You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹோர்மூஸ் நீரிணை: மாற்று வழிகள் வளைகுடா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைத் தொடர உதவுமா?
- எழுதியவர், லூயிஸ் பருச்சோ
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய பதற்றத்துக்குப் பிறகு, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணை , மீண்டும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு தற்காலிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு மாதத்துக்குள்ளேயே, இரானும் அமெரிக்காவும் மீண்டும் பரஸ்பரம் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த பதற்றங்கள் கச்சா எண்ணெய் விலையை உயரச் செய்துள்ளன.
ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல்களை இயக்குவது மிகவும் ஆபத்தானதாக மாறினால், வளைகுடா பகுதி ஏற்றுமதியாளர்கள் தங்களது எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சந்தைக்குக் கொண்டு செல்ல மாற்று வழிகள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
மாற்று வழிகள் உள்ளன, ஆனால் தற்போதைய நிலையில் இந்த முக்கிய நீர்வழிப் பாதைக்கு அவை எதுவும் முழுமையான மாற்றாக இருக்க முடியாது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.
ஹோர்மூஸ் நீரிணை ஏன் முக்கியமானது?
இரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள ஹோர்மூஸ் நீரிணை, அதன் அளவு, நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைவான செலவு ஆகியவற்றின் காரணமாக, வளைகுடா பகுதியின் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கான முதன்மை ஏற்றுமதிப் பாதையாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பில் கணிசமான முதலீடு தேவைப்படும் குழாய் வழி வலைப்பின்னல்களை விட, கப்பல்கள் மூலம் குறைந்த செலவில் அதிக அளவிலான எரிபொருளைக் கொண்டு செல்ல முடியும்.
சர்வதேச ஆற்றல் முகமையின் (IEA) கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 20 மில்லியன் பேரல் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் இந்த நீரிணை வழியாகக் கடந்து செல்கின்றன, இது உலகளாவிய கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் தோராயமாக நான்கில் ஒரு பங்காகும். இந்த ஏற்றுமதிகளில் சுமார் 80% ஆசிய நாடுகளைச் சென்றடைகின்றன. இந்த நீர்வழிப் பாதை உலகின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்கிறது.
திரவ இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, இந்த நீரிணையின் மீதான சார்பு நிலை இன்னும் அதிகமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார், சர்வதேச சந்தைகளை அடைவதற்கு இந்தப் பாதையையே நம்பியுள்ளது, மேலும் அதன் எல்.என்.ஜி ஏற்றுமதிக்கு தற்போது பெரிய அளவிலான மாற்று வழி எதுவும் இல்லை.
தற்போதுள்ள மாற்றுப்பாதைகள்
ஹோர்மூஸ் நீரிணை, உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் மீது இரானுக்குக் கணிசமான செல்வாக்கை வழங்குவதால், வளைகுடா பகுதி உற்பத்தியாளர்கள் இந்த நீர்வழிப் பாதையை நம்பியிருக்காமல் எண்ணெயைக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்புகளில் நீண்டகாலமாக முதலீடு செய்து வருகின்றனர்.
இதில் மிகப்பெரியது சௌதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய்வழிப் பாதையாகும் . 'பெட்ரோலைன்' என்று அழைக்கப்படும் இந்த 1,200 கி.மீ. (750 மைல்) நீளமுள்ள வலைப்பின்னல், அந்த நாட்டின் கிழக்கு எண்ணெய் வயல்களை செங்கடலில் உள்ள யான்பு ஏற்றுமதி முனையத்துடன் இணைக்கிறது.
இது 1980களில் இரான்-இராக் போரின் போது கட்டப்பட்டது.
அப்போது இரு நாடுகளும் வளைகுடா பகுதியில் இருந்த எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் பிற வணிகக் கப்பல்களை இலக்கு வைத்தன. இந்தக் குழாய்வழிப் பாதையின் கொள்ளளவு 2019-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 7 மில்லியன் பேரல் என்ற அவசரகால உச்ச வரம்பாக விரிவுபடுத்தப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அபுதாபி கச்சா எண்ணெய் குழாய்வழிப் பாதை மூலம் தனது சொந்த மாற்று வழியை உருவாக்கியுள்ளது.
406 கி.மீ. (252 மைல்) நீளமுள்ள இது, அபுதாபியில் உள்ள ஹப்ஷான் எண்ணெய் வயல்களை ஓமன் வளைகுடாவில் உள்ள புஜேரா துறைமுகத்துடன் இணைக்கிறது. இது ஹோர்மூஸ் நீரிணையை முழுமையாகத் தவிர்த்து ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது.
இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, துபையைத் தளமாகக் கொண்ட துறைமுக நிறுவனமான டிபி வேர்ல்டு, புஜேராவில் ஒரு புதிய பல்நோக்குத் துறைமுகத்தையும், தற்போதுள்ள துறைமுகத்தில் ஒரு புதிய முனையத்தையும் உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
துபையின் முதன்மை மையமான ஜெபல் அலியை சார்ந்திருப்பதைக் குறைப்பதையும், அதே நேரத்தில் ஹோர்மூஸ் நீரிணைக்கு வெளியே உள்ள கப்பல் போக்குவரத்து வழிகளுக்கான அணுகலை மேம்படுத்துவதையும் இந்தத் திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதன் முக்கிய வரம்பு அதன் அளவு தான். மாற்று வழிகள் இருந்தாலும், அவற்றின் மூலம் நாளொன்றுக்கு 3.5 முதல் 5.5 மில்லியன் பேரல்களை மட்டுமே மாற்றி அனுப்ப முடியும் என்று சர்வதேச ஆற்றல் முகமை (IEA) மதிப்பிடுகிறது.
இது இந்த நீரிணை வழியாக வழக்கமாகக் கடந்து செல்லும் தோராயமாக 20 மில்லியன் பேரல்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு.
"இது இன்னமும் போதுமானதாக இல்லை" என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கு ஆய்வுகளின் இணைப் பேராசிரியர் டேவிட் பி. ராபர்ட்ஸ் தனது சமீபத்திய கட்டுரையில் எழுதியுள்ளார்.
மாற்று வழிகள் இருக்கும் இடங்களில் கூட, நடைமுறைக் கட்டுப்பாடுகள் அவற்றின் பயனை மட்டுப்படுத்துகின்றன.
உதாரணமாக, யான்புவின் ஏற்றுமதி முனையங்கள் ஒருபோதும் "இவ்வளவு எண்ணெயை இவ்வளவு வேகமாக" கையாளுவதற்காக வடிவமைக்கப்படவில்லை என்று ராபர்ட்ஸ் குறிப்பிடுகிறார்.
இந்த இரண்டு வழிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. புஜேராவில் உள்ள தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் சேமிப்பு கிடங்குகள் தீப்பற்றி எரிந்து, ஏற்றுமதி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குற்றம் சாட்டியது.
ஏப்ரல் மாதத்தில், பெட்ரோலைன் பம்ப் நிலையத்தின் மீதான இதேபோன்ற தாக்குதல்களால் நாளொன்றுக்கு 7,00,000 பேரல் உற்பத்தி தடைபட்டது. அதை இயக்கும் சௌதி அரம்கோ நிறுவனம் மூன்று நாட்களுக்குள் அந்தப் பாதையை மீண்டும் அதன் முழுத் திறனுக்கு கொண்டு வந்தது.
இரானும் ஹோர்மூஸைத் தவிர்ப்பதற்கான தனது சொந்த வழியை உருவாக்கியுள்ளது. வளைகுடாவின் முனையில் உள்ள கோரேவிலிருந்து, ஓமன் வளைகுடாவில் உள்ள ஜாஸ்க் ஏற்றுமதி முனையம் வரை 1,000 கி.மீ. (620 மைல்) நீளமுள்ள குழாய்வழிப் பாதையை அது அமைத்துள்ளது.
நாளொன்றுக்கு 1 மில்லியன் பேரல் வரை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, இரானிய எண்ணெய் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லாமல் சர்வதேச சந்தைகளை அடைய அனுமதிக்கிறது.
இருப்பினும், நடைமுறையில், தடைகள் மற்றும் முழுமையடையாத முனையங்களின் உள்கட்டமைப்பு ஆகிய காரணங்களால், அதன் பயன்பாடு உத்தேசிக்கப்பட்ட கொள்ளளவை விட மிகக் குறைவாகவே உள்ளது.
எதிர்கால ஏற்றுமதி வழித்தடங்கள்
ஹோர்மூஸ் நீரிணையை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காகப் புதிய ஏற்றுமதி வழிகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
600 மைல் (970 கி.மீ.) நீளமுள்ள கிர்குக்-செயஹான் குழாய்வழிப் பாதை அவற்றுள் ஒரு வழியாகும். இது வட இராக்கின் கிர்குக் பகுதியிலிருந்து துருக்கியின் மத்திய தரைக்கடல் துறைமுகமான செயஹானுக்கு எண்ணெயைக் கொண்டு செல்கிறது.
இரண்டரை ஆண்டுகால முடக்கத்துக்குப் பிறகு, இந்தக் குழாய்வழிப் பாதை 2025 செப்டம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது.
2026 மார்ச் மாதத்துக்குள், இதன் வழியான எண்ணெய் போக்குவரத்து நாளொன்றுக்கு சுமார் 250,000 பேரல்களாக உயர்ந்தது.
இது இராக்குக்கு ஒரு மாற்று ஏற்றுமதிப் பாதையை வழங்கியுள்ளது, இருப்பினும் இராக்கின் ஒட்டுமொத்த ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் இது சிறியதாகவே உள்ளது.
இராக் நாளொன்றுக்கு சுமார் 3.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது, இதில் தோராயமாக 95% ஏற்றுமதி தெற்கு துறைமுகமான பஸ்ராவிலிருந்து புறப்பட்டு, ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே கடந்து செல்கின்றன.
மற்றொரு சாத்தியமான வழி, கிர்குக்-பனியாஸ் குழாய்வழிப் பாதையை மீண்டும் செயல்படுத்துவதாகும்.
இது இராக்கிய எண்ணெய் வளைகுடா பகுதியைத் தாண்டாமல் சிரியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரையை அடைய அனுமதிக்கும்.
தோராயமாக 500 மைல் (800 கி.மீ.) நீளமுள்ள இந்தக் குழாய்வழிப் பாதை 1952ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது, ஆனால் இரான்-இராக் போரின் போது இது மூடப்பட்டது.
பிராந்திய ஏற்றுமதி வழிகளைப் பன்முகப்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இதனை மீண்டும் உருவாக்குவது குறித்து இராக், சிரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆலோசித்துள்ளதாக சமீபத்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய தரைக்கடல், கருங்கடல், காஸ்பியன் கடல் மற்றும் அரேபிய வளைகுடா ஆகியவற்றை சிரியா மற்றும் துருக்கி வழியாக இணைக்கும் போக்குவரத்து மற்றும் ஆற்றல் வலைப்பின்னலான 'நான்கு கடல்கள் திட்டம்' என்பது இதில் முன்வைக்கப்பட்டுள்ள மிகவும் லட்சியமிக்க முன்மொழிவுகளில் ஒன்றாகும்.
2026ம் ஆண்டு ஏப்ரலில், துருக்கியின் எரிசக்தி அமைச்சர் அல்பார்ஸ்லான் பைராக்தார், அந்தப் பரந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, கத்தார் மற்றும் துருக்கியை அரேபிய தீபகற்பம் வழியாக இணைக்கும், நீண்டகாலமாக முடங்கிக் கிடந்த 2009 ஆம் ஆண்டின் எரிவாயுக் குழாய்வழிப் பாதை முன்மொழிவை மீண்டும் செயல்படுத்துவது குறித்துப் பேசினார்.
இராக்கிய எண்ணெயை ஜோர்டானின் செங்கடல் துறைமுகமான அகபாவுக்கு கொண்டு செல்லும் திட்டமான பஸ்ரா-அகபா குழாய்வழிப் பாதைக்கும் மீண்டும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்தத் திட்டம் முதன்முதலில் 1983ம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. இருப்பினும், அரசியல் கருத்து வேறுபாடுகள் மற்றும் பொருளாதார சவால்கள் காரணமாக இதன் வளர்ச்சி தொடர்ச்சியாக தாமதமாகி வருகிறது.
இத்தகைய முன்னெடுப்புகள் வளைகுடா பகுதியில் ஏற்படும் தடங்கல்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் என்றும், உலகளாவிய எரிசக்திப் பரிமாற்றங்கள் மீது இரானுக்கு இருக்கும் செல்வாக்கை பலவீனப்படுத்தும் என்றும் இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், சிங்கப்பூரின் எஸ். ராஜரத்தினம் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் மூத்த ஆய்வாளரான ஹுஸேர் எசெக்கியேல் சுல்ஹிஷாம், இந்தத் திட்டங்கள் புதிய வடிவிலான சார்புநிலைகளை மட்டுமே உருவாக்கக்கூடும் என்று தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் எச்சரித்துள்ளார்.
"இந்த வழித்தடங்கள், எரிசக்தியை உற்பத்தி செய்யாத மற்றும் கடந்து செல்லும் நாடுகளுக்கு எரிசக்தி வர்த்தகத்தின் மீது அதிகக் கட்டுப்பாட்டை வழங்குகின்றன" என்று அவர் எழுதுகிறார்.
இதன் விளைவாக துருக்கி போன்ற நாடுகள் அதிக செல்வாக்கைப் பெறக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.
பாதுகாப்பும் ஒரு முக்கிய தடையாகவே உள்ளது. இராக் அல்லது சிரியாவைக் கடந்து செல்லும் எந்தவொரு வழியும் பிராந்திய நிலைத்தன்மை, ஆயுதக் குழுக்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களின் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று சுல்ஹிஷாம் கூறுகிறார்.
ஹோர்மூஸ் நீரிணைக்கு அப்பால்
வளைகுடா பகுதி ஏற்றுமதியாளர்கள் ஹோர்மூஸ் நீரிணையின் மீதான தங்களது சார்பை குறைத்தாலும்கூட, அந்தப் பிராந்தியத்தின் வழியாக ஆற்றலைக் கொண்டு செல்வதற்கான மாற்று வழிகளுடன் தொடர்புடைய உலக அரசியல் அபாயங்களிலிருந்து அவர்கள் தப்பிப்பது சாத்தியமில்லை.
இதற்கு ஒரு உதாரணம் எகிப்தின் சுமெட் குழாய்வழிப் பாதையாகும்.
இது செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கிறது, மேலும் சூயஸ் கால்வாயைத் தவிர்க்கும் வகையில் ஐரோப்பாவுக்கான ஒரு வழியை வழங்குகிறது. இந்தக் குழாய்வழிப் பாதையால் நாளொன்றுக்கு 2.5 முதல் 2.8 மில்லியன் பேரல் எண்ணெயைக் கொண்டு செல்ல முடியும்.
இருப்பினும், செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது சமீபத்தில் ஹூதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்கள், ஒட்டுமொத்த சூயஸ் வழித்தடத்தின் பாதிப்புக்குள்ளாகும் தன்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன.
மோதல் தொடங்கியதிலிருந்து சுமெட் குழாய்வழிப் பாதை மூலமான எண்ணெய் போக்குவரத்துக்கு கணிசமாக அதிகரித்திருந்தாலும், அதன் ஒப்பீட்டளவில் குறைந்த கொள்ளளவு இன்னும் ஐரோப்பாவுக்கான எண்ணெய் விநியோகத்தில் "ஒரு முக்கிய கட்டுப்பாடாகவே உள்ளது" என்று ராபர்ட்ஸ் கூறுகிறார்.
அமெரிக்கா தனது "ஆக்கிரமிப்புச் செயல்களை" நிறுத்தும் வரை ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று புதன்கிழமை இரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும், அந்தப் பிராந்தியம் முழுவதிலும் உள்ள பிற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி வழிகளையும் முடக்கப் போவதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
ஹோர்மூஸ் மீதான சார்பைக் குறைத்தல்
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் என்ற சிந்தனைக் குழுவின் மத்திய கிழக்கு விவகார நிபுணரான முனைவர் ஹெச்.ஏ. ஹெல்லியர், ஹோர்மூஸ் நீரிணையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதில் வளைகுடா நாடுகள் உறுதியாக உள்ளதாகக் கூறுகிறார்.
"வளைகுடா அரபு நாடுகள் ஹோர்மூஸ் நீரிணையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பாதிப்புகளையும் முடிந்தவரை ஈடுகட்டவே முயற்சி செய்யப் போகின்றன" என்கிறார் முனைவர் எச்.ஏ. ஹெல்லியர்.
கடந்த காலத்தைப் போல இந்த நீரிணையை இனி நம்பியிருக்க முடியாது என்பதால், பிராந்திய அரசாங்கங்கள் மாற்று ஏற்றுமதி வழிகளைத் தொடர்ந்து உருவாக்கும் என்றே ஹெல்லியர் கருதுகிறார். இருப்பினும், இந்த மாற்று வழிகள் ஹோர்மூஸை முழுமையாக மாற்றிவிடும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
"இது ஒரு பாதைக்கு மாற்றாக மற்றொரு பாதையை முழுமையாக மாற்றிக் கொள்ளும் ஒரு தெளிவான பரிமாற்றமாக இருக்கப் போவதில்லை" என அவர் குறிப்பிடுகிறார்.
இருப்பினும், எந்தவொரு ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய சக்தியையும் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக நாடுகள் முடிந்தவரை மாற்று வழிகளைத் தேடுவதால், இந்த நீரிணை "முன்பை விட மிகவும் குறைவான மதிப்பையே பெறும், கூடுதல் மதிப்பை அல்ல" என்று ஹெல்லியர் கருதுகிறார்.
"இந்தப் பிராந்தியம் இஸ்ரேலின் மேலாதிக்கத்தை விரும்பவில்லை, அதே நேரத்தில் இரானின் ஆதிக்கத்திலும் அதற்கு ஆர்வம் இல்லை" என ஹெல்லியர் குறிப்பிடுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு