You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஃபாக்லண்ட் ஆதரவு பதாகை' - அரையிறுதி வெற்றிக்கு பின் அர்ஜென்டினா சர்ச்சையில் சிக்கியது ஏன்?
- எழுதியவர், அத்வைத் ராஜன்
- பதவி, பிபிசி விளையாட்டு செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஃபாக்லண்ட் தீவுகள் தங்களுக்குச் சொந்தமானது என்ற தங்களது நாட்டின் கோரிக்கைக்கு ஆதரவாக பதாகை ஏந்தி அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியதால், அந்த அணிக்கு எதிராக ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா, அட்லாண்டாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக மீண்டு வந்து இரண்டு கோல்களை அடித்து, இங்கிலாந்து அணியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.
போட்டி முடிந்த பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்று எழுதப்பட்ட பேனரை ஏந்தி தங்களது வெற்றியைக் கொண்டாடினர். இதற்கு "ஃபாக்லண்ட் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை" என்று பொருளாகும்.
தென்மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள, பிரிட்டனின் நிலப்பரப்பான ஃபாக்லண்ட் தீவுகள், பிரிட்டன் மற்றும் அர்ஜென்டினா இடையே நீண்டகாலமாக இறையாண்மை தொடர்பாக ஒரு விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
அர்ஜென்டினாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 300 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தீவு கூட்டங்களுக்காக, இவ்விரு நாடுகளும் 1982 ஏப்ரல் முதல் ஜூன் வரை போரில் ஈடுபட்டன.
74 நாட்கள் நீடித்த இந்த மோதலில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த 655 வீரர்களும், பிரிட்டனைச் சேர்ந்த 255 வீரர்களும் உயிரிழந்தனர். இந்தத் தீவுகளைச் சேர்ந்த மூன்று பேரும் இதில் பலியாயினர்.
கடந்த 2014 ஆம் ஆண்டில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஒரு நட்புப் போட்டிக்கு முன்பாக அர்ஜென்டினா வீரர்கள் இதே போன்ற ஒரு பேனரை ஏந்தியதற்காக, அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு ஃபிஃபா 20,000 பவுண்டுகள் அபராதம் விதித்திருந்தது.
அர்ஜென்டினா வீரர்களின் இந்தச் செயல், அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் அணியின் தவறான நடத்தை குறித்த விதிகளை மீறியுள்ளதாக உலக கால்பந்து நிர்வாக அமைப்பு அப்போது தெரிவித்திருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, அர்ஜென்டினாவின் துணை அதிபர் விக்டோரியா வில்லாரூயல் , அர்ஜென்டினா படை வீரர்கள் என்று கருதப்படும் ஒரு வீடியோவுடன் "இது மற்றொரு சாதாரணப் போட்டி மட்டுமல்ல" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
"ஃபாக்லண்ட் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை" என்று பதிவிட்ட வில்லாரூயல், "அவற்றை மைதானத்திற்குள் கொண்டு வர அவர்கள் தடை விதித்தார்கள், ஆனால் நாம் அவற்றை நமது ரத்தத்திலும் இதயத்திலும் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டார்கள்" என்றும் எழுதியுள்ளார்.
போட்டிக்கு முன்னதாக, இந்த அரையிறுதிப் போட்டியானது "ஆக்கிரமிப்பாளர்களை அவர்களின் இடத்தில் வைப்பதைப் பற்றியது" என்று வில்லாரூயல் கூறியிருந்தார்.
அர்ஜென்டினாவின் இந்த பேனர் "முற்றிலும் பொருத்தமற்றது" என்று கூறியுள்ள பிரிட்டன் வர்த்தகம் மற்றும் வணிகத்துறை செயலாளர் பீட்டர் கைல், இந்த விவகாரம் குறித்து ஃபிஃபா முறையான விசாரணை நடத்தும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
"கால்பந்தின் ஒரு பகுதியாக அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்ற விதியை இது மிக மோசமாக மீறிய செயல் என்பதால், ஒரு விசாரணை நிச்சயமாக நடக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று பிபிசி பிரேக்பாஸ்ட் நிகழ்ச்சியில் கைல் கூறினார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எகிப்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அர்ஜென்டினா வீரர்கள் ஃபாக்லண்ட் போரையும், அர்ஜென்டினாவின் ஜாம்பவான்களான டியாகோ மரடோனா மற்றும் லியோனல் மெஸ்ஸியையும் குறிப்பிடும் பாடல்களைப் பாடினர் .
இருப்பினும், அரையிறுதிக்கு முன்பாக, மேலாளர் லியோனல் ஸ்கலோனி தான் கால்பந்தையும் அரசியலையும் "கலக்கப் போவதில்லை" என்று கூறியிருந்தார்.
"உண்மை என்னவென்றால், இது ஒரு கால்பந்துப் போட்டி. குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, என்னால் விஷயங்களைக் குழப்ப முடியாது" என்று ஸ்கலோனி கூறியிருந்தார்.
"அது நமது வரலாற்றில் ஒரு மிகவும் சோகமான காலகட்டம், அதைப்பற்றி நாம் இப்போது செய்வதற்கு எதுவும் இல்லை, அதுதான் யதார்த்தம்."
"உலகின் பிற பகுதிகளிலும் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, நாம் போரின் இருப்பை விமர்சிக்கிறோம். அந்த மக்களை நாம் நிச்சயமாக நினைவுகூர்கிறோம், அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இது ஒரு கால்பந்து போட்டி. இரண்டையும் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது," என்றும் அவர் கூறியிருந்தார்.
என்ஸோ பெர்னாண்டஸ் மற்றும் லாட்டாரோ மார்டினெஸ் ஆகியோரின் கடைசி நேர கோல்களால் இங்கிலாந்து தோல்வியடைந்த இந்த அரையிறுதிப் போட்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பதற்றங்கள் காரணமாகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடத்தப்பட்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு