You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானுடன் நேரடியாக போரிட செளதி விரும்பாதது ஏன்? டிரோன்களை 10 மடங்கு விலையில் வாங்குவதன் பின்னணி
கடந்த மாதம் தைவானில் இருந்து டிரோன்களை அதிக அளவில் வாங்கிய நாடாக செளதி அரேபியா உருவெடுத்துள்ளது.
அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, செளதி அரேபியா சாதனை அளவில் டிரோன்களை வாங்கியதுடன், பிற நாடுகளை விட ஒவ்வொரு டிரோனுக்கும் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலையும் செலுத்தியுள்ளது.
கடந்த வாரம் தைவான் நிதியமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, செளதி அரேபியா 4 கோடியே 72 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான டிரோன்களை வாங்கியுள்ளது.
ஜூன் 2023 முதல் கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி, ஒரு மாதத்தில் ஒரு நாடு மேற்கொண்ட மிகப்பெரிய டிரோன் கொள்முதல் இதுவாகும்.
ப்ளூம்பெர்க் தனது செய்தியில், "செளதி அரேபியா இந்த டிரோன்களை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தவுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவற்றின் சராசரி எடை 7 முதல் 15 கிலோகிராம் வரை இருக்கும். இவை தொழில்துறை பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதுடன், ராணுவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படக்கூடும்" என்று குறிப்பிட்டுள்ளது.
தரவுகளின்படி, செளதி அரேபியா 3,260 டிரோன்களை வாங்குவதற்காக ஒவ்வொரு டிரோனுக்கும் சராசரியாக 14,472 அமெரிக்க டாலர் செலுத்தியுள்ளது. அதே வகையைச் சேர்ந்த டிரோன்கள் பிற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டபோது, அவற்றின் சராசரி விலை ஒவ்வொரு டிரோனுக்கும் 1,464 அமெரிக்க டாலராக இருந்தது.
இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான முரண்பாடு பல தசாப்தங்களாக நீடித்து வந்தாலும், இரானின் தாக்குதல்களிலிருந்து செளதி அரேபியா பெரும்பாலும் பாதுகாப்பாகவே இருந்து வந்தது.
ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியபோது, இந்த நிலைமை முற்றிலும் மாறியது.
தங்கள் நாடு மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இரான்,வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளை நோக்கி பெரும்பாலான ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. இதில், அதிகளவிலான தாக்குதல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எதிர்கொண்டது. செளதி அரேபியாவும் தாக்குதலுக்கு இலக்கானது.
இந்தப் போரின் அதிர்ச்சியும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழக்கூடும் என்ற அச்சமும், குறிப்பாக செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து, பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து உருவாக்கிய பாதுகாப்பு உணர்வுக்கு சவாலாக அமைந்துள்ளது. எண்ணெய் சார்பைக் குறைத்து பொருளாதாரத்தைப் பல்வகைப்படுத்தும் அவர்களின் முயற்சிகளும் இதனால் புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளன.
அமெரிக்கா மீதான அதிகரிக்கும் அவநம்பிக்கை
வளைகுடா நாடுகள் தற்போது ஒரு முரண்பாடான சூழலை எதிர்கொள்கின்றன. அவற்றின் பாதுகாப்பிற்காக அவை அமெரிக்காவைச் சார்ந்திருக்கின்றன. தற்போதைய நிலையில் அதற்கு மாற்றாக சிறந்த வேறு வழியும் அவற்றிடம் இல்லை.
ஆனால் மறுபுறம், இந்தப் போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட நடவடிக்கைகள் வளைகுடா நாடுகளுக்கு புதிய பாதுகாப்புச் சவால்களை உருவாக்கியுள்ளன.
போரின் போது செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்கா தவறிவிட்டது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வழங்கப்படும் உதவிக்கு வளைகுடா நாடுகள் பணம் செலுத்த வேண்டும் என்று விரும்புவதாக திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர் அக்கருத்தில் இருந்து பின்வாங்கினார்.
ஜூலை 10ஆம் தேதி, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளிடையே அவநம்பிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அவர் தனது பதிவில், "கூட்டாளி நாடுகளுடனான உறவுகள் ஒருபோதும் தர்மம் அல்லது உதவிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை. நமது பாதுகாப்பையும் வளமையையும் மேம்படுத்தும் நீண்டகால நலன்களை அடிப்படையாகக் கொண்டே அவை கட்டமைக்கப்பட்டன. கூட்டாளி நாடுகள் அமெரிக்காவின் மீது நம்பிக்கையை இழக்கத் தொடங்கும்போது, அவை வெறுமனே அமெரிக்கா தனது கொள்கையை மாற்றும் வரை காத்திருக்காது. புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றன. புதிய கூட்டாண்மைகளை உருவாக்குகின்றன. மாற்று தலைமைகளைத் தேடுகின்றன. ஒருமுறை இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டால், அவற்றை மாற்றுவது எளிதானது அல்ல," என்று குறிப்பிட்டார்.
மேலும், "நமது போட்டியாளர்களும் எதிரிகளும் இதை நன்கு புரிந்துகொண்டுள்ளனர். ரஷ்யா நீண்டகாலமாக அட்லாண்டிக் கடல் இருபுற நாடுகளுக்கிடையேயான கூட்டணியை பலவீனப்படுத்த முயன்று வருகிறது. ஜனநாயக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் குறையும் ஒவ்வொரு தருணமும் சீனாவுக்கு சாதகமாக அமைகிறது. அமெரிக்காவின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்வியும், பலவீனமான மற்றும் பிளவுபட்ட மேற்குலகை விரும்பும் சக்திகளுக்கு ஒரு வாய்ப்பாக மாறுகிறது," என்றும் பிளிங்கன் எழுதியுள்ளார்.
செளதி அரேபியாவின் பார்வையில் இரான் போர்
அமெரிக்காவின் முன்னாள் செளதி அரேபிய தூதரான மைக்கேல் ராட்னி, உத்தி மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் அமைப்புக்காக எழுதிய கட்டுரையில், இரானுடனான போர் குறித்து செளதி அரேபியாவின் நிலைப்பாடு மிகவும் முரண்பாடானதாக இருப்பதாகக் கூறுகிறார். ஒருபுறம் அது இரான் மீது கோபமாக உள்ளது; மறுபுறம் அதனை மிகவும் எச்சரிக்கையுடனும் அணுகுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
செளதி அரேபியாவின் சிந்தனையை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது மார்ச் 9 அன்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை என அவர் குறிப்பிடுகிறார்.
கோபத்தை வெளிப்படுத்திய அதேவேளையில் சமநிலையுடனும் இருந்த அந்த அறிக்கை, செளதி அரேபியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் மீது இரான் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்தது.
மேலும், தனது பாதுகாப்பைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க செளதி அரேபியாவுக்கு உரிமை உண்டு என்று வலியுறுத்தியதோடு, இரானின் தாக்குதல்கள் தொடர்ந்தால் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. எனினும், இரானுக்கு எதிராக நேரடி ராணுவ நடவடிக்கை எடுப்பதாக அந்த அறிக்கை வெளிப்படையாக கூறவில்லை.
''வளைகுடா நாடுகளுடன் ஆலோசிக்காமல் இந்தப் போரைத் தொடங்கிய அமெரிக்கா, தாங்கள் நேரடியாக இந்த மோதலில் ஈடுபட்டால் தாங்களை முழுமையாகப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை செளதி அரேபியாவுக்கு இல்லை. மேலும், ஒரு கட்டத்தில் அமெரிக்கா தனது இலக்கை அடைந்துவிட்டதாக அறிவித்து விலகிவிடும். அதன் விளைவுகளை செளதி அரேபியாவே தனியாகச் சமாளிக்க வேண்டியிருக்கும் என்ற அச்சமும் அதற்கு உள்ளது," என்று மைக்கேல் ராட்னி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், "இரானின் ஆதரவு படைகள் பலவீனமடைந்தும், அதன் ஏவுகணை மற்றும் அணுசக்தித் திறன்கள் பாதிக்கப்பட்டும் நிலையை செளதி அரேபியா நிச்சயமாக விரும்பும். ஆனால், போர் மட்டுமே இரான் எழுப்பும் சவால்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற நம்பிக்கை அதற்கு இல்லை. அதேசமயம், இரான் குழப்பநிலைக்குள் தள்ளப்பட்டால் அகதிகள் நெருக்கடி, கடும்போக்கு சிந்தனைகளின் பரவல் போன்ற புதிய பிரச்சினைகள் உருவாகலாம் என்ற அச்சமும் அதற்கு உள்ளது," என்கிறார்.
இந்தப் போர் செளதி அரேபியாவை அமெரிக்காவிலிருந்து விலக்கிவிடும் என்ற கருத்தை அவரது கட்டுரை நிராகரிக்கிறது.
பல தசாப்தங்களாக செளதி அரேபியாவின் ராணுவ அமைப்பு, ஆயுதங்கள், பயிற்சி மற்றும் ராணுவ ஆதரவு ஆகியவை அமெரிக்காவைச் சார்ந்தே இருந்து வருகின்றன. இந்த ஏற்பாட்டை சீனாவோ அல்லது பாகிஸ்தானோ எளிதில் மாற்ற முடியாது என்றும் அந்த கட்டுரை கூறுகிறது.
''செளதி அரேபியா குழப்பத்தை விட நிலைத்தன்மையையே விரும்புகிறது. இரானின் பலவீனம் தனக்குப் பயனளிக்கும் என்று கருதும் அளவுக்கு அதற்கு இரான் மீது அதிருப்தி இருக்கிறது. ஆனால், பொருளாதார மற்றும் ராணுவ அபாயங்கள், அதோடு அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த நிச்சயமின்மை ஆகிய காரணங்களால், நேரடியாகப் போரில் ஈடுபடும் அபாயத்தை அது ஏற்கத் தயங்குகிறது." என்று அவர் வாதிடுகிறார்.
செளதி அரேபியாவின் குழப்பம்
இரானின் தாக்குதல்களைத் தடுக்கத் தங்களால் முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலேயே செளதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. போர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே, நாட்டை நோக்கி வந்த டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செளதி பாதுகாப்பு அமைச்சகமும் கிட்டத்தட்ட தினமும் தகவல் வெளியிட்டு வருகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, 2026 மார்ச் 3 முதல் ஏப்ரல் 5 வரை சுமார் 900 வான்வழி அச்சுறுத்தல்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், தாக்குதலில் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்தது. யான்புவில் உள்ள மற்றொரு சுத்திகரிப்பு நிலையமும் தாக்கப்பட்டது. மேலும், பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தில் இருந்த அமெரிக்க விமானப்படையின் பல விமானங்கள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன. அவற்றில் ஒரு போயிங் E-3 சென்ட்ரி விமானமும், குறைந்தபட்சம் ஒரு KC-135 ஸ்ட்ராடோடேங்கர் விமானமும் அடங்கும்.
இந்தச் சம்பவங்கள், அமெரிக்காவுடனான பல தசாப்த கால பாதுகாப்புக் கூட்டணியின் நம்பகத்தன்மை குறித்து செளதி அரேபியாவில் கவலைகளை எழுப்பியுள்ளன. அமெரிக்கா தலைமையிலான வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவி இரானின் டிரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளன. இதுவே அந்தக் கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தப் போரின் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று, தனது பாதுகாப்புக் கூட்டணிகளைப் பல்வகைப்படுத்தும் கொள்கையை செளதி அரேபியா மேலும் வேகப்படுத்தியிருப்பதாகும்.
இந்தப் பாதுகாப்புக் கூட்டணிகளில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் பாகிஸ்தானுடனான உறவில்தான் காணப்படுகிறது.
2026 ஏப்ரல் 11 அன்று, தஹ்ரானில் உள்ள கிங் அப்துல்அசீஸ் விமானப்படைத் தளத்திற்கு பாகிஸ்தான் ராணுவப் படைகள் வந்தடைந்ததாக செளதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. 2025 செப்டம்பரில் கையெழுத்தான செளதி–பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்ற முதல் அதிகாரப்பூர்வ ராணுவ நிலைநிறுத்தல் இதுவாகும்.
தகவல்களின்படி, இந்தப் படைநிறுத்தலில் சுமார் 13,000 பாகிஸ்தான் வீரர்களும், பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்களும் இடம்பெற்றுள்ளன. 1991-ஆம் ஆண்டு வளைகுடாப் போருக்குப் பிறகு, செளதி அரேபியாவில் பாகிஸ்தான் மேற்கொண்ட மிகப் பெரிய ராணுவ நிலைநிறுத்தலாக இது கருதப்படுகிறது.
இதற்கிடையில், யுக்ரேனும் செளதி அரேபியாவின் தொழில்நுட்பப் பாதுகாப்புக் கூட்டாளியாக உருவெடுத்துள்ளது.
2026 மார்ச் 27 அன்று, ஜெட்டாவில் நடைபெற்ற சந்திப்பில், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு