You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாகர்கோவிலை தொடர்ந்து புழல் சிறை கைதி மரணம் - இன்சுலின் மறுப்பு காரணமா? என்ன நடந்தது?
- எழுதியவர், ப. சிவசங்கர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சேலையூரைச் சேர்ந்த பாலாஜி, புதன்கிழமை (ஜூலை 15) உயிரிழந்தார்.
சர்க்கரை நோயாளியான பாலாஜிக்கு இன்சுலின் செலுத்திக்கொள்ள அனுமதித்திருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறைச்சாலையில் பாலாஜி உயிரிழப்பு?
தாம்பரத்தை அடுத்த சேலையூரைச் சேர்ந்த பாலாஜி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த ஜூலை 12ஆம் தேதி 506 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதால், அதே நாளில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 15ஆம் தேதி அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதையடுத்து, அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் எனவும் காவல்துறை கூறியுள்ளது.
பாலாஜி மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டதாகக் கூறி, பாலாஜியின் உறவினர்கள் வியாழக்கிழமை (ஜூலை 16) சேலையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உறவினர்கள் கூறுவது என்ன?
"பெட்டிக்கடை நடத்தி குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கவனித்து வந்த எனது அக்காவின் கணவர், கடந்த ஓராண்டாக சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக கடையைத் தொடர்ந்து நடத்தவில்லை. அவர் மீது போலி வழக்குகள் பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவரை கொன்றுவிட்டனர்," என்று செய்தியாளர்களிடம் பாலாஜியின் உறவினர் ரேகா தெரிவித்தார்.
"இன்சுலின் ஊசி கூட செலுத்த அனுமதிக்காமல் சிறையிலேயே அவரை கொன்றுவிட்டனர். சிறு வயது குழந்தையை வைத்திருக்கும் எனது அக்கா இனி என்ன செய்வார் என்றே தெரியவில்லை," என்றும் அவர் கூறினார்.
''பாலாஜியும் அவரது தந்தையும் கடந்த 20 ஆண்டுகளாக பெட்டிக்கடையை நடத்தி வந்தனர். அவரது கடையில் குட்கா பொருட்கள் இருப்பதாகக் கூறி போலீசார் அடிக்கடி சிறிய வழக்குகளைப் பதிவு செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை அவரை சிறையில் அடைக்கும் வகையில் போலி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என பாலாஜியின் உறவினர் முருகன் பிபிசி தமிழிடம் கூறினார்
"கடந்த ஓராண்டாக பாலாஜி கடை நடத்தாமல் இருந்தார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், அங்கு எதுவும் கிடைக்காததால் வேறு காரணங்களைக் கூறி அவரை அழைத்துச் சென்று பொய்யான வழக்கில் சிக்கவைத்தனர்," என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், "ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாலாஜியை, செவ்வாய்க்கிழமை எங்களது வழக்கறிஞர் நேரில் சந்தித்தார். அப்போது, 'நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு இன்சுலின் வழங்காமல் வேறு ஏதோ மாத்திரை கொடுக்கிறார்கள். அதை என் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை' என்று பாலாஜி கூறியதாக வழக்கறிஞர் தெரிவித்தார்," என்றார்.
கைது நடவடிக்கை ஏன்?
தாம்பரம் எம்.சி.சி. கல்லூரி அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த சேலையூர் போலீசார், சந்தேகத்தின் பேரில் ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்திச் சோதனை செய்தனர் என்றும் அப்போது, அதில் 506 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஏற்றி வந்த வாகனத்தில் ராமநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் பயணம் செய்தது அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ராமநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அன்றைய தினமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவத் தகுதிச் சான்று பெறப்பட்டு, புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த புதன்கிழமை காலை 6.40 மணியளவில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், காவல்துறை பாதுகாப்புடன் அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், காலை 7.45 மணியளவில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?
பாலாஜிக்கு இன்சுலின் செலுத்த அனுமதிக்காததே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், அந்தக் குற்றச்சாட்டை புழல் சிறை அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.
பெயர் வெளியிட விரும்பாத புழல் சிறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் "சிறையில் அடைக்கப்படும் ஒவ்வொரு கைதியும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்படுகிறார். பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுடன் வரும் கைதிகளுக்கு, சிறைத்துறை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றன," என்றார்.
'’குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜிக்கும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மூன்று நாட்களாக அவர் அந்த மருந்துகளை உட்கொண்டு வந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்றும் அந்த அதிகாரி கூறினார்.
’’இன்சுலின் எடுத்துக்கொள்ளாததால் ஒருவருக்கு நேரடியாக மாரடைப்பு ஏற்பட்டுவிடும் என்று கூற முடியாது. இருப்பினும், சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும். அது அவர்களின் உடல்நிலை மற்றும் நோயின் தன்மையைப் பொறுத்தது," என்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் அரவிந்த் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுக்கு ஏற்பவே இன்சுலின் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் சர்க்கரையின் அளவு குறைந்தால், இன்சுலின் வழங்குவது நிறுத்தப்படும்," என்றார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும்பாலும் இன்சுலினுடன் சேர்த்து மாத்திரைகளும் வழங்கப்படுவதாக மருத்துவர் அரவிந்த் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலினுக்குப் பதிலாக சில சூழல்களில் அதற்கு இணையான மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. எனவே, இன்சுலின் எடுத்துக்கொள்ளாததால் மட்டுமே ஒருவர் உயிரிழந்துவிடுவார் என்று கூற முடியாது," என்றார்.
புழல் சிறைக் கைதி பாலாஜியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து பிபிசி தமிழ் எழுப்பிய கேள்விக்கு, "உடற்கூராய்வு அறிக்கையை இன்னும் பார்க்கவில்லை" என்று மட்டும் அவர் பதிலளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு