் காந்தியை விமர்சித்த தர்மேந்திர பிரதான்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களை அரசியலுக்காகப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முட்டுக்கட்டை போட விரும்புவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி பிரதமர் வீட்டின் வெளியே போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர் என்று செவ்வாய்க்கிழமை இரவு தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
"மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தடையை ஏற்படுத்த மாணவர்களைத் தொடர்ந்து அரசியலுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். ராகுல் காந்தியும் காங்கிரஸும் பிரதமர் வீட்டின் வெளியே போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர் என்பதுடன் பாதுகாப்பு விதிகளும் மீறப்பட்டன," என தர்மேந்திர பிரதான் சமூக வலைதளத் தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
"முழுமையான விவாதத்துக்குத் தயாராக இருப்பதாக அரசு தெளிவுபடுத்தியிருந்தது. இதற்குப் பிறகும் காங்கிரஸ் ஜனநாயக ரீதியான விவாதத்துக்குப் பதிலாக அரசியல் ரீதியான போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தது. அவர்களின் நோக்கம் மாணவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண்பது அல்ல, மாறாக தடைகளை உருவாக்கி அரசியல் தலைப்புச் செய்திகளைப் பெறுவதுதான் அவர்களது நோக்கம். ராகுல் காந்தியை பொறுத்தவரை இது மாணவர்கள் பற்றிய விஷயம் அல்ல. விவாதத்துக்கான சரியான வழி ஏற்கனவே திறக்கப்பட்ட பிறகும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மோதலை உருவாக்க முயற்சிப்பதாகும்," என்று எழுதியுள்ளார்.
ஜந்தர் மந்தர் சென்ற உத்தவ் தாக்கரே மற்றும் மஹுவா மொய்த்ரா
செவ்வாய்க்கிழமை இரவு பல தலைவர்களும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க ஜந்தர் மந்தர் சென்றடைந்தனர். காக்ரோச் ஜனதா கட்சி தனது எக்ஸ் கணக்கான 'காக்ரோச் இஸ் பேக்' பக்கத்தில் இதை பதிவிட்டு அதற்காக இருவருக்கும் நன்றி தெரிவித்தது.
மஹுவா மொய்த்ரா ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் ஒரு செல்ஃபி வீடியோவை வெளியிட்டு, "மோதிக்கும் அமித் ஷா-வுக்கும் தங்களுக்குப் பயப்படாதவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்றே தெரியவில்லை. இது அவர்களின் 'பாடத்திட்டத்துக்கு' அப்பாற்பட்டது" என்று கூறினார்.
இதற்கிடையில் பாதுகாப்பு கருதி மத்திய டெல்லியின் பல பகுதிகளில் காவல்துறையினர் பலத்த தடுப்புகளை அமைத்துள்ளனர். நாடாளுமன்ற கட்டடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமையும் போராட்டம் நடக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி காவலில் எடுக்கப்பட்டதைக் கண்டித்து கேரளாவிலும் அசாமிலும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அலிகாரில் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் அகிலேஷ் யாதவ் காவலில் எடுக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு