You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடந்தாலோ அல்லது படிக்கட்டு ஏறினாலோ மூச்சுத்திணறல் வருகிறதா? அலட்சியம் செய்யாதீர்
- எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
- பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
படிக்கட்டுகளில் ஏறும்போதோ அல்லது மிதமான வேகத்தில் நடக்கும்போதோ மூச்சுத்திணறல் ஏற்படுவது பலருக்குப் பொதுவான ஒரு நிகழ்வாக இருக்கலாம்.
நமக்கு வயதாகும்போது, உடல் எடை அதிகரிக்கும்போது, உடற்பயிற்சி இல்லாதபோது அல்லது உடல் தகுதி குறையும்போது ஓரளவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது இயல்பான ஒன்றாகவே கருதப்படுகிறது.
இருப்பினும், இதற்கு முன்பு எளிதாகச் செய்த வேலைகளைச் செய்யும்போது உங்களுக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, மிகக் குறைந்த உடல் உழைப்பிற்கே மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ அல்லது இப்பிரச்னை படிப்படியாக மோசமடைந்தாலோ, அதை வெறும் சோர்வு அல்லது வயோதிகத்தின் விளைவு என்று சாதாரணமாக நிராகரிப்பது ஆபத்தானது.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் உழைப்பின் போது ஏற்படும் மூச்சுத்திணறலானது இதய நோய், நுரையீரல் நோய், ரத்த சோகை, தைராய்டு கோளாறுகள் அல்லது பிற ஆரோக்கியக் குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
குறிப்பாகப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, நெஞ்சு வலி ஏற்படுவதற்கு முன்பாகவே இதய நோயின் ஆரம்ப அறிகுறியாக இந்த மூச்சுத்திணறல் வெளிப்படலாம்.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன் அல்லது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த அறிகுறியை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூச்சுத்திணறலுடன் சேர்ந்து நெஞ்சு இறுக்கம், தலை சுற்றல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, வியர்வை அல்லது கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.
மூச்சுத்திணறலுக்கான காரணம் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
படிக்கட்டுகளில் ஏறும்போதோ அல்லது நடக்கும்போதோ ஏற்படும் மூச்சுத்திணறலுக்கான துல்லியமான காரணத்தை அறிகுறிகளை மட்டுமே கொண்டு தீர்மானிக்க முடியாது.
இதய நோய், நுரையீரல் நோய், ரத்த சோகை, தைராய்டு கோளாறுகள், உடல் பருமன், சிறுநீரக நோய் அல்லது சில சமயங்களில் மன அழுத்தமும் கூட இதில் முக்கியப் பங்கு வகிக்கலாம். எனவே, சரியான நோயறிதலுக்கு நோயாளியின் விரிவான மருத்துவத் தகவல்களும் தேவையான பரிசோதனைகளும் முக்கியமானவை.
பொதுவாக, ஆரம்ப கட்டங்களில் ரத்த அழுத்தப் பரிசோதனை, ஈசிஜி , மார்பு எக்ஸ்-ரே மற்றும் பல்வேறு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு, ரத்த சர்க்கரை, தைராய்டு செயல்பாடு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்படலாம்.
இதயப் பிரச்னை இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், எக்கோ கார்டியோகிராபி , ட்ரெட்மில் அழுத்தப் பரிசோதனை அல்லது சிடி கோரோனரி ஆஞ்சியோகிராபி போன்ற பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில், நுரையீரல் செயல்பாட்டுப் பரிசோதனைகளும் தேவைப்படலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, திடீரெனத் தொடங்கும், வேகமாக அதிகரிக்கும் அல்லது ஓய்வெடுத்த பிறகும் குறையாத மூச்சுத்திணறல் ஒரு தீவிரமான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், ஆரம்ப கால நோயறிதல் மற்றும் சிகிச்சைமுறை ஆகியவை இதய நோய், இதயச் செயலிழப்பு அல்லது பிற தீவிரமான சிக்கல்களைத் தடுக்க உதவும்.
பரிசோதனையின் முக்கியத்துவம்
உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படத் தொடங்கியிருந்தால், நீங்கள் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அதே சமயம், நீங்களாகவே சுயமாக அதனைக் குறித்து கணிக்க கூடாது. அதற்காக, ஒரு மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
உதாரணமாகப் படிக்கட்டுகளில் ஏறும் போது, உடற்பயிற்சியின் போது ஏற்படும் மூச்சுத்திணறலுக்கான (பதற்றம்) காரணத்தைக் கண்டறிவதில் முறையான மதிப்பீடுதான் முதல் படியாகும்.
இந்த ஒரு பிரச்னை புதிதாக இருந்தாலோ, படிப்படியாக அதிகரித்து வந்தாலோ அல்லது மேற்கொள்ளப்படும் உடல் உழைப்பின் அளவை விடக் கடுமையானதாக இருந்தாலோ, அதை மதிப்பீடு செய்வது குறிப்பாக முக்கியமானது.
அதனால் பரிசோதனைகளின் தேவை குறித்து மும்பையிலுள்ள நியூபர்க் அஜய் ஷா ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநரான மருத்துவர் அஜய் ஷாவிடம் நாங்கள் கேட்டோம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நோயறிதலைப் பற்றி யோசிக்கும் போது, நாங்கள் முதலில் நோயாளியின் விரிவான மருத்துவ வரலாற்றைச் சேகரிப்போம். இதில் மூச்சுத்திணறலின் தன்மை, அது நீடிக்கும் காலம் மற்றும் அதன் தீவிரம் பற்றிய தகவல்கள் அடங்கும். நெஞ்சு வலி, படபடப்பு, இருமல், மூச்சிரைப்பு, பலவீனம் மற்றும் கால்களில் வீக்கம் போன்ற அது தொடர்பான அறிகுறிகள் குறித்தும் விசாரிக்கப்படும். இது தவிர, நோயாளியின் முக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் பிற நோய்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன" என்றார்.
" உடல் பரிசோதனையும் இப்பிரச்னைக்கான காரணத்தைப் பற்றிய முக்கியமான தடயங்களை வழங்க முடியும். நோயறிதல் நிபுணர்களாகிய எங்களது வேலை, வெறும் அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சையளிப்பது அல்ல; மாறாக, மருத்துவர்கள் இப்பிரச்னைக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உதவுவதும், அவர்கள் ஒரு முடிவுக்கு வர உதவக்கூடிய பொருத்தமான பரிசோதனைகளைப் பரிந்துரைப்பதும் ஆகும்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆரம்ப கட்டங்களில் என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்று கேட்டபோது, மருத்துவர் அஜய் ஷா அதற்குப் பதில் அளித்தார்.
"நோயாளிக்கான அறிகுறிகளின் அடிப்படையில் தான் பரிசோதனைகள் தேர்வு செய்யப்படுகின்றன. இருப்பினும், சில நோயறிதல் பரிசோதனைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் தேவைப்படுகின்றன. ரத்தப் பரிசோதனைகளில் சிபிசி முக்கியமானது, ஏனெனில் இது ரத்த சோகை அல்லது தொற்று போன்ற மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடிய பிரச்னைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இது தவிர, ரத்த சர்க்கரை அளவைச் சரிபார்க்கும் பரிசோதனைகள், கல்லீரல் செயல்பாட்டுப் பரிசோதனைகள், சிறுநீரகச் செயல்பாட்டுப் பரிசோதனைகள், தைராய்டு விபரம் மற்றும் உடலில் உள்ள அழற்சி ஆகியவற்றுக்கான பரிசோதனைகளும் செய்யப்படலாம். நோயாளிக்கு இதய நோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் கார்டியாக் பயோமார்க்கர் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்" என்று அவர் விளக்கினார்.
"நுரையீரல் அல்லது இதயத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய மார்பு எக்ஸ்-ரே பயனுள்ளதாக இருக்கும். ஒரு ஈசிஜி பரிசோதனையும் இதயத் துடிப்பு சீராக உள்ளதா மற்றும் இதயத்தின் மீது கூடுதல் அழுத்தம் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது"எனவும் மருத்துவர் அஜய் ஷா குறிப்பிட்டார்.
ஆரம்பகால நோயறிதல் ஏன் அவசியம்?
நடக்கும்போதோ அல்லது திடீரென சோர்வடையும்போதோ உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், ஆரம்பத்திலேயே அதைச் சோதித்து நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம்.
மூச்சுத்திணறல் என்பது ஒரு உடல்நலப் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, நோயைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டால், அதன் பின்னணியில் உள்ள பாதிப்பைக் கண்டறிய முடியாமல் போவதுடன், அதன் தீவிரமும் அதிகரிக்கக்கூடும்.
ஆரம்ப கால நோயறிதல் என்பது இதயச் செயலிழப்பு , கரோனரி இதய நோய், நாள்பட்ட நுரையீரல் நோய், பல்மோனரி எம்போலிசம் (நுரையீரலின் ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்த உறைவு), ரத்த சோகை மற்றும் பல்வேறு வளர்சிதை மாற்ற நோய்கள் போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சை முடிவுகளை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைகளின் உதவியுடன், மருத்துவர்கள் நோயாளியின் பிரச்னையை உரிய நேரத்தில் கண்டறிந்து, உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்க முடியும்.
இது எதிர்காலச் சிக்கல்கள், தொடர்ச்சியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை மற்றும் கடுமையான ஆரோக்கிய விளைவுகளைத் தடுக்க உதவும். இதன் விளைவாக, நோயாளியின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
பல நோயாளிகள் மூச்சுத்திணறலுக்கான காரணத்தைப் புறக்கணித்து, அதற்குக் காரணம் தங்கள் வயது அல்லது தங்களின் குறைந்த உடல் திறன் என்று கருதுகின்றனர். இது தாமதமான நோயறிதலுக்கு வழிவகுக்கிறது. முன்கூட்டியே பரிசோதனை செய்து சரியான முறையில் நோயைக் கண்டறிவதன் மூலம் இந்தத் தாமதத்தைத் தடுத்து, தேவையான சிகிச்சையை உரிய நேரத்தில் வழங்க முடியும்.
இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள்
மிகக் குறைந்த உழைப்பிலோ அல்லது அன்றாட வேலைகளைச் செய்யும்போதோ உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படத் தொடங்கினால், இப்பிரச்னை படிப்படியாக மோசமடைந்தால், ஓய்வெடுத்த பிறகும் குணமாகவில்லை என்றால், அல்லது இதனுடன் நெஞ்சு இறுக்கம், வலி, தலைச்சுற்றல் அல்லது வியர்வை போன்ற அறிகுறிகள் இருந்தால், அவை இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தாமதமின்றி ஒரு இதய நோய் நிபுணரை அணுக வேண்டும். இது தொடர்பாக, புனே பானேரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் இதய நோய் பிரிவின் ஆலோசகராகவும் தலைவராகவும் பணியாற்றும் மருத்துவர் அபிஜித் ஜோஷியிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.
கேள்வி: இதய நோயில் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் எவ்வளவு பொதுவானவை?
மருத்துவர் அபிஜித் ஜோஷி: பல நோயாளிகளுக்கு, குறிப்பாகப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு, நெஞ்சு வலி ஏற்படுவதற்கு முன்பாகவே உடல் உழைப்பின் போது ஏற்படும் மூச்சுத்திணறல் இதய நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கும். எனவே, இந்த அறிகுறியை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல.
கேள்வி: நெஞ்சு வலி இல்லாமலும் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளதா?
மருத்துவர் அபிஜித் ஜோஷி: எல்லா இதய நோய்களும் நெஞ்சு வலியை ஏற்படுத்துவதில்லை. சில நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல், விரைவாக சோர்வடைதல், இதயத் துடிப்பு அதிகரிப்பு, தலைச்சுற்றல் அல்லது பலவீனம் ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு 'அறிகுறியற்ற' இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
கேள்வி: இதயத்தின் ரத்தத்தை உந்தும் திறன் குறைவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
மருத்துவர் அபிஜித் ஜோஷி: இதயத்தின் உந்தும் திறன் குறைந்தால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்குப் போதுமான ரத்த விநியோகமும் ஆக்ஸிஜனும் கிடைக்காது. இது சோர்வு, மூச்சுத்திணறல், கால்களில் வீக்கம் மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
இதனால் அன்றாட நடவடிக்கைகளின் போது கூட சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். மூச்சுத்திணறல் என்று வரும்போது, வயது முதிர்வால் உடலின் செயல்திறன் இயற்கையாகவே ஓரளவுக்குக் குறைகிறது. தசை வலிமை குறைகிறது, இதயம் மற்றும் நுரையீரலின் செயல்திறனும் குறையக்கூடும். எனவே, முன்பை விடச் சற்றே கூடுதல் மூச்சுத்திணறலை எதிர்பார்ப்பது இயல்புதான். இருப்பினும், திடீரென அது அதிகரிப்பது அல்லது வழக்கத்திற்கு மாறான ஒரு பிரச்னையை வெறும் வயது முதிர்வினால் தான் என்று ஒருவர் நினைத்துவிடக் கூடாது. நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பிபிசி மராத்தி ஊடகத்திடம் பேசிய பரேலில் உள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் இதய நோய் நிபுணரும் இயக்குநருமான மருத்துவர் ராகுல் குப்தா, "நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகியவை இதய நோய்களுக்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாகும். எனவே, இத்தகைய நபர்களுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் இதய நோயின் அறிகுறியாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது" என்று கூறினார்.
"இந்த ஆபத்துக் காரணிகளில் ஏதேனும் ஒன்று உள்ளவர்கள், தங்களின் உடற்பயிற்சி செய்யும் திறன் குறைவதை உணர்ந்தாலோ அல்லது முன்பு எளிதாகச் செய்த உழைப்பின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, அவர்கள் மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்ப கால நோயறிதல் மற்றும் சிகிச்சைமுறை ஆகியவை மாரடைப்பு அல்லது இதயச் செயலிழப்பு போன்ற கடுமையான சிக்கல்களைத் தடுக்கலாம்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒருவரின் இதய ஆரோக்கியம் மேம்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள ஏதேனும் எளிதான அறிகுறிகள் உள்ளனவா என்று மருத்துவர் ராகுல் குப்தாவிடம் நாங்கள் கேட்டோம்.
"ஒரு நபர் அதிக சோர்வு அல்லது மூச்சுத்திணறலை உணராமல் தனது அன்றாட நடவடிக்கைகளைச் செய்ய முடிகிறதா என்பதுதான் இதய ஆரோக்கியத்திற்கான ஒரு நடைமுறை அறிகுறியாகும்" என்று அவர் கூறினார்.
உதாரணமாக, ஒரு நபர் எந்த அறிகுறியும் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு மாடிப் படிக்கட்டுகளில் ஏற முடிந்தால் அல்லது சுமார் 30 நிமிடங்கள் விறுவிறுவென நடக்க முடிந்தால், அந்த நபர் நல்ல செயல்பாட்டு நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறார்.
இருப்பினும், ஸ்மார்ட்வாட்ச் போன்ற சாதனங்களோ அல்லது சுயமதிப்பீடுகளோ ஒரு மருத்துவப் பரிசோதனைக்கு மாற்றாக முடியாது. மூச்சுத்திணறல் நீடித்தாலோ அல்லது மோசமடைந்தாலோ, மருத்துவரை அணுகுவது அவசியம்" என்று மருத்துவர் ராகுல் குப்தா விளக்கினார்.
மூச்சுத்திணறல், நெஞ்சு வலி அல்லது அழுத்தம், மயக்கம், கடுமையான தலை சுற்றல், படபடப்பு, நீல நிறமாக மாறும் உதடுகள், கால்களில் வீக்கம், இருமலின் போது ரத்தம் வருதல் அல்லது ஓய்வெடுக்கும் போது கூட சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
இந்த அறிகுறிகள் இதயம் அல்லது நுரையீரல் தொடர்பான ஒரு கடுமையான அவசர நிலையின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சையானது உயிரைக் காப்பாற்றவும், நீண்ட கால விளைவுகளை மேம்படுத்தவும் உதவும்.
உங்களது வாழ்க்கை முறையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய விரும்பினாலோ, உணவை மாற்றியமைக்க விரும்பினாலோ, மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கினாலோ அல்லது உடற்பயிற்சிகளை மேற்கொள்ள விரும்பினாலோ, ஒரு மருத்துவர் மற்றும் தகுதிவாய்ந்த பயிற்சியாளரின் உதவியைப் பெறுவது முக்கியமாகும்.
உங்களது உடலையும் அறிகுறிகளையும் ஒரு மருத்துவர் மூலம் முறையாகப் பரிசோதித்து, அவர்களின் அறிவுரையின் பேரில் மட்டுமே வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வது சிறந்ததாகும். மருத்துவரை ஆலோசிக்காமல் நீங்களாகவே சுய மருத்துவம் செய்துகொள்வது ஆபத்தானது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு