காட்டில் 'மறைந்திருந்த' ஆரஞ்சு நிற உதடு குரங்கு - இந்த புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

    • எழுதியவர், விக்டோரியா கில்
    • பதவி, அறிவியல் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கருமையான முகமும் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற உதடுகளும் கொண்ட ஒரு குரங்கு இனத்தை விஞ்ஞானிகள் புதிய உயிரினமாக உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் குரங்கு, காங்கோ ஜனநாயகக் குடியரசின் காடுகளில் வாழ்கிறது.

அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளால் சூழப்பட்ட அந்நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள லோமாமி தேசியப் பூங்காவில், உயரமான மரங்களின் உச்சியில் மறைந்திருந்த இந்த குரங்கு முதன்முறையாகக் கண்டறியப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது.

அங்கு பணியாற்றிய வனவிலங்கு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், இந்த வித்தியாசமான தோற்றமுடைய விலங்கை 2008-ஆம் ஆண்டிலேயே பார்த்ததாக தெரிவித்திருந்தனர். ஆனால் அப்போது அவர்கள் பெற்றது தெளிவில்லாத ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே.

அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தக் குரங்கு காணப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு அதைத் தேடி ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் மூலம், இது இதுவரை அறிவியலுக்கு அறியப்படாத புதிய குரங்கு இனம் என்பது தெரியவந்தது.

கடந்த 75 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாவது புதிய குரங்கு இனம் இதுவாகும்.

புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளரான ஜூனியர் அம்போகோ, இந்தத் தேடல் முயற்சியில் முக்கிய பங்காற்றினார். இந்த ஆய்வில் ஒலிப்பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் விரிவான மரபணு ஆய்வுகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவுகள் ப்ளோஸ் ஒன் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

"மிகச் சிலருக்கே இதன் இருப்பு தெரிந்த ஒரு விலங்கின் முகத்தை நேரில் பார்ப்பது ஆச்சரியமான அனுபவமாக இருந்தது," என்று ஜூனியர் அம்போகோ பிபிசியிடம் தெரிவித்தார்.

ரகசியமாக வாழும் இனம்

இந்தச் சூழலில், ஒரு உயிரினம் "கண்டுபிடிக்கப்பட்டது" என்பதன் பொருள், அது மரபணு ரீதியாக மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்ட தனி இனமாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது என்பதாகும். அந்தக் குரங்கு இருப்பது குறித்து உள்ளூர் மக்களில் சிலருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. அவர்கள் அதை "லிக்வெலி" என்ற பெயரால் அழைத்து வந்தனர்.

ஆனால், இந்தக் குரங்குகள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை என்றும், பெரும்பாலும் உயரமான மரங்களின் உச்சிப் பகுதிகளில் மறைந்து வாழ்வதாகவும் அம்போகோ கூறினார்.

"எங்கள் தேடலின் ஒரு பகுதியாக, இந்த விலங்குகள் வாழும் பகுதிகளுக்கு அருகிலுள்ள 52 கிராமங்களில் மக்களிடம் நாங்கள் பேசினோம். ஆனால், அவற்றை நேரில் பார்த்திருந்தவர்கள் எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே," என்று அவர் நினைவுகூர்ந்தார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசு, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு, அந்த நாட்டின் வளமான இயற்கைப் பன்முகத்தன்மையைப் போற்றும் வகையில் இந்தக் குரங்கிற்கு "கொலோபஸ் காங்கோஎன்சிஸ்" என்ற அறிவியல் பெயரைச் சூட்டியது.

இது கொலோபஸ் குரங்குகள் எனப்படும் பெரிய குரங்கு குழுவைச் சேர்ந்தது.

"இவை ஆப்பிரிக்காவில் காணப்படும் மிகவும் முக்கியமான குரங்கு இனங்களில் ஒன்று. இவற்றுக்கு கட்டைவிரல் கிடையாது," என்று புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேட் டெட்வைலர் விளக்கினார்.

"இவை மரங்களின் உச்சிப் பகுதியில் வாழும் தாவர உணவுண்ணிகள். காட்டு சூழலியல் அமைப்பில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. விதைகளைப் பரப்புவதிலும் அவை முளைப்பதற்கும் இக்குரங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் உதவுகின்றன என்று நாங்கள் கருதுகிறோம்," என்று பேராசிரியர் டெட்வைலர் கூறினார்.

இந்தக் குரங்குகளின் முகத்தில் காணப்படும் பிரகாசமான, வித்தியாசமான நிற அடையாளங்கள் மற்ற விலங்குகளுக்கு ஒரு காட்சி சமிக்ஞையாக இருக்கலாம் என்றும், துணையை ஈர்க்கவோ அல்லது தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணவோ உதவலாம் என்றும் பேராசிரியர் டெட்வைலர் கருதுகிறார்.

இந்தக் குரங்குகள் தனித்துவமான "கர்ஜனை" போன்ற ஓசையையும் எழுப்புகின்றன. "அவற்றின் சத்தத்தை அடிக்கடி கேட்க முடியும். ஆனால் அவற்றைப் பார்ப்பது அரிது," என்று அம்போகோ கூறினார்.

இந்தக் குரங்குகள் மிகவும் அரிதானவை என்றும், தங்களுக்குத் தேவையான உணவும் வாழிடமும் கிடைக்கும் குறிப்பிட்ட காட்டு பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த விலங்குகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன. எனவே, கொலோபஸ் காங்கோஎன்சிஸ் தனி இனமாக அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இனி அதற்கு சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

புதிதாக விவரிக்கப்பட்டுள்ள இந்த மறைவாக வாழும் குரங்கு இனம் குறித்து இன்னும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதன் எண்ணிக்கையை மதிப்பிடவும், நடத்தைகளைப் பற்றி மேலும் அறியவும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு