You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பசு, பூனை, நாய் உள்பட ஒவ்வொரு உயிரினத்தின் நாக்கும் வித்தியாசமாக இருப்பது ஏன்?
- எழுதியவர், கரோலின் ஸ்டீல் மற்றும் ஜோ கிளான்வில்
- பதவி, பிபிசி உலக சேவை, 'க்ரௌட்சயின்ஸ்' தொடர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஒட்டகச்சிவிங்கியை போன்று நீல நிறமாகவோ, எறும்பு திண்ணியை போன்று நீளமானதாகவோ அல்லது பல்லியை போன்று துரிதமானதாகவோ எப்படி இருந்தாலும், விலங்குகள் உலகில் நாக்கு என்பது மிகவும் பலவிதமான, வித்தியாசமான உறுப்பாகும்.
மேலும், மிகவும் ஆச்சர்யமான ஒன்றும் கூட.
உதாரணமாக, மற்ற கிளிகளை போலவே பஞ்சவர்ணக் கிளிக்கும் "அதன் தொண்டைக்கு உள்ளே ஒரு எலும்பு உள்ளது," என பிபிசியிடம் கூறுகிறார் லண்டன் பூங்காவின் தலைமைக் காப்பாளர் ஜெசிக்கா ரே.
"அந்த எலும்பு பார்ப்பதற்கு நம் ஆட்காட்டி விரலைப் போன்று இருக்கும், சற்று வளைந்திருக்கும், ஆனால் தோல் போன்றும் முற்றிலும் கருப்பாகவும் இருக்கும். தங்கள் உணவை கெட்டியாக பிடிப்பதற்கு அது உதவுகிறது. பறவைகள் தங்களின் அலகுகள் மூலம் கொட்டைகள் அல்லது மற்ற திடமான பழங்களை உடைக்கிறது, அதன்பின் தங்கள் நாக்குகள் மூலம் அவற்றை திறக்கின்றன, பின்னர் உண்ணக்கூடிய பகுதியை விடுவித்து தேவையற்ற பகுதிகளை துப்புகின்றன."
இந்த அமைப்பை ஜெசிக்கா ரே "அற்புதமானது" என்று வர்ணிக்கிறார். குறிப்பாக விதைகள் மற்றும் கொட்டைகளை அதிகம் உண்ணும் பறவைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்த வகை நாக்கு அவற்றின் உயிர்வாழ்வுக்கு உதவியுள்ளது
ஆனால், நமது வரலாற்றின் ஏதோ ஒரு கட்டத்தில், இத்தகைய பஞ்சவர்ணக் கிளி வகைகளும் மனிதர்களும் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர். அப்படியிருக்க, மனிதர்களுக்குத் தட்டையான, இளஞ்சிவப்பு நிறத் தசை (நாக்கு) அமைந்த நிலையில், இந்தக் கிளிகள் மட்டும் எப்படி தங்கள் வாய்க்குள் விரல் போன்ற ஒரு உறுப்பைப் பெற்றன? நாக்கு எப்போது பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கியது?
"நாம், நீரில் வாழ்ந்து அங்கேயே உணவை உண்ட மீன் போன்ற முன்னோர்களிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள். பின்னர் நிலத்தில் வாழத் தொடங்கியபோது, உணவைப் பிடித்து வாயில் மென்று சாப்பிடுவதற்கான புதிய வழியை உருவாக்க வேண்டியிருந்தது," என்று பரிணாம உயிரியல் நிபுணர் கர்ட் ஷ்வென்க் விளக்கினார்.
நீரில் இரை மிதந்து கொண்டிருப்பதால், புவியீர்ப்பு விசையை எதிர்கொள்வது குறித்து அது கவலைப்பட வேண்டியதில்லை. பெரும்பாலான மீன்கள், உறிஞ்சும் முறையைப் பயன்படுத்துகின்றன. அவை தங்கள் வாய் மற்றும் தொண்டைப் பகுதியை மிக வேகமாக விரிவாக்கி, நீரை உள்ளே இழுக்கின்றன. அதனுடன் சிக்கியிருக்கும் இரையும் மீனின் வாய்க்குள் சென்றுவிடுகிறது.
ஆனால், நிலத்தில் இரை மிதந்து இருப்பதற்கான வாய்ப்பே இல்லை.
"புவியீர்ப்பு விசை காரணமாக உணவு கனமாகிறது. எனவே, அதை எடுத்து வாயில் வைக்க வேண்டியுள்ளது. மீன்களிடம் ஏற்கெனவே இருந்த ஒரு தசையிலிருந்தே நாக்கு பரிணாம வளர்ச்சி அடைந்தது என்று நான் நம்புகிறேன்," என்று அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தின் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல் பேராசிரியர் கூறுகிறார்.
"இரையை நீருடன் சேர்த்து உள்ளிழுப்பதற்குப் பதிலாக, ஓர் உயிரினம் தனது நாக்கை வெளியே நீட்டி இரையைப் பிடித்து வாய்க்குள் கொண்டு வருகிறது. பின்னர் வாய்க்குள் அது உணவைத் தூக்கி, முன்னும் பின்னுமாக அசைத்து, தொண்டைக்குள் தள்ளி விழுங்குகிறது. முன்பெல்லாம் இந்தப் பணிகள் அனைத்தையும் தண்ணீரே செய்துவந்தது."
ஆனால், இது ஆரம்பம் மட்டுமே.
துண்டுகளாக்கவும் வாசனையை நுகரவும்
பல மில்லியன் ஆண்டுகளாக உயிரினங்களுக்கு நாக்குகள் உள்ளன.
ஆரம்பத்தில், உணவை வாய்க்குள் கொண்டு செல்வதற்கான எளிய உறுப்பாக இருந்த நாக்கு, காலப்போக்கில் பல்வேறு உயிரினங்களுக்கேற்ப மாறி வளர்ந்தது. பூனைக்கும் நாய்க்கும் உள்ள வேறுபாடு எவ்வளவு பெரியதோ, அதே அளவுக்கு அவற்றின் நாக்குகளும் வேறுபட்டுள்ளன. பூனை இனத்தின் நாக்கு மணல் தாளைப் போலக் கரடுமுரடாக இருக்கும். ஆனால், நாய் இனத்தின் நாக்கு மிகவும் மென்மையாகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
"விலங்குகளின் நாக்குகள் வெவ்வேறு வடிவங்களில் இருப்பதற்கான முக்கியக் காரணம், அவை இரையைப் பிடிக்க அவற்றை வெவ்வேறு விதமாகப் பயன்படுத்துவதுதான்," என்று அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் உணவு அமைப்புகள் நிபுணர் பேராசிரியர் கேலம் ராஸ் கூறுகிறார்.
"தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகள், இறைச்சி உண்ணும் விலங்குகள், பூக்களின் தேனை உணவாகக் கொள்ளும் உயிரினங்கள் என ஒவ்வொரு குழுவிற்கும் வெவ்வேறு வகையான நாக்குகள் உள்ளன," என்றும் அவர் கூறுகிறார்.
உதாரணமாக, பசுக்களின் நாக்கில் உள்ள பாப்பில்லாக்கள் (சிறிய மேடுகள்) புல்லைப் பற்றிப் பிடிக்கவும், நாக்கின் உதவியால் அதை துண்டுகளாக்கவும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன.
அனைத்து பாலூட்டிகளின் நாக்கின் மேற்பரப்பும் பாப்பில்லாக்கள் எனப்படும் சிறிய மேடுகளால் மூடப்பட்டிருக்கும். இவை, உணவை வாய்க்குள் நகர்த்த உதவுகின்றன. சில வகையான பாப்பில்லாக்கள் சுவையை உணரவும் உதவுகின்றன.
இதனால், நமது முன்னோர்கள் நிலத்தில் வாழத் தொடங்கியபோது, நாக்கும் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து, ஒவ்வொரு குறிப்பிட்ட பணிக்கும் ஏற்றவாறு சிறப்பாகத் தகவமைந்தது.
தவளையின் ஒட்டும் தன்மை கொண்ட நாக்கைப் போன்ற சில அமைப்புகள், முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை போல் தோன்றலாம். ஆனால், பரிணாம வளர்ச்சிக்கு எந்த முன்கூட்டிய திட்டமும் கிடையாது. அது, ஒரு உயிரினக் கூட்டத்தில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாகும். அவற்றில் சில மாற்றங்கள், குறிப்பிட்ட உயிரினங்களுக்கு உயிர்வாழ்வதற்கும், தங்களது மரபணுக்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கும் அதிக வாய்ப்பை வழங்குகின்றன.
உணவைப் பெற உதவும் உறுப்புகளின் வளர்ச்சியில் இந்தச் செயல்முறை மிகவும் முக்கியமானதாக இருந்தது.
மேலும், சில உயிரினங்களில் நாக்கு இன்னும் வியக்கத்தக்க வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்தது.
உலகின் மிகப் பெரிய நச்சுப் பாம்பான ராஜநாகத்தின் நாக்குதான் மிகவும் பிரபலமானதும், அச்சத்தை ஏற்படுத்துவதுமான ஒன்றாகும்.
உலகின் மிகப் பெரிய நச்சுப் பாம்பான ராஜநாகத்தின் நாக்கு நீளமாகவும், கருப்பு நிறத்திலும், இரண்டாகப் பிளவுபட்ட வடிவத்திலும் இருக்கும்.
"ராஜநாகங்கள் நாக்கை வெளியே நீட்டும்போது, தங்களைச் சுற்றியுள்ள சூழலில் இருக்கும் வேதியியல் சமிக்ஞைகளை உணர முயல்கின்றன," என்று லண்டன் உயிரியல் பூங்காவின் இருவாழ்விகள் மற்றும் ஊர்வன பிரிவின் பொறுப்பாளரான பென் டாப்லி கூறுகிறார்.
"அவற்றின் நாக்கு இரண்டாகப் பிளவுபட்டிருப்பதால், இரு திசைகளிலிருந்தும் வரும் சமிக்ஞைகளைத் தனித்தனியாக உணர முடிகிறது. அதாவது, இரு காதுகளால் ஒலியைக் கேட்டு அதன் திசையைக் கண்டறிவதைப் போல அவை செயல்படுகின்றன."
"நாக்கு மீண்டும் வாய்க்குள் சென்றதும், வாயின் மேற்பகுதியில் இருக்கும் 'ஜேக்கப்சனின் உறுப்பு' (துணை நுகர்வு உறுப்பு), நாக்கு சேகரித்த வேதியியல் சமிக்ஞைகளைப் புரிந்துகொள்கிறது."
அதன் இரண்டாகப் பிளவுபட்ட நாக்கின் இரண்டு நுனிகளும், இரு திசைகளிலிருந்தும் கிடைக்கும் சமிக்ஞைகளை ஒப்பிட்டுப் பார்க்க உதவுகின்றன. இதன் மூலம், காற்றில் உள்ள வேதியியல் துகள்களை உணர்ந்து, இரை அல்லது வேறு இலக்கு எந்தத் திசையில் உள்ளது என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது.
இவற்றுடன் ஒப்பிடும்போது, மனிதர்களின் நாக்கின் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. நமது நாக்கால் இரு திசைகளிலிருந்தும் மணத்தை உணர முடியாது. அதில் அசாதாரணமாகச் செயல்பட உதவும் எலும்புகளும் இல்லை. உணவை அரைப்பதற்காக மிகக் கூர்மையான அமைப்புகளும் இல்லை
அப்படியானால், மனிதர்களின் நாக்கில் ஏதேனும் தனித்துவமான சிறப்பம்சம் இருக்கிறதா?
நீர் நிரப்பப்பட்ட பலூன்
"பாலூட்டிகளின் நாக்கு முழுவதும் தசைகளால் ஆனது என்பதால், அது வாய்க்குள் மிகத் துல்லியமாகவும் திறமையாகவும் இயங்க முடிகிறது. உணவை மெல்லும்போது அதைத் திருப்பி சரியான இடத்துக்கு நகர்த்துவதில் நாக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது," என்று ராஸ் கூறுகிறார்.
நாம் இதைப் பற்றி பெரிதாகச் சிந்திப்பதில்லை. ஏனெனில், இந்தச் செயலை கிட்டத்தட்ட தன்னிச்சையாகவே செய்கிறோம். ஆனால், உணவை பற்களுக்கு இடையில் சரியான இடத்தில் வைப்பது நாக்குதான்.
ஒருமுறை நாக்கைப் பயன்படுத்தாமல் மென்று பார்க்க முயற்சியுங்கள். அப்போது, அது எவ்வளவு கடினமான செயல் என்பதை உணர முடியும்.
அதேபோல், இந்த இயக்கம் எவ்வளவு ஒழுங்காக நடைபெறுகிறது என்பதையும் கவனியுங்கள். சில நேரங்களில் கவனக்குறைவாக நாக்கையே கடித்துக் கொள்வோம். அப்போதுதான் இந்தச் செயல்பாட்டின் துல்லியத்தை நாம் உணர்கிறோம்.
அன்றாட வாழ்க்கையில் நாம் கவனிக்காத இந்தத் துல்லியமான இயக்கத்துக்குக் காரணம், நாக்கின் மிகவும் சிக்கலான உடலமைப்புதான்.
"பாலூட்டிகளின் நாக்கிலுள்ள தசைகள் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டவை. அவற்றின் தசைநார்கள் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும், நீளவாக்கிலும் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்துள்ளன. இவை அனைத்தும் நாக்கின் உள்ளேயே இருக்கின்றன," என்று ராஸ் விளக்குகிறார்.
இதைக் கர்ட் ஷ்வென்க் ஓர் உதாரணத்தின் மூலம் விளக்குகிறார்.
"தண்ணீரால் நிரப்பப்பட்ட ஒரு பலூனை கற்பனை செய்து பாருங்கள். பலூனை அழுத்தினால் அதன் மொத்த அளவு மாறாது. அது வெறுமனே நீண்டு அல்லது வடிவம் மாறும்''
நமது நாக்கும் இதேபோலத்தான் செயல்படுகிறது. அதை வெளியே நீட்ட வேண்டுமெனில், அது குறுகலாக வேண்டும். தட்டையாக மாற்ற வேண்டுமெனில், அது குட்டையாக வேண்டும்.
எலும்புகளோ மூட்டுகளோ இல்லாமல், தசைகளின் உதவியால் மட்டும் இயங்கும் உறுப்புகள் "மஸ்குலர் ஹைட்ரோஸ்டாட்கள்" என்று அழைக்கப்படுகின்றன. ஆக்டோபஸின் கரங்களும், யானையின் தும்பிக்கையும் இதே முறையில்தான் செயல்படுகின்றன.
"இந்தத் திறன்தான் நாக்கின் வடிவத்தை மிகவும் சிக்கலான பல வடிவங்களில் மாற்ற உதவுகிறது. பெரும்பாலான பிற முதுகெலும்புள்ள உயிரினங்களில் இல்லாத இந்தத் தனிச்சிறப்பு பாலூட்டிகளில் உள்ளது," என்று ஷ்வென்க் கூறுகிறார்.
பாலூட்டிகளின் நாக்கில் மேலும் பல குறிப்பிடத்தக்க தன்மைகளும் உள்ளன.
உதாரணமாக, ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு சுமார் அரை மீட்டர் நீளம் கொண்டது. அது நீலச் சாம்பல் நிறத்தில் இருக்கும். (ஆப்ரிக்காவின் கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக இந்நிறம் உதவுகிறது.) மேலும், பொருட்களை உறுதியாகப் பற்றிப் பிடிக்கும் திறனும் அதற்கு உள்ளது.
"ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்து, மற்ற விலங்குகளால் எட்ட முடியாத இடங்களை அடைய உதவுகிறது. அதோடு, மரக்கிளைகளை வாய்க்கு அருகே இழுத்துவரவும் அதன் நாக்கு உதவுகிறது," என்று லண்டன் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த நிக் காரெட் விளக்குகிறார்.
அதன்பிறகு, அந்த நாக்கு அடுத்த வேலையைச் செய்கிறது. அது மரக்கிளைகளைச் சுற்றிப் பிடித்து, அவற்றிலிருந்து இலைகளை நம்ப முடியாத வேகத்தில் பறித்தெடுக்கிறது.
ஆனால், ஐஸ்கிரீமைச் சுவைப்பதில் நமது நாக்கும் சளைத்ததல்ல.
அதுமட்டுமல்ல, கசப்பையும் இனிப்பையும் வேறுபடுத்தி உணர்வது, சூடானவற்றை உணர்வது, மீனில் உள்ள எலும்புகளைக் கண்டறிவது, நாம் பேசும் அல்லது பாடும் சொற்களின் ஒவ்வொரு ஒலியையும் உருவாக்க உதவுவது போன்ற பல திறன்களும் அதற்கு உள்ளன.
இவை போதாது என்பதுபோல், வெளியில் பெரிதாகத் தெரியாத, ஆனால் மிகவும் முக்கியமான இன்னொரு பணியையும் நாக்கு செய்கிறது.
விழுங்கும் ஆபத்து
உணவை விழுங்கும் ஒவ்வொரு முறையும், நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதில் நாக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.
"நாக்கு, உணவை வாயின் பின்பகுதியான ஓரோஃபாரிங்ஸ் வழியாக உணவுக்குழாய்க்குள் தள்ளுகிறது," என்று ராஸ் விளக்குகிறார்.
ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. ஓரோஃபாரிங்ஸ் என்பது ஒரு சந்திப்பைப் போன்றது. அங்குதான் சுவாசப் பாதையும் செரிமானப் பாதையும் ஒன்றோடொன்று சந்திக்கின்றன.
நாம் மூக்கு வழியாக சுவாசிக்கும்போது, காற்று மூச்சுக்குழாய்க்குள் செல்கிறது. ஆனால், உணவு அதற்குப் பின்னால் அமைந்துள்ள உணவுக்குழாய்க்குள் செல்ல வேண்டும்.
"இது பரிணாம வளர்ச்சியில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வடிவமைப்பு அல்ல," என்று ராஸ் கூறுகிறார்.
இந்தச் செயல்முறை சரியாக நடைபெற, நாக்கு அதன் இருபுறங்களிலும் குறுகி, அதன் ஒரு பகுதி பின்னோக்கி நகர்கிறது. இதனால் உணவு பின்னால் தள்ளப்படுகிறது. ஆனால், இந்த இயக்கம் வாய் மூடியிருக்கும்போதுதான் சரியாகச் செயல்படும்.
ஒருமுறை வாயைத் திறந்தபடியே உணவை விழுங்க முயற்சித்துப் பாருங்கள். அது எவ்வளவு கடினம் என்பதை உணர்வீர்கள்.
"உணவை வேகமாக உணவுக்குழாய்க்குள் தள்ளி, அது தவறுதலாக நுரையீரலுக்குள் செல்வதைத் தடுப்பதுதான் நாக்கின் மிக முக்கியமான பணி," என்று ராஸ் கூறுகிறார்.
இந்த இயக்கங்களின் ஒருங்கிணைப்பு மிகவும் துல்லியமானது. அதனால், ஏதேனும் தவறு நிகழும் வரை அதைப் பற்றி நாம் பெரிதாகக் கவனிப்பதில்லை.
இது அனைவருக்கும் நேர்ந்திருக்கும். உணவை விழுங்கும்போது சிறிய தவறு ஏற்பட்டால், நமக்கு இருமல் வரும். ஆரோக்கியமானவர்கள் பொதுவாக சில நொடிகளில் மீண்டுவிடுவார்கள்.
ஆனால், பக்கவாதம், பார்கின்சன் நோய், புற்றுநோய் அல்லது பிற உடல்நலப் பிரச்னைகள் காரணமாக இந்தக் கட்டுப்பாட்டை இழந்தவர்களுக்கு, ஒவ்வொரு வாய் உணவும் மூச்சுத்திணறலையோ அல்லது நுரையீரல் தொற்றையோ ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.
"நாக்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்வது, டிஸ்ஃபேஜியா (விழுங்குவதில் சிரமம்) உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும்," என்று ராஸ் கூறுகிறார்.
உணவை விழுங்குவது முதல் மெல்வது வரை, இரையைப் பிடிப்பது முதல் காற்றில் உள்ள வேதியியல் சமிக்ஞைகளை உணர்வது வரை, நாக்கு பரிணாம வளர்ச்சி உருவாக்கிய மிகப் பல்துறைத் திறன் கொண்ட உறுப்புகளில் ஒன்றாகும். உயிர்வாழ்வுக்கும் அது இன்றியமையாததாகும்.
* இந்தக் கட்டுரை, பிபிசி-யின் "க்ரௌட்சயின்ஸ்' பாட்காஸ்ட் தொடரில் இடம்பெற்ற "வாட்'ஸ் தி டீல் வித் டங்ஸ்?" என்ற அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு